கொலை செய்துவிட்டு காரில் தப்பிய கூலிப்படை: சினிமா பாணியில் சேசிங்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மேட்டூரில் இருவரை வெட்டி கொலை செய்து விட்டு நாமக்கல் வழியாக தப்பி சென்ற கூலிப்படையை சேர்ந்த 6 பேரை சினிமா பாணியில் நாமக்கல் காவல் துறையினர் துரத்தி பிடித்தனர்.


Advertisement

சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த அமிர்தராஜ் மற்றும் கார்த்தி ஆகிய இருவரையும் காரில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் வெட்டி விட்டு தப்பி சென்றது. இதில் அமிர்தராஜ் சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்து உயிரிழக்க, காயமடைந்த கார்த்தி சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் கொலை செய்த கும்பலை பிடிக்க காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு அவர்களது செல்போன் டவரை தொடர்ந்து கண்காணித்தனர். இதனை அடுத்து கொலை கும்பலை பிடிக்க சுற்றியுள்ள மாவட்ட காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் மேட்டூரில் தப்பிய கொலை கும்பல் காரில் ஈரோடு சென்று அங்கிருந்து மீண்டும் சேலம் வழியாக நாமக்கல் நோக்கி வருவது தெரிய வந்தது. இதனையறிந்த நாமக்கல் காவல் கண்காணிப்பாளர் அருளரசு தலைமையிலான காவல் துறையினர் மாவட்ட எல்லை, சுங்க சாவடிகளில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது கொலை செய்த கும்பல் கேரள பதிவெண் கொண்ட மாருதி ஆல்டோவில் நாமக்கல் அடுத்துள்ள கீரம்பூர் சுங்கச் சாவடியை கடந்து செல்வதை கண்ட காவல்துறையினர் அந்த காரை நிறுத்தியுள்ளனர்.


Advertisement

காரை நிறுத்தாமல் சென்ற அவர்களை போலீசார் துரத்தியுள்ளனர். 12 கி.மீ துரத்திய நிலையில் அந்த கார் தேசிய நெடுஞ்சாலையில் செல்லாமல் பரமத்தி அருகே உள்ள கிராமத்திற்குள் புகுந்து சென்ற போது அவர்களை காவல் துறையினர் சுற்றி வளைத்தனர். இதில் இருந்த 4 பேர் தப்பி ஓடிய நிலையில் 2 பேரை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் தூத்துக்குடியை சேர்ந்த வேல்முருகன் மற்றும் மாரிசெல்வன் என்பது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து தப்பி ஓடிய 4 பேரை பொதுமக்கள் உதவியுடன் காவல் துறையினர் தீவிரமாக தேடினர். அப்போது அந்த 4 பேரும் பேருந்தில் ஏறி தப்பி செல்வது தெரிய வந்தது. இதனையடுத்து மோகனூர் பேருந்து நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த இருவரை பிடித்து விசாரித்த போது அவர்கள் கொலை செய்த கும்பலை சேர்ந்த பாரதிராஜா, கருப்புசாமி என தெரிய வந்தது. காவல் துறையினரின் தொடர் சோதனையில் பாலப்பட்டியில் பேருந்தில் பயணம் செய்த கொலை கும்பலை சேர்ந்த சதீஸ் மற்றும் மற்றொரு வேல்முருகன் ஆகிய இருவரை பிடித்தனர். பிடிபட்ட 6 பேரிடமும் மேற்கொண்ட விசாரணையில் அவர்களிடமிருந்த கொலை செய்ய பயன்படுத்திய ஆயுதங்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர். இவர்கள் அனைவரும் தூத்துக்குடியை சேர்ந்த கூலிப்படை என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து 6 பேரும் சேலம் காவல் துறையினரிடம் மேல் நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement