[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.73.29 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஊடகங்களிடம் பேச அஞ்சும் பிரதமராக நான் இருக்கவில்லை; ஒவ்வொரு வெளிநாட்டு பயணம் முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கிறேன் - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
  • BREAKING-NEWS ரூ.1,258 கோடியில் மதுரையில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது
  • BREAKING-NEWS 2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி - மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அறிவிப்பு
  • BREAKING-NEWS மோடிதான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி

காவிரிப் பிரச்னை: தொடரும் துரோகம் 

cauvery-river-water-dispute-case-supreme-court-asks-karnataka-government-to-give-4-tmc-of-water-to-tamil-nadu

காவிரிப் பிரச்னையில் தமிழ்நாட்டு மக்கள் அஞ்சியதுபோலவே மத்திய அரசின் நடவடிக்கை அமைந்திருக்கிறது. உச்சநீதிமன்றம் ஆணையிட்டது போல மத்திய அரசு வரைவுத் திட்டத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. எப்போது தாக்கல் செய்வோம் என்று குறிப்பான தேதியையும் மத்திய அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் கூறவில்லை. காவிரி விஷயத்தில் தமிழகத்துக்கு எதிராகச் செயல்படுவது என்ற முடிவில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது என்பதைத்தான் இன்றைய நிகழ்வு தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

வரைவுத் திட்டத்தின் நகலை மே 3ஆம் தேதி தாக்கல் செய்தே ஆகவேண்டும் என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்குக் கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி கெடு விதித்தது. அதை ஒப்புக்கொண்டு போன மத்திய அரசின் வழக்கறிஞர் சில நாட்களுக்குப் பிறகு உச்சநீதிமன்றத்தை அணுகி எங்களுக்கு இரண்டு வார கால அவகாசம் வேண்டுமென்று கேட்டார். அந்த மனுவை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை. எனவே, அதை அவர் திரும்பப் பெற்றுக் கொண்டார். இன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் சார்பில் வரைவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுவிட்டதாகவும், ஆனால், பிரதமர் கர்நாடக மாநிலத் தேர்தல் பிரசாரத்தில் இருப்பதால் அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற முடியவில்லையென்றும் எனவே, கர்நாடகத் தேர்தல் முடியும் வரை மேலும் பத்து நாள் கால அவகாசம் வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் கூறியுள்ளார். 

அதுமட்டுமின்றி “ஏப்ரல் 26 ஆம் தேதி கர்நாடக முதலமைச்சர் ஒரு கடிதம் எழுதியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியத்தில் தொழில்நுட்ப வல்லுனர்கள் இடம்பெறுவதற்குப் பதிலாக நான்கு மாநிலங்களின் நீர்வளத்துறை அமைச்சர்கள் இடம்பெறவேண்டும் என அதில் கூறியுள்ளார். அதுவும் விவாதிக்கப்படவேண்டிய பிரச்னையாக இருக்கிறது”என அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் கூறியுள்ளார். இதைப் பார்க்கும்போது கர்நாடகத் தேர்தல் முடிந்தாலும், பத்து நாட்களுக்குப் பிறகும்கூட செயல்திட்டத்தை சமர்ப்பிக்க அவர்கள் தயாராக இல்லை என்பது தெரிகிறது. 8 ஆம் தேதி போடப்பட்டிருக்கும் அடுத்த வாய்தாவிலும்கூட செயல்திட்டத்தை சமர்ப்பிக்க மாட்டார்கள் ‘கர்நாடக முதலமைச்சர் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் விவாதித்து முடிவெடுக்க மீண்டும் கால அவகாசம் வேண்டும்’என்றுதான் கேட்கப்போகிறார்கள். அதற்கான சமிக்ஞை இன்று அட்டர்னி ஜெனரலின் வாதத்திலேயே இருக்கிறது.

ஏப்ரல் 9 ஆம் தேதி கடுமையாகக் கூறிய பின்னரும் வரைவுத் திட்டம் தாக்கல் செய்யப்படாதது பற்றி உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்குக் கடுமையான கண்டனத்தையோ எச்சரிக்கையையோ தெரிவிக்கும், ‘நாளையே நீங்கள் வரைவுத் திட்டத்தைத் தாக்கல் செய்துதான் ஆக வேண்டும்’ என்று கறாராகச் சொல்லும் என்றுதான் தமிழ்நாட்டு மக்களாகிய நாம் அப்பாவித்தனமாக எதிர்பார்த்தோம். ஆனால், அதுபோல எதையும் உச்சநீதிமன்றம் செய்யவில்லை. இது, மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு ஆதரவாகவும் தமிழ்நாட்டுக்கு எதிராகவும் உச்சநீதிமன்றம் செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டை வலுப்படுத்துகிறது.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு காவிரி பிரச்னையில் அளித்த தீர்ப்பும், அதைத் தொடர்ந்து பிறப்பித்துவரும் உத்தரவுகளும் மத்திய அரசின் இழுத்தடிக்கும் போக்குக்கு ஒத்தாசையாகவும் தமிழ்நாட்டு நலன்களுக்கு எதிராகவுமே அமைந்துவருகின்றன.

