[X] Close

"கையேந்தி நின்ற காலத்தில் கைகொடுத்த சமுதாயம்" - உதவிக்கரம் நீட்டும் திருநங்கைகள்

Subscribe
Transgender-helped-trichy-people

திருநங்கை என்ற பெயர்மாற்றம் உண்மையில் ஒரு சில திருநங்கைகளின் வாழ்க்கையே மாற்றியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் ஐபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் திருநங்கைகள் எவ்வளவோ தடைகளை தாண்டி தங்களுடைய பயணத்தை தொடங்கியுள்ளனர்.


Advertisement

கொரோனா...கடந்த இரண்டு வருடங்களாக ஒவ்வொருவரும் இந்த சொல்லை ஒலிக்காமல் இருந்திருக்க முடியாது. உலகத்தையே இன்றளவும் ஆட்டிப்படைத்து வரும் ஒரு கொடிய நோய். தமிழகத்தின் இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வரும் நிலையில் ஒரு புறம் பல உயிர்களை பறித்தாலும், இந்த பேரிடருக்கு மத்தியில் மறுபுறம் மனிதநேயத்தை இன்றளவும் பலர் நிலைநாட்டி வருகிறார்கள்.

image


Advertisement

உணவில்லாமல் வாழ்வாதாரம் இழந்து சாலைகளில் தஞ்சம் அடையும் எத்தனையோ பேரையும் உருவாக்கியுள்ளது இந்த கொரோனா காலகட்டம். "மனிதருக்கு மனிதன்தான் உதவுவான்" என்பது போல மனிதநேயம் உள்ள பலர் இந்த இக்கட்டான காலகட்டத்தில் பலரின் பசியையும் வாழ்வாதாரத்தையும் காப்பாற்றியுள்ளனர். 

இந்த அரும்பெரும் பணியை செய்து வருபவர்களுக்கு மத்தியில் "நாங்கள் கையேந்தி நின்ற காலத்தில் கைகொடுத்த சமுதாய மக்களுக்காக இந்த இக்கட்டான சூழலில் உதவி வருகிறோம்" என புன்னகையுடன் தினமும் 100 பேருக்கு திருச்சியில் உணவளித்து வரும் திருநங்கைகள் பற்றிய தொகுப்பு தான் இது!

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்பந்த ஓட்டுநராக பணிபுரிந்து வருபவர் திருநங்கை சினேகா. திருச்சி மாவட்ட திருநங்கைகளுக்கு எல்லாம் ஒரு முன்னுதாரணமாக செயல்பட்டு வருபவர். சமீபத்தில் நடந்த குடியரசு தின விழாவில் தேசிய கொடியேற்றி சிறப்பித்து இதுவரை பல்வேறு சமூக செயற்பாடுகளில் பல்வேறு இக்கட்டான தடைகளையும் தாண்டி பயணித்து வரும் சாதனை திருநங்கை இவர். இந்த இக்கட்டான ஊரடங்கு காலகட்டத்தில் வாழ்வாதாரம் இழந்து சாலையில் உணவின்றி தவிப்போருக்கு திருநங்கை சினேகாவுடன் திருநங்கைகள் நிலா, அம்சா, விமலா ஆகியோரும் சேர்ந்து தினமும் 100 பேருக்கு உணவளித்து வருகின்றனர். 


Advertisement

முழு பொது முடக்கம் தொடங்கிய நாள் முதல் ஒவ்வொரு நாளும் நூறு பேருக்கு தக்காளி சாதம், லெமன் சாதம், புளி சாதம் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உணவு தயாரித்து வாகனத்தின் மூலம் சென்று சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கு உணவு கொடுத்து உதவி வருகிறார்கள்.

அவர்களே இந்த பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் தருணத்தில் பலரிடம் உதவி கேட்டு, அவர்கள் சிறுக சிறுக சேமித்த தொகையையும் சேர்த்து தினமும் சமைத்து திருச்சி மாநகரில் உள்ள மத்திய பேருந்து நிலையம், பாலக்கரை, சத்திரம் பேருந்து நிலையம், தில்லை நகர், உறையூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று உணவு கொடுத்து உதவி வருகின்றனர். இவர்களுடன் சந்தோஷ் மற்றும் பெருமாள் ஆகிய இருவரும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

இது குறித்து திருநங்கை சினேகா கூறுகையில், "நாங்கள் கையேந்தி நின்ற காலகட்டத்தில் கைகொடுத்த இந்த சமுதாயத்திற்கு எங்களால் முடிந்த சிறிய உதவியை செய்து வருகிறோம். போராட்டங்கள் நிறைந்ததுதான் திருநங்கைகளின் வாழ்க்கை. எனினும் அவற்றை கடந்து உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கில் இதை செய்து வருகிறோம். நாங்கள் உணவு கொடுப்போம் என்ற நம்பிக்கையில் காத்திருப்பவர்கள் உணவைப் பெற்று புன்னகைப்பது எங்களுக்கு தாய் உள்ளத்தை ஏற்படுத்துகிறது" என நெகிழ்ச்சி அடைகிறார் சினேகா. மேலும் இனிவரும் காலங்களிலும் தொடர்ந்து எங்களால் இயன்ற உதவிகளை செய்வோம் " என்றார்.

திருநங்கைகள் என்றால் ஏளனமாய் பார்க்கும் இச்சமுதாயத்திற்கும் மத்தியில் இந்த சமுதாயமே தங்களை திரும்பி பார்க்க வைத்துள்ளனர் இந்த திருச்சி திருநங்கைகள்!!

- பிருந்தா

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close