[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தேர்தலை நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடத்த நடவடிக்கை: மாவட்ட தேர்தல் அலுவலர்
  • BREAKING-NEWS மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும்: ஹர்திக் படேல்
  • BREAKING-NEWS ஹிமாச்சலப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தனது ஆட்சியை பறிக்கொடுக்கிறது
  • BREAKING-NEWS பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி தொலைபேசியில் வாழ்த்து
  • BREAKING-NEWS குஜராத், ஹிமாச்சல் மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதி- உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
  • BREAKING-NEWS சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தொண்டர்கள் கொண்டாட்டம்
  • BREAKING-NEWS குஜராத்தில் மொத்த தொகுதி- 182; முன்னணி நிலவரம்- பாஜக -103, காங்கிரஸ் -78, மற்றவை-1
  • BREAKING-NEWS ஹிமாச்சலில் மொத்த தொகுதி- 68; முன்னணி நிலவரம்- பாஜக -41, காங்கிரஸ்-22, மற்றவை-5
  • BREAKING-NEWS குஜராத்தில் மொத்த தொகுதி- 182;முன்னணி நிலவரம்- பாஜக -98, காங்கிரஸ் -80, மற்றவை-4
  • BREAKING-NEWS குஜராத், ஹிமாச்சல் சட்டப்பேரவை தேர்தல்: இரண்டு மாநிலங்களிலும் பாஜக முன்னிலை
  • BREAKING-NEWS மேட்டூர் அணையின் 16 கண் உபரி நீர் போக்கியில் தேங்கிய தண்ணீரில் மூழ்கி 4 சிறுவர்கள் பலி
  • BREAKING-NEWS 8 மணிக்கு தொடங்குகிறது குஜராத், இமாச்சலில் வாக்கு எண்ணிக்கை
  • BREAKING-NEWS ஆர்.கே.நகரில் வார்டு வாரியாக மகளிர் குழு மூலம் பணப்பட்டுவாடா நடக்கிறது: தமிழிசை
  • BREAKING-NEWS இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது
சிறப்புக் கட்டுரைகள் 01 Dec, 2017 05:57 PM

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: வாழ்வா? சாவா? என்ற கட்டாயம் ஏற்பட்டது ஏன்?

rk-nagar-byelection-important-for-dmk-admk-and-other-parties

தமிழகம் மட்டுமன்றி, இந்திய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது ஆர்.கே.நகர் சட்டப்பேரவை இடைத்தேர்தல். ஜெயலலிதா மறைவால் 12 மாதங்களாக காலியாகவுள்ள அந்தத் தொகுதிக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதலே பரபரத்துக் கிடக்கிறது அரசியல் களம். இந்த தேர்தல் ஆளும் ஈ.பி.எஸ். - ஓ.பி.எஸ். தரப்புக்கும், எதிர்க்கட்சியான தி.மு.க.வுக்கும் வாழ்வா? சாவா? போராட்டம் போன்றது. டி.டி.வி.தினகரனும் களத்தில் மல்லுக்கட்ட தயாராகியுள்ளதால், இரு தரப்புக்கும் கெளரவப் பிரச்னையாகவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மாறியிருக்கிறது. 1999ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இடைத்தேர்தல்களில் இதுவரை ஆளுங்கட்சி தோற்றதில்லை என்ற வரலாறு இருக்கிறது. அது தொடருமானால் இரண்டாமிடம் தி.மு.க.வுக்கா? தினகரனுக்கா? என்ற மிகப் பெரிய கேள்வியும் எழுந்திருக்கிறது.

இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது ஏன்?

இத்தொகுதியில் போட்டியிட்டு வென்ற ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி உயிரிழந்தார். அதன் பிறகு அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு இரு அணிகள் உருவாகின; கட்சியும், இரட்டை இலை சின்னமும் முடக்கப்பட்டன. இந்த சூழலில், ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அம்மா அணியில் (சசிகலா) டி.டி.வி.தினகரனும், அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணி (ஓ.பன்னீர்செல்வம்) சார்பில் மதுசூதனனும் களத்தில் இறங்கினர். இருவரும், வெவ்வேறு சின்னங்களில் போட்டியிட்டனர். 

