[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.66 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.63 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது

'ஐந்தாண்டு வேதனையின் தொடர்ச்சியாக, ஓராண்டு சோதனை': குற்றச்சாட்டுகளை அடுக்கும் ஸ்டாலின்

mk-stalin-comments-admk

ஐந்தாண்டு வேதனையின் தொடர்ச்சியாக, ஓராண்டு சோதனையையும் அனுபவிக்கும் தமிழகத்தில், சூரியக் கதிர்கள் நிச்சயம் வெளிச்சத்தை பரப்பும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதிமுக ஆட்சியின் ஓராண்டு நிறைவடைந்துள்ளதை ஒட்டி திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ள மு.க.ஸ்டாலின், “கண்டெய்னர் லாரிகளில் கொள்ளைப் பணமும், கவர் கவராக வீடுகள் தோறும் வழங்கப்பட்ட லஞ்சப் பணமும் தேர்தல் ஆணையத்தின் கண்களுக்குப் ‘புலப்படாமல்’ போனதால் கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டது. அப்படி இருந்தும் திமுக தனிப்பட்ட முறையில் 89 இடங்களிலும் தோழமைக் கட்சிகளுடன் சேர்த்து 98 இடங்களிலும் வெற்றி பெற்று, தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் இதுவரை காணாத வலிமைமிக்க எதிர்க்கட்சியாக அமர்ந்து கடமையாற்றி வருகிறது.

அதிகார பலத்தால் வென்ற அதிமுகவுக்கும், அநியாயமாக வெற்றி வாய்ப்பை இழந்த திமுகவுக்குமான வாக்கு வித்தியாசம் வெறும் 1.1% தான். அதனால்தான், மக்களின் தீர்ப்புக்கு எதிரான ஜனநாயக முடிவு என்று அப்போதே நாம் குறிப்பிட்டோம். ஏன் வாக்களித்த மக்களே கூட எப்படி அதிமுக வெற்றி பெற்றது என்று அதிர்ச்சியடைந்து போனார்கள். அதிமுகவினர் மீண்டும் பதவியேற்றுக் கொண்டு மே 22 ஆம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இந்த ஒரு வருடத்தில் மூன்று முதலமைச்சர்கள். ஒரு மாற்றம் இயற்கையாக ஏற்பட்டது என்றாலும், இரு முதல்வர்கள் மாற்றம் ‘அதிகாரவெறி’ யால் ஏற்பட்ட மாற்றம். முக்கியத்துவம் வாய்ந்த அனைத்துத் துறைகளிலும் இந்திய அளவில் கடைசி இடம் என்பதும், முன்னிலை பெற்றிருந்த துறைகளிலும் இமாலய ஊழல் என்பதுமே இந்த ஆட்சியின் வேதனைமிகுந்த சாதனையாக இருக்கிறது. இது இந்த ஓராண்டு காலத்தில் நிகழ்ந்ததல்ல, ஜெயலலிதா ஆட்சி செய்த 5 ஆண்டுகளிலும் இதே அவல நிலைதான்.

அதன் தொடர்ச்சியாகத் தற்போது தமிழக அரசின் நேரடி கடன் சுமை 3 லட்சம் கோடி என்ற அளவில் உள்ளது. இதுபோக, மின்துறை உள்ளிட்ட பிற துறைகளின் மறைமுக கடன் சுமைகளையும் சேர்த்தால் 5 லட்சம் கோடி என்கிற அளவிற்கு, தமிழ்நாடே திவாலாகும் நிலையில்தான் அரசாங்கத்தின் கஜானா காலியாகி உள்ளது. எவ்விதத் திறனுமற்ற நிர்வாகத்தின் இயல்பான விளைவுதான் இது என்பது எளிய மக்களுக்கும் புரிந்திருக்கிறது. மதுபான வருமானத்திற்காக எந்த அவமானத்தையும் ஏற்கும் மதிமயக்கமும் மனோபாவமும் கொண்ட அரசுதான் 6 ஆண்டு காலமாக நம்மை ஆட்சி செய்து வருகிறது.