* 2018 பிப்ரவரி 16 ஆம் தேதியன்று காவிரிப் பிரச்சனையில் உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் தமிழ்நாட்டின் பங்கிலிருந்து 14.75 டிஎம்சி தண்ணீரை உச்சநீதிமன்றம் குறைத்து உத்தரவிட்டது.

* உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழ்நாட்டுக்குப் பாதகமானது என்று தெரிந்திருந்தும், ‘இந்தத் தீர்ப்பை எதிர்த்து யாரும் மேல்முறையீடு செய்ய முடியாது’ என உத்தரவிட்டதன் மூலம் நியாயம் கேட்பதற்கான தமிழ்நாட்டின் உரிமையைப் பறித்தது.

* தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டாலும் இந்தத் தண்ணீராவது நமக்கு வந்தால் போதும் என்ற நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்பட்ட நாம் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் மேலாண்மை வாரியமும், ஒழுங்காற்றுக்குழுவும் அமைக்கப்படும் என எதிர்பார்த்தோம். ஆனால், ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என உச்சநீதிமன்றம் கூறவில்லை. ஸ்கீம் என்ற சொல் ஒரு செயல்திட்டத்தையே குறிக்கும். எனவே ஒரு செயல் திட்டத்தைத்தான் நாங்கள் உருவாக்குவோம்’ என மத்திய அரசு கூறியது.

மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை அமைக்க வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றம் தெளிவாகக் கூறியிருந்தாலும், அதை உச்சநீதிமன்றமும் தனது தீர்ப்பில் மறுக்கவில்லை என்றாலும், ஸ்கீம் தான் உருவாக்குவோம் என மத்திய அரசு சொன்னபோது உச்சநீதிமன்றம் அதை மறுக்கவில்லை. மாறாக, ‘நாங்கள் எங்களது தீர்ப்பில் ‘ஸ்கீம்’ என்றுதான் சொன்னோம், மேலாண்மை வாரியம் என்று சொல்லவில்லை’ எனக் கூறியது. அதன்மூலம் மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தனது நிலைபாட்டை மாற்றிக்கொண்டது.

* உச்சநீதிமன்றமே ‘ஸ்கீம்’ என்றுதான் கூறினோம் எனச் சொன்னதற்குப் பிறகு ஸ்கீம் என்றால் என்னவென்று விளக்கம் தர வேண்டும் என்று மத்திய அரசு மீண்டும் மனுதாக்கல் செய்தது. கால அவகாசமும் கேட்டது. கால அவகாசத்தை மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நேரடியாக வழங்கவில்லை. ஆனால், இந்த வழக்கை ஒத்திப்போட்டதன் மூலம் அவர்கள் கேட்ட கால அவகாசத்தை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது என்பதே உண்மை.

* செயல்திட்டத்தை உருவாக்குவதில் மத்திய அரசு உண்மையிலேயே அக்கறையோடு இருக்கிறதா என்பதை நிரூபிப்பதற்கு மே 3ஆம் தேதி அதன் வரைவுத் திட்டத்தைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியது. இந்நிலையில்தான், பிரதமர் தேர்தல் பிரசாரத்துக்குப் போயிருக்கிறார் என்ற காரணத்தைச் சொல்லி மத்திய அரசு இந்த வழக்கை மேலும் இழுத்தடிக்கிறது. இப்போதும் அவர்கள் கேட்ட கால அவகாசத்தை மறைமுகமாக உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது என்பதாகவே பார்க்க முடிகிறது.

பிரதமர் என்பவர் இந்திய அரசாங்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர். அவருடைய முதன்மையான பணி மக்களுடைய தேவைகள் சார்ந்த பிரச்னைகளில் முடிவெடுப்பதுதான். தேர்தல் பிரசாரம் என்பது ஒரு கட்சியின் தலைவராக அவர் செய்கிற வேலையாகும். பிரதமர் ஒரு கட்சியின் அங்கம்தான் என்றாலும்கூட, கட்சிப் பணியை விட ஆட்சிப்பணிக்கே அவர் முன்னுரிமை தர வேண்டும். ஏழரை கோடி மக்களுடைய தலைவிதியைத் தீர்மானிக்கிற, அவர்களுடைய உயிராதாரப் பிரச்சனையாக இருக்கிற காவிரி விஷயத்தில் முடிவெடுப்பதற்கு நேரம் ஒதுக்காமல், அதுபற்றி அக்கறை காட்டாமல், ஒரு சட்டமன்றத் தேர்தலில் தனது கட்சி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக வாக்கு சேகரிப்பதற்கு முன்னுரிமை கொடுக்கிறார் என்றால், அவர் ஒட்டுமொத்த நாட்டின் பிரதமர்தானா என்ற கேள்விதான் எழுகிறது. இதை நீதிமன்றம் எவ்வாறு சகித்துக் கொள்கிறது என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது.