கடும் போட்டி நிலவிய சூழலில், தேர்தல் பரப்புரையின்போது கோடை வெயிலில் வாக்காளர்கள் மீது பொழிந்த பணமழையால், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டன. அப்போது தினகரனுக்கு ஆதரவாக 89 கோடி ரூபாய் பணம் கொடுக்கப்பட்டு இருப்பதை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் சிக்கின. ஒரு வாக்குக்கு 4 ஆயிரம் ரூபாய் என்ற அளவுக்கு பணம் விளையாடியது. தேர்தல் ஆணைய விதிப்படி சட்டப்பேரவை தேர்தலில் ஒரு வேட்பாளர் அதிகபட்சம் 28 லட்சம் ரூபாய் வரைதான் செலவு செய்ய முடியும் என்கிற நிலையில், 89 கோடி ரூபாய் விநியோகமா? என்று அதிர்ச்சியில் உறைந்துபோனது தேர்தல் ஆணையம் மட்டுமல்ல; மக்களும்தான்! இதனால், வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு 2 நாட்களுக்கு முன் தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்தது.

சூழ்நிலை சரியாகிவிட்டதா?

ஆர்.கே.நகரில் சூழ்நிலை சரியான பிறகு தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்த தேர்தல் ஆணையம், கண்டுபிடிக்கப்பட்ட பணப்பட்டுவாடா முறைகேடுகள் தொடர்பாக எவரையும் தண்டிக்கவில்லை. மாறாக, சென்னை உயர் நீதிமன்றம் விதித்த இறுதி கெடுவுக்கு பிறகு சூழ்நிலையை சரிசெய்யாமலேயே தேர்தல் தேதியை அறிவித்துள்ளது. ஈ.பி.எஸ். - ஓ.பி.எஸ். தரப்புக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்ட மறுநாளே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், இதில் உள்நோக்கம் இருப்பதாக தேர்தல் ஆணையத்தின் மீதும், மத்திய அரசு மீதும் எதிர்க்கட்சிகள் சந்தேகம் எழுப்புகின்றன.

தேர்தல் ஆணையம் கிடுக்கிப்பிடி

விமர்சனங்கள் ஒருபுறம் இருக்க, கடந்த முறைபோல் இப்போதும் முறைகேடுகள் நடந்துவிடக் கூடாது என்பதில் தேர்தல் ஆணையம் மிகவும் உறுதியாக இருப்பதை அதன் கண்காணிப்பு, சோதனை நடவடிக்கைகளில் இருந்தே அறிந்து கொள்ள முடிகிறது. தேர்தலில் வெற்றிபெற அரசியல் கட்சிகள் வியூகம் வகுப்பது மாறி, தேர்தல் ஆணையமும் அதே நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதையும் உணர முடிகிறது.

தேர்தலை நேர்மையாக நடத்திடுவதன் முதல்கட்டமாக இத்தொகுதியில் இடம்பெற்றிருந்த 45ஆயிரத்து 899 போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி 2 லட்சத்து 19 ஆயிரத்து 409 வாக்காளர்கள் இருக்கின்றனர். அதிகளவு பணம், நூதன முறையில் பரிசுப் பொருட்கள் விநியோகிப்பதை தடுப்பதற்காக, வியூகம் வகுத்து அதிகாரிகள் செயல்படுகின்றனர். வாகனங்களுக்கு அடையாள அட்டை வழங்கும் திட்டம், சுவர் விளம்பரம் செய்யத் தடை, டோக்கனுக்கு பொருட்கள் விநியோகிக்க தடை, மாலை 6 மணி முதல் காலை 9 மணி வரை வீடு வீடாகச் சென்று வாக்கு கேட்க தடை, வெளியூர் வாகனங்கள் வந்தால் பறிமுதல், தெருக்களில் துணை ராணும் பாதுகாப்பு, அரசியல் கட்சிகள் பணிமனைகள் திறந்து அமரக் கூடாது என்று தேர்தல் ஆணையம் முன்னெப்போதும் இல்லாத வகையில் கிடுக்கிப்பிடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

