[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

உஸ்தாத் பிஸ்மில்லா கான்: மதங்களை கடந்த இசை கலைஞன்

ustad-bismilla-khan-a-musician-for-all-religions

மகுடிக்கு தலையாட்டும் பாம்பை போல, இவரின் ஷெனாய் இசைக்கு மயங்காதவர்களே இருக்க முடியாது. உலக ஷெனாய் இசைக் கலைஞர்களில் முதன்மையானவர் இந்தியாவின் பெருமையாக திகழ்ந்த "பாரத ரத்னா" உஸ்தாத் பிஸ்மில்லா கான். அவரின் 102 ஆவது பிறந்தநாளை இணையதள தேடுபொறியான கூகுள் சிறப்பு டூடுலின் மூலம் இன்று கொண்டாடி வருகிறது.

பிஹார் மாநிலம் தும்ரான் கிராமத்தில் 1916 ஆம் ஆண்டு பிறந்தார் உஸ்தாத் பிஸ்மில்லா கான். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் கமருதீன். இவர் பிறந்தபோது பார்க்க வந்த தாத்தா, குழந்தையை பார்த்து "பிஸ்மில்லா" என்று அழைத்தார். அதன் பின்பு, பிஸ்மில்லா கான் என்ற பெயரே நிலைத்துவிட்டது. பிஸ்மில்லா கான் குடும்பத்தினரில் ஒருவரான, அவரது மாமா அலி பஷ் புகழ்ப்பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலில் பல ஆண்டுகளாக இசை சேவை செய்து வந்தவர். காசி விஸ்வநாதர் கோயிலில் ஷெனாய் இசையை வாசித்து வந்தவர். இதனை குழந்தையில் இருந்தே கேட்டு வளர்ந்த பிஸ்மில்லா கான், ஷெனாய் இசைக்கு அடிமையானார். தன் மாமா ஷெனாய் வாசிப்பதை கேட்ட குழந்தை பிஸ்மில்லா மூன்று வயதாக இருக்கும்போதே கண்களை மூடிக்கொண்டு ஷெனாய் இசையில் திளைத்திருக்கிறார்.

குழந்தையின் இசை ஆர்வத்தை கண்ட மாமா, பிஸ்மில்லாவுக்கு குருவாய் இருந்து ஷெனாய் இசையை பயிற்றுவிக்க தொடங்கினார். கங்கைக் கரையோரத்தில் உள்ள வெங்கடேச பெருமாள் ஆலயத்தில் தினசரி ஷெனாய் இசை பயிற்றுவிக்கத் தொடங்கினார். பின்பு, தன் குருவான மாமா இறந்த பிறகு தானாகவே பயிற்சி செய்து தும்ரி, சைத்தி, கஜ்ரி, ஸவானி ஆகிய இசை வடிவங்களில் நிபுணத்துவம் பெற்றார். கயால் (Khayal) இசையிலும் வல்லுநர் ஆனார். கொல்கத்தாவில் 1937 ஆம்  நடந்த தேசிய இசை மாநாட்டில் தனது அற்புத ஷெனாய் இசையால் அனைவரையும் கவர்ந்தார். பின்பு, 1938 ஆம் ஆண்டு லக்னோ அகில இந்திய வானொலியில் ஷெனாய் இசைத்தார். அதன் பிறகு வானொலியில் அடிக்கடி இவரது இசை உலா வந்தது. இவர் சாதனை அனைத்துக்கும் பாலாஜியின் அருளே காரணம் என்பார். 

ஷெனாய் இசைக் கருவி ஒரு குறிப்பிட்ட மதத்தினர் மற்றும் குறிப்பிட்ட இசை வடிவங்களில் மட்டுமே வாசிக்க முடியும் என்ற பிம்பத்தை உடைத்தெறிந்தார் பிஸ்மில்லா. கல்யாண வீடுகளில் மட்டுமே இசைக்கப்பட்ட ஷெனாய் இசைக் கருவியை சாஸ்திரீய கச்சேரி மேடைக்கு கொண்டுவந்து உலகப்புகழ் பெறவைத்து, இசைக் கலைஞர்களின் புருவங்களை உயர வைத்தார். முக்கியமாக கர்நாடக இசையையும், தனது ஷெனாயின் மூலம் வெளியே கொண்டு வந்தார் அவர். பைரவி ராகத்தில் இவர் வாசித்த ஷெனாய் இசையை உலகம் இருக்கும் வரை மறக்க முடியாது. மேலும், புகழ்ப்பெற்ற இந்திய மற்றும் வெளிநாட்டு இசைக் கலைஞர்களோட மேடைகளை பகிர்ந்து பல்வேறு இசை வடிவங்களை கொடுத்துள்ளார். முக்கியமாக இந்துஸ்தானி இசையுடன் இவர் மேற்கொண்ட "பியூஷன்" இசை கோர்வைகள் பிரமிக்கக் கூடிய வகையில் இருந்தது.  

