[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா, தென்னாப்ரிக்கா இடையே ராஞ்சியில் இன்று தொடங்குகிறது மூன்றாவது டெஸ்ட் போட்டி
  • BREAKING-NEWS பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

“வளர்ச்சி என்ற பெயரில் பழங்குடிகள் இன அழிப்பு” - வேல்முருகன்

tamilaka-vaalvurimai-party-leader-velmurugan-statement-about-supreme-court-judgement

வளர்ச்சி என்ற பெயரில் வனவாசிகள், பழங்குடிகள் இன அழிப்பு தொடர்வதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தப் புவிப்பந்தின் பூர்விகக் குடியினர், ‘மலைவாழ் மக்கள், வனவாசிகள்’ என்கின்ற பட்டியல் இன பழங்குடி மக்கள்தான். உலகம் முழுவதுமே அவர்களுக்கு எதிரான அரசியல் வன்முறை - இன அழிப்பே தொடர்கிறது. இதைத் தொடங்கிவைத்தவன் கொலம்பஸ்! அவனை, ‘அமெரிக்காவைக் கண்டுபிடித்தவன்’ என்கிறான் ஆதிக்க எண்ணம் கொண்டவன். அது உண்மையல்ல. கொலம்பஸ் அமெரிக்காவை ஆக்கிரமித்தவன்! அங்கிருந்த 2 கோடி பழங்குடி மக்களை இனப்படுகொலை செய்தவன்! அவர்களின் ரத்தத்தால், புது வீட்டில் குடியேறுமுன் அதைக் கழுவிவிடுவதைப் போல, அந்த மண்னைக் கழுவிவிட்டு அதில் குடியேறி அதற்கு அமெரிக்கா எனப் பெயரிட்டவன்! அவன் வாரிசுகளே இன்றைய அமெரிக்கா மற்றும் ஐரோப்பா! அவர்களின் அடிவருடியாக இந்தியா! இங்கும் பழங்குடி மக்களை அழித்தொழிப்பது தொடர்கிறது. வளர்ச்சி என்ற பெயரில் காடுகளின் கனிம வளங்களை கார்ப்பொரேட்டுகள் கொள்ளையிட, பழங்குடி மக்கள் தங்களின் வாழிடமான வனங்களிலிருந்து அகற்றப்படுகிறார்கள். 

அதற்காகத்தான் அவர்களுக்கு பட்டா மறுத்து உத்தரவிட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம். அந்த வகையில் நாடு முழுவதும் 11,27,446 வனப்பகுதி பட்டா மனுக்களை நிராகரித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். அதாவது 11,27,446 வனப்பகுதி குடியிருப்புகளை அகற்ற உத்தரவிட்டிருக்கிறது. இதன்மூலம் சுமார் 45 லட்சம் பழங்குடிகள் அகற்றப்படுவர். தமிழ்நாட்டில் 9,029 குடியிருப்புகளுக்கு பட்டா மறுக்கப்பட்டதன் மூலம் சுமார் 35 ஆயிரம் பழங்குடியினர் அகற்றப்படுவர். 2006ஆம் ஆண்டில், ‘பட்டியல் பழங்குடியினர் மற்றும் பராம்பரிய வனவாசிகள் (வன உரிமைகள் அங்கீகரிக்கும்) சட்டம்-2006’ என்னும் சட்டத்தை அப்போதைய ஐமுகூ மத்திய அரசு கொண்டுவந்தது. இந்தச் சட்டம், 2005 டிசம்பர் 13ந் தேதிக்கு முன்பிருந்தே காடுகளில் வசித்துவரும் பழங்குடியினருக்கு அவர்கள் குடியிருக்கும் நிலம் மற்றும் பயிரிடும் நிலம் ஆகியவற்றுக்கு பட்டா வழங்க வேண்டும் என்கிறது. ஆனால் இதனை எதிர்த்து ‘வைல்டுலைஃப் ஃபர்ஸ்ட்’ (Wildlife first) என்கிற அமைப்பு 2008ஆம் ஆண்டில் வழக்குத் தொடுத்தது. “பழங்குடியினருக்கான வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்தினால் காடுகள் அழியும், காட்டு விலங்குகளும் அழியும். எனவே இந்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 