இந்திய எல்லையில் அந்நிய நாட்டுப் படைகள் ஒருவேளை குவிக்கப்பட்டிருந்தால், போர் அபாயம் ஏற்படும் என்ற ஒரு சூழல் ஏற்பட்டிருந்தால் வாக்கு சேகரிப்பதற்காகப் போகிறேன். அதைப்பற்றி தேர்தலுக்குப் பிறகு முடிவெடுப்பேன் என்று பிரதமர் கூறுவாரா? அப்படிக் கூறினால் அவர் பிரதமராக இருக்கத் தகுதியானவர் தானா? என்ற கேள்வி நாட்டு மக்களிடையே எழாதா? இப்போது ஏற்பட்டிருக்கிற பிரச்சனை ஒரு யுத்த சூழலைவிடத் தீவிரமானது. ஒரு மாநிலத்தின் மக்கள் குடிதண்ணீருக்கே அவதிப்படுகிற நேரத்தில் அதைப்பற்றிக் கவலைப்பட மாட்டேன். நான் வாக்கு சேகரிப்பதில்தான் கவனம் செலுத்துவேன் என்று சொல்கிற ஒரு பிரதமரை இந்த நாடு இப்போதுதான் பார்க்கிறது.

இந்திய நாட்டின் தலைமை வழக்கறிஞர் என்பவர் இந்திய அரசுக்கு உச்சநீதிமன்றத்தில் வாதாடுகிறவரே தவிர, ஆளும் கட்சிக்கு வாதாடுகிற வழக்கறிஞர் அல்ல. இன்று, தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் முன்வைத்திருக்கிற காரணங்கள் அவர் பா.ஜ.க.வுக்கு ஆஜரான தனிப்பட்ட வழக்கறிஞரா? அல்லது இந்திய அரசின் தலைமை வழக்கறிஞரா என்கிற ஐயத்தை நமக்கு ஏற்படுத்துகிறது.

சட்டத்தின் ஆட்சி என்று சொன்னால், சட்டத்திலும் இதற்கு முந்தைய நீதிமன்ற தீர்ப்புகளிலும் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ அதன்படி ஆட்சி செய்வதுதான். மாறாக, அரசியல் ஆதாயங்களைக் கருத்தில் கொண்டு செய்யப்படுகிற ஆட்சி நிச்சயம் சட்டத்தின் ஆட்சியாக இருக்க முடியாது. உச்சநீதிமன்றம் இதை அறியாதது அல்ல. இவற்றையெல்லாம் அறிந்திருந்தும், ஒருமுறைக்கு இருமுறையாக உச்சநீதிமன்றத்தின் கெடுவை மத்திய அரசு மதிக்காமல் உதாசீனப்படுத்துகிறது என்பதைப் பார்த்தும், அதைப்பற்றிக் கவலைப்படாமல், அதற்காகக் கோபப்படாமல் மீண்டும் மீண்டும் வழக்கை ஒத்திப்போட்டுக் கொண்டே போவது உச்சநீதிமன்றம் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு இணக்கமாக இருக்க விரும்புகிறதேயொழிய, அது சட்டத்தின் ஆட்சியை செயல்படுத்த விரும்பவில்லை என்ற எண்ணத்தையே மக்களிடம் ஏற்படுத்தும்.

கர்நாடக சட்டமன்றத் தேர்தலைக் காரணமாக இப்போதைக்கு பா.ஜ.க. சொல்கிறது. ஆனால், அந்தத் தேர்தலில் அவர்கள் வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் தமிழ்நாட்டுக்குக் காவிரியில் உள்ள உரிமையை நிலைநாட்டும் விதமாக எந்த நடவடிக்கையையும் மத்தியில் ஆளும் பாஜக அரசு எடுக்கப்போவதில்லை. ஏனென்றால், பா.ஜ.க.வின் இலக்கு கர்நாடக சட்டமன்றத் தேர்தல் மட்டுமல்ல இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள 2019 பாராளுமன்றத் தேர்தல்.
 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close