பிஸ்மில்லா கான் உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். ஆப்கானிஸ்தான், ஐரோப்பிய நாடுகள், வளைகுடா நாடுகள், ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் என்று உலகம் முழுவதும் இவருக்கு மாபெரும் ரசிகர் கூட்டம் உண்டு. இந்தியாவிலும் இவரது கால்படாத முக்கிய நகரங்களே இல்லை என கூறலாம். எந்த ஊருக்கு சென்றாலும் "ஜூகல் பந்தி" வைக்கும் மாமேதையாவார் பிஸ்மில்லா கான். 1947- ஆம் ஆண்டு இந்திய சுதந்திரமடைந்தபோது செங்கோட்டையில் இவரது இசையுடன்தான் நம் நாட்டுக்கான சுதந்திரம் பிறந்தது என்பது நம்மில் பலருக்கும் தெரியாத விஷயம். 1950-ல் நாட்டின் முதல் குடியரசு தின விழாவிலும் இவரது இசை இடம்பெற்றது. தேசிய அளவிலான முக்கிய விழாக்கள் எதுவும் இவரது இசை இல்லாமல் நடந்ததில்லை. பிரிட்டீஷ் அரசாங்கம் இவரின் திறமையை அங்கீகரித்து அவரை லண்டனில் குடியேற சொல்லியது அதற்கு பிஸ்மில்லா கான் கூறிய பதில் "நான் நாள்தோறும் கங்கையை நோக்கி ஷெனாயை இசைப்பதை வழக்கமாக கொண்டுள்ளேன், என் குடும்பமே அதை செய்து வருகிறது. இதையெல்லாம் விட்டுவிட்டு லண்டனுக்கு வந்த நான் என்ன செய்ய" என கூறினார்.

பனாரஸ், சாந்திநிகேதன் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கின. சங்கீத நாடக அகாடமி விருது முதல் பத்மபூஷண் வரை ஏராளமான விருதுகளைப் பெற்றவர். 2001-ல் நாட்டின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ வழங்கப்பட்டது. இஸ்லாமியராக இருந்தாலும் காலமெல்லாம் காசியிலேயே வளர்ந்ததால் என்னவோ, எப்போதும் அவர் சொல்லும் வார்த்தை "கங்கா மாயி" அதாவது அன்னை கங்கா என்று போற்றியப்படியே வாழ்ந்தார். பிஸ்மில்லா கானினன் குடும்பம் மிகப்பெரியது. தன்னுடைய இறுதிநாள் வரை எளிமையாகவே வாழ்ந்தார். புகழின் உச்சத்தில் இருந்தபோதும் கூட சைக்கிள் ரிக்ஷாவில்தான் எப்போதும் சென்று வந்தார். தன்னுடைய இறுதி நாட்களுக்கு முன்புக் கூட இவர் வறுமையில் வாழ்ந்ததாக செய்திகள் வெளியாகின. கங்கையின் கரையோரங்களில் ஒலித்துக் கொண்டிருந்த உஸ்தாத் பிஸ்மில்லா கானின் ஷெனாய்க்கு 2006 ஆம் ஆண்டு ஓய்வு கிடைத்தது, ஆம் தனது 90 ஆவது வயதில் மறைந்தார். காலமெல்லாம் தன்னுடைய மூச்சுக் காற்றை இசையாக மாற்றி தந்தவர் இல்லாது போனபோது  இசை உலகம் நிர்மூலமானது. அது மீண்டும் நிமிர்ந்து நிற்க ஒரு பிஸ்மில்லா கான் இனிதான் பிறந்து வர வேண்டும். ஆம்! இவர் ஒரு "மதங்களை கடந்த இசை மகான்".
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close