மோசமான வரலாறுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா இந்திய அணி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தென்னாப்பிரிக்கா மண்ணில் தனது தொடர் தோல்விக்கு இந்திய அணி முற்றுப்புள்ளி வைக்குமா என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.


Advertisement

கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-2 என்ற கணக்கில் இழந்த நிலையில்,  இருநாடுகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி டர்பன் நகரில் நடைபெறுகிறது. 

தென்னாப்பிரிக்கா செல்வதற்கு முன்பாக இந்திய அணி மீது அளவு கடந்த எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கு முக்கியமான காரணம், 
2017-ம் ஆண்டில் அதிக வெற்றிகள் குவித்த அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்திருந்தது. மொத்தம் 59 போட்டிகளில் விளையாடிய இந்திய அணி 37 போட்டிகளில் வெற்றியும், 12 போட்டிகளில் தோல்வியையும் தழுவியது. டெஸ்ட்(7), ஒருநாள் போட்டி(21), டி20(9) என எல்லா வகையான போட்டிகளிலும் அதிக வெற்றிகள் குவித்து முதலிடம் பிடித்தது. இந்திய அணி தொடர்ச்சியாக 9 டெஸ்ட் தொடர்களையும், 8 ஒருநாள் தொடர்களையும் கைப்பற்றி இருந்தது. 


Advertisement

வீரர்களை பொறுத்த வரை கேப்டன் விராட் கோலி பேட்டிங்கில் மிரட்டி வந்தார். டெஸ்ட், ஒருநாள் என அனைத்து தரப்பு போட்டிகளில் தனது அதிரடியான ஆட்டத்தினார் சர்வதேச அளவில் முதன்மையான வீரராக முன்னேறினார். 2017-ஆம் ஆண்டுக்கான ஐசிசியின் சிறந்த கிரிக்கெட் வீரர், சிறந்த கேப்டன் ஆகிய விருதுகளை கேப்டன் விராட் கோலி வென்றுள்ளார். அதேபோல், ஷிகர் தவான், ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் தோனி உள்ளிட்ட வீரர்கள் அவரவர் பங்கிற்கு அசத்தி வந்தனர். ரோகித் சர்மா இரட்டை சதம் அடித்து ரசிகர்கள் மனதில் உற்சாகத்தை ஏற்படுத்தினார். பந்துவீச்சிலும் வீரர்கள் அவ்வவ்போது சொதப்பினாலும், நம்பிக்கை தரும் வகையிலும் விளையாடினர். 

          

இப்படி பெரும் எதிர்பார்ப்புகளுக்கு நடுவே தான் இந்திய அணி தென்னாப்பிரிக்கா சென்றது. ஆனால், முதல் டெஸ்ட் போட்டியிலே இந்திய வீரர்கள் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தார். முதல் இன்னிங்சில் 209 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ஹர்திக் பாண்டியா மட்டும் 93 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அதேபோல் இரண்டாவது இன்னிங்சிலும் 135 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ஒரு வீரர் கூட அரைசதம் அடிக்கவில்லை. பேட்ஸ்மேன்கள் 30 ரன்களுக்கு மேல் கூட யாரும் அடிக்கவில்லை. இதேநிலை தான், இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் நீடித்தது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்த போதும், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் போராடி இந்திய அணி வெற்றி பெற்றது. 


Advertisement

         

டெஸ்ட் தோல்விக்கு பிறகு இந்திய அணி நாளை முதல் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. ஒருநாள் தொடரில் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி உள்ளது மேலும் நம்பிக்கை அளிக்கக் கூடிய விஷயம். மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதும் இந்திய அணி மீது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்திய அணி இதுநாள் வரையிலும் தென்னாப்பிரிக்காவில் ஒரு ஒருநாள் தொடரையும் வென்றதில்லை என்ற வரலாறு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 

இந்திய அணி இதுவரை 4 முறை தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடரில் விளையாடியுள்ளது. அதில், 1992-93 ஆண்டில் நடைபெற்ற முதல் தொடரில் இந்திய அணி 2-7 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. அதேபோல், 200-07ம் ஆண்டில் 4-0, 2010-11ம் ஆண்டில் 3-2, 2013-14ம் ஆண்டில் 2-0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா அணி தொடர் வெற்றியை பதிவு செய்துள்ளது. இதில் இரண்டு முறையை இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்துள்ளது. 

அதேபோல், இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் தென்னாப்பிரிக்காவுடன் முத்தரப்பு தொடர்களில் இரண்டு முறை விளையாடியுள்ளது. ஜிம்பாப்வே, கென்யா நாடுகள் பங்குபெற்ற அந்த முத்தரப்பு தொடர்களிலும் தென்னாப்பிரிக்காவே ஆதிக்கம் செலுத்தியது. 1992-93 ஆண்டு முதல் இதுவரை தென்னாப்பிரிக்க மண்ணில் இரு அணிகளும் 28 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் தென்னாப்பிரிக்கா 21 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 

இது ஒருபுறம் இருக்க, தென்னாபிரிக்கா அணி தனது சொந்த மண்ணில் அனைத்து அணிகளுக்கு எதிராகவும் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது. குறிப்பாக தென்னாப்பிரிக்கா தனது சொந்த மண்ணில் ஜனவரி 2016-ம் ஆண்டு முதல் 19 ஒருநாள் போட்டிகளில் விளையாடி அதில் 17 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா(5-0), இலங்கை(5-0), வங்கதேசம் (3-0) என வரும் அணிகளை எல்லாம் ஒயிட்வாஷ் செய்து அனுப்பியது.  இந்திய அணியும் சொந்த மண்ணில்தான் அதிக வெற்றிகளை குவித்துள்ளது. இருப்பினும், நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு அடுத்து இந்திய அணி 4-வது இடத்தில் தான் உள்ளது. 

         

இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் பெற்றுள்ள தோல்வி குறித்து பேசிய ரோகித் சர்மா, “தோல்வியை குறித்து பெரியதாக நினைக்கவில்லை. பல்வேறு விஷயங்கள் மாறியுள்ளது. இந்திய அணியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தலைமுறையும் மாறியுள்ளது. 50 ஓவர் போட்டியும் மாறியுள்ளது. முதல் 10 ஓவர்கள் மோசமாக இருந்தாலும் பின்னர் மீண்டு வர முடியும்” என்றார்.

          

எப்படி இருந்தாலும், ஒருநாள் போட்டியில் ஹர்திக் பாண்டியா, புவனேஷ்குமார், விராட் கோலி, தோனி உள்ளிட்ட வீரர்கள் நிச்சயம் ஜொலிப்பார்கள் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் இன்னும் உள்ளது. ரசிகர்களின் எண்ணத்திற்கு ஏற்ப தென்னாப்பிரிக்கா அணியின் சாதனை வெற்றிகளுக்கு இந்திய அணி முற்றுப்புள்ளி வைக்குமா? பொருத்திருப்பது மட்டுமே இப்போதைக்கு ஒரேவழி.

loading...

Advertisement

Advertisement

Advertisement