ஆட்சி அதிகாரம் கூடுதல் பலம்

கடந்த ஏப்ரலில் நடைபெறுவதாக இருந்த இடைத்தேர்தலை இரு அணிகளாக சந்தித்த ஈ.பி.எஸ். - ஓ.பி.எஸ்., தற்போது ஒன்றிணைந்து தேர்தலை எதிர்கொள்கின்றன. முடக்கப்பட்ட கட்சியும், சின்னமும் இந்த அணிக்கு கிடைத்திருக்கின்றன. இருந்தபோதிலும், ஈ.பி.எஸ். - ஓ.பி.எஸ். அணியில் இன்னும் 'மனங்கள் இணையாததால்',  முட்டல் மோதல் இருந்து கொண்டே இருக்கிறது. இது வேட்பாளர் தேர்விலும் எதிரொலித்தது. தற்போது சடுகுடு ஆட்டங்கள் நிறைவடைந்து மதுசூதனன் மீண்டும் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார். 

இரட்டை இலை சின்னம் கிடைத்துவிட்டதால் வெற்றி நமக்குதான் என்று, தலைவர்களும், தொண்டர்களும் உற்சாகமாக கூறுகின்றனர். ஆனால், ஒற்றுமையோடு இருந்தால்தான் வெற்றி கிடைக்கும் என்று, ஓ.பி.எஸ். மீண்டும் சொல்லியிருப்பதன் மூலம், உட்கட்சிப்பூசல் நீடிப்பது தெளிவாகிறது. மேலும், இரட்டை இலை மட்டுமே வெற்றியை தீர்மானித்து விடாது என்பதும், கடந்த காலங்களில் தோற்ற வரலாறும் இருக்கிறது என்பதையும் ஓ.பி.எஸ். பேச்சு சுட்டிக்காட்டுகிறது.

அணிகள் சேர்ந்து, இரட்டை இலையை பெற்ற பிறகு நடைபெறும் இந்த தேர்தலில் வெற்றி பெற்றால்தான் ஈ.பி.எஸ். - ஓ.பி.எஸ். அணியினரை தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்கள். காட்சி மாறினால், ஆட்சி மீதும், ஈ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மீதும் மக்களின் மன நிலை மாறிவிடும். கட்சியிலேயே மீண்டும் எதிர்ப்பு ஏற்படும். எனினும் தேர்தலை எதிர்கொள்ள ஆட்சி அதிகாரம் இருப்பது அவர்களுக்கு கூடுதல் பலம்.

இந்த இடத்தில் ஒன்றை குறிப்பிட்டாக வேண்டும். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு நடைபெற்ற திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய தேர்தல்களில் ஈ.பி.எஸ். - ஓ.பி.எஸ். வெற்றி பெற்றிருக்கிறது. தற்போது இதில் என்ன வித்தியாசம் என்றால், ஜெயலலிதா உயிருடன் இல்லை; சசிகலா சிறையில் இருக்கிறார். அவ்வளவுதான்.

வாழ்வா? சாவா? நிலை ஏன்? 

டி.டி.வி.தினகரன் வெற்றி பெற்றால், இனி அ.தி.மு.க.வின் எதிர்காலம் அவர்தான் என்றாகிவிடும். ஆனால், கடந்த முறை ஆட்சி அதிகாரம், பண பலம் போன்றவற்றால் 'தொப்பி' சின்னத்தில் களமிறங்கினார். தற்போது தினகரன் நிலையோ தலைகீழ். கொஞ்சமிருந்த எம்.பி.க்களும் அணி தாவி விட்டார்கள். பழைய நிலையைபோல் இல்லாததால், ஆடுகளம் அவருக்கு கைகொடுக்குமா என்பது கேள்விக்குறி. தோற்றுப்போனால் உடன் இருக்கிறவர்களையும் இழந்து தனியாளாக நிற்க வேண்டிவரும். அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். 

