[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் மூன்று குழந்தைகளை கொலை செய்து தந்தையும், தாயும் தற்கொலை
  • BREAKING-NEWS குடியரசுத் தலைவரின் ஒப்புதலையடுத்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அமலுக்கு வந்தது

விஸ்வரூபம் எடுக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீதான பதவி நீக்க விசாரணை 

america-president-election-2020

அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீதான பதவி நீக்க விசாரணை விஸ்வரூபமெடுத்துள்ளது. இதிலிருந்து ட்ரம்ப் தப்புவாரா? வரும் அதிபர் தேர்தலில் இது எதிரொலிக்குமா?  

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்றது முதலே பல்வேறு சர்ச்சைகள் அவரை சுற்றி வலம் வருகின்றன. இந்த நிலையில், அடுத்த ஆண்டு அதிபர் தேர்தலிலும் போட்டியிடுகிறார் ட்ரம்ப். ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளவர் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன். ட்ரம்பை எதிர்த்து ஜோ பிடனே களம் காண்பார் என கணிப்புகள் வெளியாகின. 

இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் ட்ரம்ப், உக்ரைன் அதிபருடன் நிகழ்த்திய தொலைபேசி உரையாடல் வெளியானது. ஜோ பிடன் மற்றும் அவரது மகனுக்கு சொந்தமான நிறுவனங்கள் உக்ரைனில் செயல்பட்டு வரும் நிலையில், அவர்கள் மீது ஊழல் வழக்கு தொடர்ந்து அதுகுறித்து விசாரிக்க வேண்டும், அதுவரை உக்ரைனுக்கான ராணுவ உதவி நிறுத்தி வைக்கப்படும் என ட்ரம்ப் கூறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இருவரது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டு கேட்கப்பட்டபோது இது தெரிய வந்ததாக சொல்லப்படுகிறது. 

பதவியில் இருக்கும்போது மற்றொரு நாட்டு தலைவரிடம் அரசியல் ஆதாயத்துக்காக ட்ரம்ப் உதவி கேட்டது பதவிப் பிரமாணத்தை மீறிய செயல் என கூறி ஜனநாயக கட்சியினர் இந்த விவகாரத்தை விஸ்வரூபமெடுக்கச் செய்துள்ளனர். அதிபர் ட்ரம்ப் மீது பதவி நீக்க விசாரணையை தொடங்கினர். இத்தனை நாட்களாக ரகசியமாக நடைபெற்ற விசாரணை, முதன்முறையாக பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது உக்ரைனுக்கான தூதர் வில்லியம் டெய்லரிடம் சரமாரியாக கேள்விகள் எழுப்பப்பட்டன. பல மணி நேரம் நடைபெற்ற விசாரணையில், ஜோ பிடன் மீதான ஊழல் விசாரணை குறித்து ட்ரம்ப் நேரடியாக கேட்டார் என டெய்லர் கூறியது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடக்கம் முதலே குற்றச்சாட்டை மறுத்து வரும் ட்ரம்ப், தன் மீதான பதவி நீக்க விசாரணை போலியானது இதை அனுமதித்திருக்கக் கூடாது என கூறியுள்ளார்.

உலகமே தனக்கெதிரான விசாரணையை நேரலையாக பார்த்த நிலையில், அந்த விசாரணையை ஒரு நிமிடம் கூட பார்க்கவில்லை ‌என்றும் அதை விட முக்கியமான வேலைகள் இருக்கின்றன என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மீண்டும் ஒருமுறை அதிபராகும் கனவில் இருக்கும் ட்ரம்புக்கு இந்தப் பதவி நீக்க விசாரணை பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. இந்த விசாரணை மூலம் ட்ரம்பின் செல்வாக்கு சரியக் கூடும் என கூறப்படுகிறது. இது தேர்தலிலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close