[X] Close

“படிப்பதற்கு வயதேது” – 84 வயது பள்ளிச் சிறுவன் ‘மெருகே’

Subscribe
84-Years-Old-school-student--Maruge----Teachers-day-special-Story

”பசிக்கும் ஒருவனுக்கு மீன் சாப்பிடக் கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்றுக் கொடுங்கள்” என்கிறது உலகின் தொன்மையான ஒரு கதை. கற்பி ஒன்று சேர் புரட்சி செய் என்றார் அம்பேத்கர். ஒருவருக்கு கல்வி மறுக்கப்படுதல் என்பது நீதி மறுக்கப்படுதலாகும். கல்வி என்பது மானுட உரிமை. மறுக்கக் கூடாத நீதி.


Advertisement

கென்ய விடுதலைக்காக போராடி அதில் தன் குடும்பத்தையே இழந்த மெரூகே  எனும் 84 வயது முதியவர், தனது கிராம தொடக்கப் பள்ளியில் சேர்ந்து கல்விகற்க விரும்பினார். புதிய கென்ய அரசும் கல்வித்துறையும் அந்தச் சூழலை எப்படி எதிர் கொண்டது என்ற உண்மைக் கதை தான் “தி ஃபர்ஸ்ட் கிரேடர் (The First Grader - 2010)

கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யா, ப்ரிட்டீஷ் ஆதிக்கத்திலிருந்து டிசம்பர் 12, 1963’ல் விடுதலை பெற்றது. கென்ய விடுதலை போரில் பெரும் பங்காற்றிய  ”மவ் மவ்” என்ற கிளர்ச்சியாளர்கள் அமைப்பில் இணைந்து போராடிய மெரூகே தான் இவ் உண்மை கதையின் நாயகன்.


Advertisement

2003-ஆம் அண்டு கென்ய வானொலி மூலம் ”அனைவருக்கும் இலவச தொடக்கக் கல்வி” என்ற அறிவிப்பை கேட்டு பலரும் தங்கள் குழந்தைகளுடன் கிராம கல்வி அதிகாரிகளை சந்தித்து விண்ணப்பிக்கிறார்கள். அதில் 84 வயதான மெரூகே தன்னையும் பள்ளியில் சேர்த்துக் கொள்ளும்படி கேட்கிறார். தான் எழுதப் படிக்க ஆசைப்படுவதாகவும் தனக்கு சுதந்திர கென்ய அரசிடம் இருந்து ஒரு கடிதம் வந்திருப்பதாகவும் அதை தானே வாசிக்க ஆசைப்படுவதாகவும் சொல்கிறார்.

ஆனால் பள்ளி ஆசிரியை  ஜானே  மற்றும் உடன் பணிபுரியும் அல்பெர்ட்  இருவரும் ”இது குழந்தைகளுக்கான தொடக்கப்பள்ளி இதில் நீங்கள் சேர அனுமதி இல்லை” என விளக்கம் கொடுக்கிறார்கள். அதை ஏற்க மறுக்கும் பெரியவர் ”இல்லை ரேடியோவில் அனைவருக்கும் கல்வி, என்று தான் சொன்னார்கள்” என வாதிடுகிறார். ”அப்படியா சரி அப்படியென்றால் நோட்டு, புத்தகம், பென்சில், சீருடை இவற்றுடன் வாருங்கள் என கேலியாக சொல்லி அனுப்பிவிடுகிறார்கள். ஆனால் மெரூகே தன் கால்நடைகளை விற்று பள்ளியில் சேருவதற்கான ஆயத்த பொருட்களுடன் மீண்டும் பள்ளி வாசலை அடைகிறார். அவர் ஒரு குழந்தை போல சீருடையும் அரைக்கால் டவுசரும் அணிந்து வந்திருந்தார். மெரூகே’வின் ஆர்வத்தைக் கண்ட ஆசிரியை ஜானே அவரை புன்னகையுடனும் பள்ளியில் சேர்த்துக் கொள்கிறார். மெரூகேவும் ஆர்வமுடன் குழந்தைகளுடன் கல்விபயில துவங்குகிறார்.


