ஹெல்மெட் கட்டாய வழக்கு - அரசை எச்சரித்த உயர்நீதிமன்றம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் செல்வதை அரசு இனியும் தடுக்காவிட்டால், வழக்கறிஞர் ஆணையரை நியமித்து உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 


Advertisement

வாகனத்தில் செல்வோருக்கு தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் கட்டாயம் என்ற மோட்டார் வாகன விதிகளை கண்டிப்புடன் அமல்படுத்த கோரி கே.கே.ராஜேந்திரன் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வு விசாரித்து வருகிறது.


Advertisement

இந்த வழக்கில் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதத்தை அதிகரிப்பது தொடர்பான அரசாணையை அமல்படுத்தவும், மோட்டார் வாகன விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

இந்நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக போக்குவரத்து ஆணையர், 70 சதவீதத்துக்கு அதிகமான இருசக்கர வாகன விபத்துக்கள் உயிரிழப்பில் முடிவதாக அறிக்கை தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து வாகன சோதனை பணியில் தலைமை காவலர்களும் ஈடுபட்டு வருவதாகவும், சி.சி.டி.வி மூலம் கண்கானித்து அபராதத்துடன் கூடிய கடும் நடவடிக்கை எடுக்க உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


Advertisement

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், 2007ஆம் ஆண்டு ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கப்பட்ட பிறகும், சாலை விபத்துகளால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை குறைவதற்கு பதிலாக அதிகமாகி வருவது கவலையளிக்கிறது என வேதனை தெரிவித்தனர். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருப்பவர்கள் யாரும் ஹெல்மெட் அணிவதில்லை என்றும், இனியும் அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கத் தவறினால் நீதிமன்றமே வழக்கறிஞர் ஆணையரை நியமித்து தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க நேரிடும் என எச்சரித்தனர். 

தமிழக சுகாதாரத்துறையை வழக்கில் இணைத்த நீதிபதிகள், இருசக்கர வாகன விபத்துக்களில் தலையில் அடிபட்டு இறந்தவர்கள் மற்றும் காயமடைந்து சிகிச்சை பெற்றவர்கள் எத்தனை பேர் என்பன போன்ற விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement