[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை
  • BREAKING-NEWS திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்
  • BREAKING-NEWS மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி
  • BREAKING-NEWS நீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்

பாண்ட்யா, கே.எல்.ராகுல் மீது மட்டும்தான் நடவடிக்கையா? ஹர்மன்பிரீத் மீது ஏன் இல்லை? 

how-is-harmanpreet-continuing-as-india-captain-despite-a-fake-degree-investigation

பெண்கள் குறித்து தவறாக பேசிய விவகாரத்தில் ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், போலி சான்றிதழ் சர்ச்சையை எதிர்கொண்டு வரும் பெண்கள் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியில் எப்பொழுதும் சர்ச்சைகளுக்கும், பிரச்னைகளுக்கும் பஞ்சமில்லை. அது ஆண்கள் அணியாக இருந்தாலும் சரி, பெண்கள் அணியாக இருந்தாலும் சரி. அதுவும் சமீப காலமாக கிரிக்கெட் துறையில் தொடர்ச்சியாக பிரச்னைகள் வந்த வண்ணம் உள்ளன. 

                

பெண்கள் கிரிக்கெட் அணியில் பயிற்சியாளர் ரமேஷ் பவாருக்கும், மிதாலி ராஜுக்கும் இடையே தீவிரமான பிரச்னை சமீபத்தில் வெடித்து இருந்தது. டி20 பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முக்கியமான அரையிறுதியில் மிதாலி ராஜ் விளையாட அனுமதிக்கவில்லை.

உடல் தகுதியையும், முந்தைய கிரிக்கெட் ரெக்கார்டுகளையும் கருத்தில் கொண்டு அவரை இறக்கவில்லை என்று பயிற்சியாளர் மற்றும் நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இருப்பினும், ரமேஷ் பவாருக்கு எதிராக மிதாலி ராஜ் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார். அவரும் மிதாலி ராஜ் அணுக எளிதாக இல்லை என்று பதில் அளித்தார். பின்னர், இந்தப் பிரச்னை ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.

              

இதனையடுத்து, இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியில் முக்கிய இளம் வீரர்களான ஹர்திக் பாண்ட்யாவும் கே.எல்.ராகுலும் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார்கள். இந்தி சினிமா இயக்குனர் கரண் ஜோஹரின் ‘காபி வித் கரண்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர்கள், பெண்கள் குறித்து தரக்குறைவாக பேசியதற்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. உடனடியாக அவர்கள் அணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் மீது பிசிசிஐ விசாரணையும் நடத்தவுள்ளது. இருவரும் விரைவில் இந்தியா திரும்புகின்றனர்.

            

பாண்ட்யா, கே.எல்.ராகுல் சர்ச்சை முடிவதற்குள் தற்போது பெண்கள் கிரிக்கெட் டி20 அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீட் போலி சான்றிதழ் சர்ச்சை மீண்டும் வெடித்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற பெண்கள் உலகக் கோப்பை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது. அதோடு, பஞ்சாப் மாநில அவருக்கு கடந்த மார்ச் மாதம் டிஎஸ்பி பணி வழங்கி சிறப்பித்தது. ஆனால், பணியில் சேர்வதற்காக ஹர்மன்பிரீத் வழங்கிய பட்டப்படிப்பு சான்றிதழ் போலியானது என்று தெரியவந்தது. ஆனால், அந்தப் புகாரை அவர் மறுத்துவிட்டார். இருப்பினும், பிசிசிஐ விசாரணையை அவர் எதிர்கொண்டு வருகிறார்.

           

இந்நிலையில், பாண்ட்யா மற்றும் கே.எல்.ராகுல் விவகாரத்தில் வேகமாக நடவடிக்கை எடுத்த பிசிசிஐ ஹர்மன்பிரீத் விவகாரத்தில் என்ன செய்யப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து பிசிசிஐ அதிகாரிகள் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் பேசுகையில், “பாண்ட்யாவும், ராகுலும் விசாரணைக்காக சஸ்பெண்ட் நடவடிக்கையை சந்திக்க வேண்டுமென்றால், ஹர்மன்பிரீத் கவுர் எப்படி?. இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் அவர், போலி சான்றிதழ் விவகாரத்தில் விசாரணையை எதிர்கொண்டு வருகிறார். யாரோ அவரை நடவடிக்கையில் இருந்து பாதுகாத்து வருகிறார். எதுக்காக இருவரையும் ஓர் ஆண்டிற்கு தடை செய்ய வேண்டும்? 
 
சட்ட ரீதியான நடைமுறைகள் இருக்கிறது அல்லவா?. பின்னர் எப்படி அவர் இந்திய அணியின் கேப்டனாக இருக்கிறார். விசாரணையை எதிர்கொள்ளும் வேளையில் அவர் கேப்டனாக தொடரலாம் என்றால், பாண்ட்யாவும், ராகுலும் உலகக் கோப்பை தொடரில் விளையாட அனுமதிக்கலாமே. இன்னும் நான்கு மாதங்கள்தான் இருக்கிறதல்லவா?” என்று வினவியுள்ளனர்.

        

அதனால், ஹர்மன்பிரீத் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய இக்கட்டான சூழலில் பிசிசிஐ உள்ளது. அப்படி இல்லையென்றால், பாண்ட்யா, கே.எல்.ராகுல் விவகாரத்திலும் எடுக்கப்படும் நடவடிக்கையில் சற்றே தளர்வு ஏற்படவும் வாய்ப்புள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close