Advertisement

84 வயது முதியவர் துவக்கப்பள்ளியில் படிப்பதை அறிந்த ஊடகங்கள் பள்ளியை முற்றுகையிட மெரூகே பத்திரிக்கையாளர் ஒருவரின் கேள்விக்கு “the power is in the pen” என பதில் சொல்கிறார். ஆசிரியை ஜானே தனக்கு ஊடக வெளிச்சமும் புகழும் கிடைக்கிறது என்பதற்காவே மெரூகே விற்கு ஆதரவளிக்கிறார் என்றெண்ணி சிலருக்கு ஜானே மீது காழ்புணர்ச்சி உண்டாகிறது. ஆசிரியைக்கு போனில் சிலர் மிரட்டல்களும் விடுக்கின்றனர் ஆயினும் நம் நாட்டின் விடுதலைக்காக போராடி தன் குடும்பத்தையே இழந்த போராளி மெரூகே-வின் ஆசையை நிறைவேற்றுவது நமது கடமை என்று எதிர்ப்புகளை மீறி முன்நகர்கிறார் ஆசிரியை ஜானே.

84 வயது முதியவர் துவக்கப்பளியில் பயில முடியாது என்று கல்வித்துறை முடிவு செய்கிறது. ஆனால் ஆசிரியை ”மெரூகே இனி இவர் மாணவர் அல்ல எனது உதவியாளர்” என்று அப்பள்ளியில் அவர் தொடர்ந்து ப்ரவேசம் செய்ய வாய்ப்பளிக்கிறார். மெரூகே மாணவராக மட்டுமல்லாமல் அவ்வப்போது குழந்தைகளுக்கு தன் சுதந்திரப்போராட்ட அனுபவம் பற்றியும் “மவ் மவ்” இயக்கம் பற்றியும் சுதந்திரம் என்ற சொல்லையும் கற்பிக்கிறார். எளிய முறையில் பயிலும் சில அனுபவ யுத்திகளையும் கூட குழந்தைகளுக்கு தன் வாழ்வியல் அனுபவத்தின் வாயிலாக கொடுக்கிறார்.

துரதிஷ்டவசமாக 300 மைல்களுக்கு அப்பால் இருக்கும் வேறோரு பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டு மீண்டும் இதே பள்ளிக்கு திரும்பும் ஆசிரியை ஜானேயிடம் மெரூகே குறிப்பிட்ட அக்கடிதத்தை கொண்டுவந்து நீங்களே படித்துக் கூறுங்கள் என்று சொல்கிறார். அதில் மெரூகே சுதந்திரத்திற்காக சிறையில் இருந்த போது அவருக்களித்த கைதி எண் குறிப்பிடப்பட்டிருந்தது. அவரது இழப்புகளுக்கு புதிய கென்ய அரசு நஷ்ட ஈடுகளை வழங்குவதாகவும். அவரது தியாகத்தை போற்றி நாடு தனது நன்றிகளையும் பாராட்டுகளையும் சொல்வதாகவும் எழுதியிருந்தது. அது புதிய கென்ய அரசின் ஜனாதிபதியிடமிருந்து வந்த கடிதம்.

கல்வியின் முக்கியத்துவம் பற்றி பேசும் இத்திரைப்படத்தின் நிஜ நாயகன் மெரூகே - 84 வயதில் துவக்கப்பள்ளி சென்றவர் - என்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தார். 1920-ல் கென்யாவில் ஆதி குடியாக பிறந்த மெரூகே தனது 89-ஆம் வயதில் (August 14, 2009) வயிற்றுப் புற்றுநோயால் நைரோபியில் உள்ள தேசிய மருத்துவமனையில் காலமானார்.

Ann Peacock  திரைக்கதை எழுதி Justin Chadwick இயக்கிய இத்திரைப்படத்தை BBC மற்றும் UK Film Council இணைந்து தயாரித்தனர். National Geographic Entertainment நிறுவனத்தால் 2010-ல் வெளியிடப்பட்ட இத்திரைப்படம் $714,722 வசூல் வேட்டையாடியது. படத்தில் மெரூகே கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பவர் ஓலிவர் லிடொண்டோ. இவர் பிபிசி மற்றும் தற்போதைய கென்ய ப்ராட்கேஸ்டிங் கார்ப்பரேசனாக இருக்கும் வாய்ஸ் ஆஃப் கென்யாவில் மூத்த பத்திரிக்கையாளராக இருந்தவர்.

”உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்

கல்லார் அறிவிலா தார்”  

என்பதை உணர்ந்திருந்த மெரூகே ஒரு கென்ய காமராஜர். வாழ்க்கை பிழை எனில் கல்வியே திருத்தம். ஒருவனது வாழ்வில் மறுக்கப்பட்ட யாவையும் கல்வி கொண்டு வந்து கொடுக்கும். இருண்ட வாழ்வில் கல்வியே வெளிச்சம் அந்த ஜோதியை நமது கைகள் ஏந்தக் கொடுத்து அழகுபார்க்கும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள்.

(சுப்ரமணி)

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close