வாக்களித்த மக்களின் அடிப்படைத் தேவை உணவும் குடிநீரும்தான். அதைக்கூட உறுதி செய்ய முடியாத கையாலாகாத ஆட்சியை தமிழகம் சந்தித்துச் சகித்துக் கொண்டிருக்கிறது. ஆள்வோரின் அலட்சியப் போக்கினால், தமிழகம் முழுவதும் காலிக் குடங்களுடன் பெண்கள் ஆவேசத்துடன் வீதிக்கு வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபடும் நிலையைக் காண்கிறோம். ஆற்று மணலில் தொடங்கி தாது மணல், சவுடு மணல், கிரானைட் உள்பட அனைத்து கனிமவளங்களும் தமிழகத்தில் கடந்த 6 ஆண்டுகளாகத் தொடர்கொள்ளை அடிக்கப்படுவதை நீதிமன்றமே பல முறை சுட்டிக்காட்டியிருக்கிறது.

கடந்த 6 மாதங்களில் மட்டும் தமிழகத்தில் 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் மனம் வெதும்பி, தற்கொலையாலும் அதிர்ச்சி மரணங்களாலும் உயிரிழந்திருக்கிறார்கள். விவசாயிகள் மட்டுமல்ல, போக்குவரத்தும் தொழிலார்கள் தொடங்கி அனைத்துவகைத் தொழிலாளர்கள், நெசவாளர்கள், வணிகர்கள், தொழில் முனைவோர் என அனைத்துத் தரப்பினரின் வாழ்வுடனும் இந்த அரசு விளையாடிக் கொண்டிருக்கிறது. 6 ஆண்டுகாலமாக தமிழகத்தின் தொழில்முதலீடும் பொருளாதார வளர்ச்சியும் படுபாதாளத்தில் வீழ்ந்துள்ளன. காவல்துறை என்பது மக்களைப் பாதுகாப்பதற்குப் பதில், குடியிருப்புப் பகுதிகளில் மதுபானக் கடைகளைத் திறக்காதீர்கள் என்ற நியாயமான கோரிக்கையை முன்வைத்து ஜனநாயக வழியில் போராடும் பெண்களையும் இளைஞர்களையும் கண்மூடித்தனமாகத் தாக்கி, கைது செய்யும் ஏவல்துறையாக மாறியுள்ளது.

மாநில சுயாட்சிக் குரல் ஓங்கி ஒலித்த மண்ணில், இன்றைய ஆட்சியாளர்கள் மத்திய அரசின் உத்தரவுக்கேற்ப பொம்மைகளாக ஆடுகிறார்கள். தலைமைச் செயலகத்தில் மத்திய அமைச்சர் ஆய்வுக்கூட்டம் நடத்துகிறார். முதலமைச்சர் தொடங்கி அனைத்து அமைச்சர்களும் மத்திய அரசுக்குக் கட்டுப்பட்டுக் கிடக்கிறார்கள். மடியில் கனம் இருப்பதால் அவர்கள் மண்டியிட்டுக் கிடக்கும் நிலை ஏற்பட்டு தமிழக நலன்கள் பாதிக்கப்படுகிறது. ஐந்தாண்டு வேதனையின் தொடர்ச்சியாக ஓராண்டு கால சோதனை என்பதை அனுபவிக்கும் மக்கள் “சோதனை மேல் சோதனை போதுமடா சாமி” என்று இன்றைக்கு எரிமலை போல் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்.

வேதனைகள் மிகுந்த இந்த ஆட்சி ஜனநாயக முறைப்படி வெகு விரைவில் மாறும். ஆறு ஆண்டுகளாக இருள் சூழ்ந்த தமிழகத்தில் சூரியக் கதிர்கள் வெளிச்சத்தை நிச்சயம் பரப்பும். எம் மக்களுடன் இணைந்து நின்று திமுக எத்திசையிலும் வெல்லும்” என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close