தி.மு.க.விற்கு இக்கட்டான நிலை

உட்கட்சி குழப்பத்தால் ஆளும் கட்சி பலவீனம், தினகரன் போட்டியால் அ.தி.மு.க. வாக்குகள் சிதறும் என்பதால் தி.மு.க.வுக்கு லாபம்; மேலும் கூட்டணி கட்சியான காங்கிரஸ் தவிர்த்து விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளதால், தி.மு.க. உற்சாகமாகவே இருப்பதை காணமுடிகிறது. தற்போதுள்ள சூழ்நிலையில் தமிழகத்தில் அரசியல் மாற்று தி.மு.க.தான் என்று மக்கள் எண்ணுவதாக ஸ்டாலின் கூறி வருகிறார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகான வெற்றிடத்தை நம்மால் மட்டுமே நிரப்ப முடியும் என்றும் நினைக்கிறார். தொண்டர்களும் இனி நம்முடைய ஆட்சிதான் எனறு உறுதியாக நம்புகிறார்கள். 

ஆர்.கே.நகரில் வெற்றி வாய்ப்பை இழந்தால் திமுகவுக்கு அது பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். பணநாயகம் வென்றது; ஜனநாயகம் தோற்றது என்று வேண்டுமானால் அறிக்கை விடலாம். ஆனால், மக்கள் மத்தியில் தி.மு.க.வின் செல்வாக்கு இந்த அளவுக்குதான் என்றாகிவிடும். எதிர்காலத்தில் தேர்தலில் தி.மு.க.வால் வெற்றியடைய முடியுமா என்ற சந்தேகம் ஏற்படும். அ.தி.மு.க.வில் இத்தனை குழப்பங்களும் இருந்தபோதிலும் வெற்றி கிடைத்தால் தி.மு.க.வின் நிலைமை இக்கட்டாகிவிடும். தொண்டர்கள் சோர்வடைவார்கள். ஸ்டாலின் தலைமை பண்பு மீது கேள்வி எழும். எனவே இத்தேர்தலில் வெற்றி பெற்றேயாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. அப்போதுதான் தொண்டர்களின் மனம் மாறாமல் இருக்கும்.

எதிர்கால தேர்தலுக்கும் முன்னோட்டம்

வட சென்னையில் இருக்கும் ஆர்.கே.நகரின் தேர்தல் முடிவு, ஒரு தேர்தலுக்கானதாக மட்டுமே பார்க்க முடியாது. இணைந்திருக்கும் ஈ.பி.எஸ். - ஓ.பி.எஸ்., மு.க.ஸ்டாலின், தினகரன் ஆகியோரின் எதிர்கால அரசியல் கனவுகளை இந்த தேர்தல் முடிவு நிர்ணயிக்கும். அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் யாருக்கு சாதகமாக அமையும் என்பதையும் தீர்மானிக்கும்.

மக்கள் உறுதிமொழி எடுக்க வேண்டும்

பண விநியோகம் தாறுமாறாக நடந்ததற்காக தேர்தல் ரத்து செய்யப்பட்ட அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டபோது புகாருக்கு உள்ளான வேட்பாளர்கள்தான் போட்டியிட்டனர். அவர்களில் ஒருவர் வெற்றியும் பெற்றார். இப்போது ஆர்.கே.நகரிலும் அதே நிலைதான். எனவே நாம்தான் எஜமானர்கள் என்பதை வாக்காளர்கள் உணர வேண்டும். ஐநூறுக்கும், ஆயிரத்திற்கும் ஆசைப்பட்டு வாக்கை விற்கும் நிலை இனியும் கூடாது.

பணப்பட்டுவாடா நடப்பது தெரிந்தால் தேர்தல் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். பணம் கொடுப்பவர்களை 'விரட்டியடிக்க' வேண்டும். பல அரசியல் திருப்பங்களுக்கு காரணமாகப் போகிற ஆர்.கே.நகர் தொகுதி மக்கள், வாக்குகளை விலைக்கு வாங்கும் 'திருமங்கலம் பார்முலா’ கலாச்சாரத்திற்கும் முடிவு கட்ட வேண்டும். அப்போதுதான் உண்மையான ஜனநாயகம் மலரும்.

-ஜி.எஸ்.பாலமுருகன்

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close