ஏற்கனவே இந்தச் சட்டத்தை அமல்படுத்தியிருந்தாலும் கூட, பட்டா இல்லாத பழங்குடி மக்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்” என அவ்வமைப்பு தன் மனுவில் கேட்டிருந்தது. இந்த வழக்கு கடந்த பிப்ரவரி 13ந் தேதி நீதிபதிகள் அருண் மிஸ்ரா, நவீன் சின்கா, இந்திரா பானர்ஜி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது 16 மாநிலங்கள் தங்கள் வனப்பகுதிகளில் இருக்கும் பழங்குடியினருக்கு வழங்கிய பட்டா மனுக்களின் எண்ணிக்கை, அதில் நிராகரிக்கப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை தொடர்பான அறிக்கையை அளித்தன. மொத்தம் 11,27,446 பட்டா மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருந்தன. இந்த 11,27,446 பட்டா மனுக்கள் நிராகரிக்கப்பட்ட பின்னரும் அம்மக்களை ஏன் வெளியேற்றவில்லை என்று கேட்ட நீதிபதிகள், அடுத்த விசாரணையின்போது இது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்; அடுத்த விசாரணைக்குள் அம்மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை தொடங்கியிருக்க வேண்டும்; தவறினால் கடுமையான உத்தரவினைப் பிறப்பிக்க நேரிடும் என்று எச்சரித்து, வழக்கை ஜூலை 24ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதில் அதிர்ச்சி என்னவென்றால், இந்த விசாரணையின்போது மத்திய பாஜக மோடி அரசின் சார்பில் வழக்கறிஞர்கூட ஆஜராகவில்லை. காங்கிரஸ் ஐமுகூ அரசு கொண்டுவந்த சட்டம் என்பதுடன், கார்ப்பொரேட்டுகளின் விருப்பப்படி பழங்குடிகளை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதும் முக்கியமான காரணம். மோடி வந்த 2014லிலிருந்து 2019 வரை  நாடு முழுவதும் வளர்ச்சி என்ற பெயரில் வனப்பகுதிகளில் 682 திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவை வனங்களை அழித்து கனிமவளங்களை கார்ப்பொரேட்டுகள் சூறையாடவும் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளை அவை கட்டிக்கொள்ளவுமானவை. பழங்குடிகளை வனத்தில் இருந்து வெளியேற்றுவதும் அங்கு மனிதர்களே வாழக்கூடாது என்பதும் கார்ப்பரேட்களுக்காகத்தானே தவிர வேறில்லை. வனம் அனைத்து உயிர்களுக்குமான இயற்கையின் படைப்பாகும்; அதிலிருந்து மனிதர்களை மாத்திரம் வெளியேற்றுவது அந்த இயற்கையை மீறுவதாகும். ஏனெனில், மனிதனும் இயற்கையின் ஓர் அங்கமே! வனத்தில் வசிக்கும் மக்களால் என்றும் வனத்திற்குப் பாதிப்பில்லை; வெளியாட்களாலேயே வனத்திற்குப் பாதிப்பு; பழங்குடிகள் இல்லாமல் வனத்தைப் பாதுகாக்கவும் முடியாது; இது உண்மை. 

ஆனால் காலனியாதிக்க ஆங்கிலேயர் ஆட்சி பழங்குடியினர் உரிமைகளைப் பறித்தது என்றால், சுதந்திர இந்தியா பழங்குடிகள் இன அழிப்பையே தொடர்கிறது. இதனை நிறுத்தியாக வேண்டும். வனங்களைப் பாதுகாக்க அவ்வனங்களைப் பற்றிய மரபார்ந்த அறிவைப் பெற்றிருக்கும் பழங்குடிகளைப் பாதுகாக்க வேண்டியது அவசியம், கடமை. எனவே தமிழக அரசு பழங்குடிகளுக்கு பட்டா மறுப்பு உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்து, அம்மக்கள் தொடர்ந்து தங்களது பூர்விக வனப்பகுதியிலேயே வசிக்கத் தேவையான உத்தரவினை உச்ச நீதிமன்றத்தில் பெற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close