[X] Close >

‘அரசியல் ஆல் ரவுண்டர்’ பிரசாந்த் கிஷோருடன் கைகோர்த்த மம்தா?

Mamata-Banerjee-Signs-On-Prashant-Kishor-Who-Helped-Jagan-Reddy-s-Big-Win

ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டியின் பிரச்சார வியூகத்தை வடிவமைத்த அரசியல் நிபுணர் பிரசாந்த் கிஷோரை, மேற்குவங்க சட்டசபை தேர்தலுக்காக ஆலோசகராக மம்தா பானர்ஜி நியமனம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

          

அரசியல் தற்போது மிகவும் மாறிவிட்டது. தேர்தலில் ஒரு கட்சியின் வெற்றிக்காக பிரச்சாரம் உள்ளிட்ட பல்வேறு வியூகங்களை அக்கட்சியில் இருக்கும் ஒரு குழுவே தீவிரமாக செயல்படுத்தும். மூத்த தலைவர்கள் யாராவது அதில் கிங் மேக்கராக இருப்பார்கள். ஆனால், தற்போது ஒரு கட்சி தன்னுடைய வெற்றிக்காக, கட்சி சாராத ஒரு குழுவிடம் பணிகளை ஒப்படைக்கும் புதிய கலாச்சாரம் உருவாகியுள்ளது. அந்த வகையில் சமீபகாலமாக இந்திய அரசியல் மிகப்பெரிய வெற்றிகளை சாதித்து வருபவர் அரசியல் நிபுணர் பிரசாந்த் கிஷோர். இவர் மீது இப்போது பல கட்சி தலைமையின் பார்வை விழுந்துள்ளது. 


Advertisement

யார் இந்த பிரசாந்த் கிஷோர்

தொடக்கத்தில் பொதுசுகாதார துறையில் பயிற்சி பெற்ற கிஷோர், ஐநாவில் 8 ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர், அரசியலில் வெற்றிக்கான வியூகங்களை வகுக்கும் நிபுணராக பணியாற்ற தொடங்கினார். காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளுக்கும் இவர் பணியாற்றியுள்ளார். 2011ஆம் நரேந்திர மோடிக்காக குஜராத் மாநில தேர்தலில் பணியாற்றினார். 

        


Advertisement

பின்னர், 2014 மக்களவைத் தேர்தலிலும் பாஜகவுக்காக பணியாற்றி பிரம்மாண்ட வெற்றியை பெற்றுத்தந்தார். இவர், பாஜகவுக்கான தேர்தல் விளம்பரங்களில் பல்வேறு புதிய யுக்திகளை புகுத்தினார். அது, மோடியை இந்தியா முழுவதும் 2014ம் ஆண்டு பேச வைத்தது.  அந்த அளவிற்கு நரேந்திர மோடி பற்றிய விளம்பரம் கவனத்தை ஈர்த்திருந்தது. அது பெரும்பாலான தரப்பினரை கவரும் வகையில் இருந்ததால்தான் மோடியும் மக்கள் மத்தியில் சென்றடைந்தார்.

பின்னர், பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையில் மெகா கூட்டணி அமைய பிரசாந்த் பணியாற்றினார். ஐக்கிய ஜனதா தளத்தில் இவருக்கு தேசிய துணைத்தலைவர் பொறுப்பும் வழங்கப்பட்டது. அந்தக் கூட்டணி பாஜகவுக்கு எதிராக கட்டமைக்கப்பட்டது. இருப்பினும், நிதிஷ்குமார் அந்தக் கூட்டணியை களைத்துவிட்டு பாஜகவுடன் கைகோர்த்தார். பஞ்சாப்பில் 2017ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வகுத்துக் கொடுத்த யுக்திகளின் உதவியுடன்தான் காங்கிரஸ் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. 

         

ஜெகன் மோகன் ரெட்டி வெற்றிக்கு பின்னால்...

அந்த வரிசையில், ஆந்திர சட்டப்பேரவை தேர்தலுக்காக 2 ஆண்டுகளுக்கு முன்பே பிரசாந்த் கிஷோரை, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆலோசகராக அக்கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி நியமித்தார். அதைத் தொடர்ந்து பிரசாந்த் கிஷோரின் இந்திய அரசியல் செயற்குழுவின் 400 ஊழியர்கள் ஆந்திராவில் முகாமிட்டு வார்டு அளவில் தேர்தல் கள ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். அந்த ஆய்வுகளின் அடிப்படையில் பிரசாந்த் கிஷோர் வகுத்து கொடுத்த பரப்புரை வியூகத்தை ஜெகன் மோகன் ரெட்டி பின்பற்றினார். அதன்படியே பிரஜா சங்கல்ப யாத்ரா என்ற பேரணியை நடத்தி 15 மாதங்களில் 3 ஆயிரம் கிலோ மீட்டர் நடைப்பயணம் மேற்கொண்டு இரண்டரை கோடி மக்களை ஜெகன் சந்தித்தார்.

            

பிரசாந்த் கிஷோர் வகுத்து கொடுத்த வியூகங்கள் ஜெகன் மோகன் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 151 தொகுதிகளை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வென்றுள்ளது. இதன் மூலம் ஆந்திர பிரதேசத்தின் முதலமைச்சராக முதன்முறையாக பதவியேற்றார் ஜெகன்மோகன் ரெட்டி. 

கிஷோருடன் கைகோர்த்த மம்தா?

இந்நிலையில், தொடர் வெற்றிகளை அரசியல் தலைவர்களுக்கு பெற்றுத் தரும் அரசியல் நிபுணர் பிரசாந்த் கிஷோரை மம்தா பானர்ஜி தன்னுடைய தேர்தல் பணிகளுக்கு நியமனம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மேற்குவங்கத்தில் பாஜக 18 தொகுதிகளில் வெற்றி பெற்று மம்தா பானர்ஜிக்கு அதிர்ச்சியை கொடுத்தது. மாநிலத்தில் வாக்கு சதவீதமும் திரிணாமூல் காங்கிரஸ் அளவிற்கு பா.ஜனதாவிற்கும் உயர்ந்துள்ளது. இதனையடுத்து, 2021இல் மேற்குவங்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. அந்தத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி இருக்கும் என்று கூறப்படுகிறது.

          

அதனால், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் மம்தா பானர்ஜி உள்ளார். அதற்காக, அரசியல் வித்தகர் பிரசாந்த் கிஷோரை அழைத்து அவர் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்தச் சந்திப்பின் போது 2021 சட்டசபை தேர்தலுக்கான ஒப்பந்தமும் கையெழுத்தானதாக தெரிகிறது.
 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close