பாஸ்போர்ட்டில் இந்தி திணிப்பு - ஸ்டாலின் கண்டனம்

Stalin-speaks-against-hindi-in-passport

இந்தியில் பாஸ்போர்ட் என்ற அறிவிப்பை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


Advertisement

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இனி வரும் காலங்களில் பாஸ்போர்ட் இந்தியிலும் ஆங்கிலத்திலும் வழங்கப்படும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பாஸ்போர்ட் சட்டத்தின் 50 வது ஆண்டு விழாவில் பேசியிருப்பதற்கு திமுக சார்பில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தி பேசாத மாநிலங்களில் வாழும் மக்களின் நலனில் எவ்வித அக்கறையும் இல்லாமல் செயல்படும் மத்திய பாஜக அரசு, இந்தி திணிப்பில் எல்லையில்லா ஆர்வம் காட்டுவது வேதனைக்குரியது. ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியை ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஆக்கத் துடிப்பது, மத்திய அரசு அலுவலகங்களில் திட்டமிட்டு நடக்கும் இந்தி திணிப்பு, மத்திய அரசு பணியில் சேர விரும்புவோருக்கு இந்தி கட்டாயம், தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் இந்திக்கு முதலிடம் என எண்ணற்ற இந்தி திணிப்பு நடவடிக்கைகளை, மத்தியில் உள்ள பாஜக அரசின் ஒவ்வொரு இலாகாவிலும் உள்ள அமைச்சர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு இடைவிடாமல் செயல்பட்டு வருகிறார்கள்.

இந்தி திணிப்பில் காட்டும் வேகத்தை, தொன்மை மிக்க செம்மொழியான தமிழை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக அறிவிப்பதிலும், மத்திய அரசின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக அறிவிப்பதிலும் மத்திய அரசு காட்டவில்லை. உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்று திமுக அரசின் சார்பில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, கருணாநிதி அதனை நேரடியாக குடியரசுத் தலைவரிடம் அளித்த பிறகும், ஆளுநர் மூலமாக மத்திய அரசுக்கு அனுப்பிய பிறகும் கூட, அந்தத் தீர்மானத்தின் மீது இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழ் மொழியை புறக்கணித்து, இந்தி திணிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் மத்திய பாஜக அரசுக்கு இந்தி பேசாத மாநில மக்களையும் உள்ளடக்கிய ஒரு வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் ஆர்வம் ஏதுமில்லை என்பதை இதுபோன்ற செயல்கள் பட்டவர்த்தனமாக படம்பிடித்துக் காட்டுகின்றன. தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவதும், தமிழக உரிமைகள் காலில் போட்டு மிதிக்கப்படுவதும், தமிழகம் போன்ற தேசப்பற்று மிக்க மக்கள் வாழும் மாநிலத்தில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. ஆகவே, இந்தியில் பாஸ்போர்ட் என்ற அறிவிப்பை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்'' என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Advertisement

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement