[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்

யார் இந்த பென் ஸ்டோக்ஸ் ? 

ben-stokes-ups-and-down-in-career

இந்தாண்டு கிரிக்கெட் விளையாட்டு உலகத்தில் தவிர்க்க முடியாத வீரராக வலம் வருபவர் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் பென்ஜமின் ஆண்ட்ரூ ஸ்டோக்ஸ். இந்தாண்டு இங்கிலாந்து கிரிக்கெட் அணி உச்சம் தொட முக்கிய காரணம் திகழ்பவர் இவர் தான். இவர் 1991ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4ஆம் தேதி நியூசிலாந்தின் கிறிஸ்ட் சர்ச் நகரில் பிறந்தார். இவர் 12 வயதாக இருக்கும் போது நியூசிலாந்திலிருந்து இங்கிலாந்திற்கு குடி பெயர்ந்தார். 

          

இதன்பின்னர் இங்கிலாந்தில் ஒரு கிரிக்கெட் அகாடமியில் கிரிக்கெட் பயிற்சியில் சேர்ந்தார். அங்கு இவர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். தனது 13 வயதில் கிரிக்கெட் போட்டி ஒன்றில் சரியாக விளையாடததால், ஆட்டத்தின் இறுதியில் ஒரு கதவின் மீது தன் கையால் குத்தி கையில் காயம் ஏற்படுத்தினார். எனினும் தனது கடின உழைப்பால் 2009ஆம் ஆண்டு இங்கிலாந்து கவுண்ட்டி கிரிக்கெட் அணியான தர்ஹம் அணியில் ஸ்டோக்ஸ் இணைந்தார். இவர் தனது 18ஆவது வயதில் கவுண்ட்டி போட்டியில் களமிறங்கினார். இந்தப் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். 

இதனைத் தொடர்ந்து 2010ஆம் ஆண்டு இங்கிலாந்தின் 19வயதிற்கு உட்பட்டோர் கிரிக்கெட் அணியில் பென் ஸ்டோக்ஸிற்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது நடைபெற்ற 19வயதிற்கான உலகக் கோப்பை தொடரில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் இவர் சதம் அடித்தார். இதனையடுத்து 2011ஆம் ஆண்டு இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்தியாவிற்கு எதிரான தொடரில் இவர் சற்று தடுமாறினார்.

அதன்பின்னர் இவருக்கு காயம் ஏற்பட்டது. எனவே இங்கிலாந்து அணியில் வாய்ப்பு கிடைக்காமல் போனது. எனினும் காயத்திலிருந்து மீண்டும் வந்த பென் ஸ்டோக்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய இரண்டிலும் சிறப்பாக செயல்பட்ட பென் ஸ்டோக்ஸ், இங்கிலாந்து அணியிலிருந்து ஒய்வுப்பெற்ற ஆல்ரவுண்டர் ஃபிளின்டாப்பின் இடத்தை நிறுப்புவார் என்று அனைவரும் கருதினர். 

இதனையடுத்து 2013ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் இடம்பெற்றார். இந்தத் தொடரில் தனது முதல் டெஸ்ட் போட்டியை விளையாடிய பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடியது போல் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அந்த ஆஷஸ் தொடரில் ஒரு சதம் உட்பட 279 ரன்கள் மற்றும் ஒரு இன்னிங்ஸில் 6 விக்கெட் உட்பட மொத்தம் 15 விக்கெட்டுகளை எடுத்தார். அப்போது முதல் இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் ஒரு தனி சிறப்பு வாய்ந்த ஆல் ரவுண்டராக பென் ஸ்டோக்ஸ் உருவெடுத்தார். 

கேப்டவுனில் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து சார்பில் அதிவேகமாக இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை இவர் படைத்தார். இத்தனை சாதனைகளை படைத்து வந்த பென் ஸ்டோக்ஸின் கிரிக்கெட் வாழ்க்கையில் சர்ச்சைகளும் பெரிதாக இருந்தது. இவரின் மது பழக்கம் இவரை பல முறை சர்ச்சையில் சிக்க வைத்துள்ளது. 2011ஆம் ஆண்டு இரவு குடித்து விட்டு காவல்துறையினரிடம் தவறாக நடந்து கொண்டு பெரும் சர்ச்சையில் ஸ்டோக்ஸ் சிக்கினார். 

இதனைத் தொடர்ந்து மீண்டும் 2013ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது இவர் இரவு நேரங்களில் சரியான அனுமதி இன்றி வெளியே சென்றதால் இவரை இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் மீண்டும் தாயகத்திற்கு அனுப்பி வைத்தது. இதன் பிறகு பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் மன்னிப்பு கேட்டு மீண்டும் அணியில் இணைந்தார். அதேபோல 2015 மற்றும் 2016ஆம் ஆண்டு இவர் இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு நிறையே நேரம் மது கடையில் செலவிடுவதாக சர்ச்சையில் சிக்கினார். 

இவை அனைத்திற்கும் மேலாக 2017ஆம் ஆண்டு பிரிஸ்டோல் நகரில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக பெற்ற வெற்றியை கொண்டாட ஸ்டோக்ஸ் தனது நண்பருடன் மது அருந்திவிட்டு ஒரு மோதலில் ஈட்டுபட்டார். இந்த மோதலில் இவர் ஒரு கிளப்பின் ஊழியரை தாக்கியுள்ளார். இதனால் அந்த ஊழியர் பெரும் காயத்திற்கு உள்ளானர். இதனைத் தொடர்ந்து பென் ஸ்டோக்ஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கால் பென் ஸ்டோக்ஸின் கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்கு வரும் நிலை ஏற்பட்டது. 

           

எனினும் 2018ஆம் ஆண்டு இங்கிலாந்து நீதிமன்றம் இவரை குற்றமற்றவர் என்று கூறி வழக்கிலிருந்து விடுவித்தது. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பென் ஸ்டோக்ஸின் இந்த நடவடிக்கைக்கு தண்டனையாக 6 போட்டிகளில் அவர் விளையாட தடை விதித்தது. இந்த தடைக்கு பிறகு மீண்டும் இங்கிலாந்து அணிக்கு ஸ்டோக்ஸ் திரும்பினார். 

இரண்டு வருடங்களுக்கு முன்பு தனது கிரிக்கெட் வாழ்வு முடிவுக்கு வரும் நிலையில் இருந்த பென் ஸ்டோக்ஸிற்கு 2019 ஆம் ஆண்டு புதிய திருப்பமாக அமைந்தது. 2019ஆம் ஆண்டு நடைபெற்ற கிரிக்கெட் உலகக் கோப்பை பென் ஸ்டோக்ஸின் கிரிக்கெட் வாழ்வில் மிகவும் மறக்க முடியாததாக அமைந்தது. இந்தத் தொடரில் இங்கிலாந்து அணியை சரிவிலிருந்து ஒவ்வொரு முறையும் மீட்டவர் பென் ஸ்டோக்ஸ். பரப்பரப்பாக நடைபெற்ற உலகக் கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து அணி சூப்பர் ஓவர் வரை சென்று வெற்றிப் பெற முக்கிய காரணமாக இருந்தவர் பென் ஸ்டோக்ஸ். 

இந்த உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு, இவரின் சொந்த நாடான நியூசிலாந்து இந்தாண்டின் சிறந்த நியூசிலாந்து நாட்டவர் என்ற உயரிய விருதுக்கு இவரை பரிந்துரைத்தது. எனினும் இந்த பரிந்துரையை ஏற்க மறுத்த ஸ்டோக்ஸ், “நியூசிலாந்து நாட்டின் உயரிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நான் இங்கிலாந்து அணி உலகக் கோப்பையை வெல்ல உதவியாக இருந்துள்ளேன். அத்துடன் 12வயது முதல் நான் இங்கிலாந்து நாட்டின் குடிமகனாக வாழ ஆரம்பித்து விட்டேன். ஆகவே இந்த விருதை நியூசிலாந்து நாட்டிலுள்ள பல தகுதியானவர்களுக்கு அளிக்கவேண்டும். அதிலும் குறிப்பாக நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனிற்கு அளிக்கவேண்டும்” எனக் கூறினார். 

இங்கிலாந்து அணியின் உலகக் கோப்பை நாயகனாக விளங்கிய பென் ஸ்டோக்ஸ் தற்போது இங்கிலாந்து கிரிக்கெட் அணி டெஸ்ட் வரலாற்றில் அதிக ரன்களை சேஸ் செய்ய உதவி மீண்டும் புகழின் உச்சிக்கு சென்றுள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் 359 ரன்கள் என்ற இலக்குடன் இங்கிலாந்து கிரிக்கெட் அணி களமிறங்கியது. அந்த அணி 286 ரன்கள் எடுப்பதற்குள் 9 விக்கெட்களை இழந்தது. அப்போது ஸ்டோக்ஸ் 61 ரன்களுடன் களத்தில் இருந்தார். இதனைத் தொடர்ந்து கடைசி விக்கெட்டிற்கு ஜாக் லீச்சுடன் இணைந்த பென் ஸ்டோக்ஸ் ஆஸ்திரேலிய பந்துவீச்சை சிதறடித்தார். மின்னல் வேகத்தில் ரன்களை சேர்த்த பென் ஸ்டோக்ஸ் 135 ரன்கள் விலாசி இங்கிலாந்து அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற செய்தார். 

இதன் மூலம் இங்கிலாந்து கிரிக்கெட் அணி மிகப் பெரிய ஸ்கோரை டெஸ்ட் கிரிக்கெட்டில் சேஸ் செய்ய முக்கிய காரணமாக இருந்தார். ஆகவே இரண்டு வருடங்களுக்கு கிரிக்கெட் வாழ்வின் இறுதி அத்தியாத்திலிருந்த பென் ஸ்டோக்ஸ் தற்போது தனது கிரிக்கெட் வாழ்வில் உச்சத்திற்கு உயர்ந்துள்ளார். இரண்டு ஆண்டுகளில் கிரிக்கெட் விளையாட்டில் இவ்வளவு பெரிய திருப்பத்தை கண்டுள்ள பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணியின் தலை சிறந்து ஆல் ரவுண்டர் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close