[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு
  • BREAKING-NEWS ராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்

புயலில் ஏன் விழுந்தன மரங்கள்?

vardah-effect-on-tress

சென்னையைப் புரட்டிப் போட்ட “வர்தா” புயலுக்கு ஆயிரக்கணக்கான மரங்கள் இரையானதை செய்திகளில் பார்த்தோம். ஆனால் அந்த மரங்கள் ஏன் விழுந்தன என்பதைச் சிந்தித்துப் பார்த்ததுண்டா?.

அந்த மரங்களை யாராவது சற்று உற்று கவனித்தீர்களா?. அந்த மரங்கள் அனைத்தும் இந்த மண்சார்ந்த இயல் மரங்களா அல்லது அயல் மரங்களா?. இந்த மண் சார்ந்த மரங்கள் அவ்வளவு எளிதில் விழ வாய்ப்பில்லை. அப்படியே விழுந்தவைகள் கூட வேர்ப்பிடிப்பு பகுதிகளில் காங்க்ரீட் கலவை கொட்டப்படுவது போன்ற மனிதக் காரணங்களால் வலுவிழந்தவைகளாக இருக்கும். வேரோடு சாய்ந்த மரங்களில் பெரும்பாலானவை தூங்குமூஞ்சி, மேஃபிளவர் போன்ற அன்னிய மரங்களாகத்தான் இருக்கும். இந்த மரங்கள் வரலாறு காணாத வகையில் அளவில்லாமல் விழுந்துவிட்டதையும் பார்த்தோம். இதனால் எவ்வளவு இழப்புகள் பாதிப்புகள். கணக்கற்ற வாகனங்கள் நொறுங்கியது. பல இடங்களில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது இது உடனே சரிபடுத்தக்கூடியதா?. இதை முற்றிலுமாக சரிபடுத்த இன்னும் எத்தனை நாட்கள் ஆகும்?. மரம் விழுந்ததினால் தனிப்பட்டமுறையில் உடமைகளை இழந்தவர்களின் இழப்பை சரிசெய்வது எப்படி?. உடனடியாக தீர்வில்லாத கேள்விகள் இவை. இதற்கெல்லாம் காரணம் நகரத்துக்குள் விரைவாக வளர வேண்டும் என்பதற்காக நடப்படும் அயல் மரங்களே. பாதிப்புகளை முற்றாக தவிர்க்க முடியாவிட்டாலும், ஓரளவாவது பாதிப்புகளை குறைக்க இனியாவது அரசு அமைப்புகள் முயற்சிக்க வேண்டும் இந்த காரணிகளைக் கருத்தில் கொண்டு நமது மண் சார்ந்த இயல் மரங்களை நடுவது நல்லது.

இதுவரை தற்காலிக இழப்புகளை மட்டுமே பார்த்தோம் இனி நீண்டகால பாதிப்புகளையும் இழப்புகளையும் பார்ப்போம்.

பொதுவாக இதுபோன்ற இயற்கைப் பேரிடர் காலங்களில் ஏற்படும் பொருள் இழப்புகள், போக்குவரத்து பாதிப்பு, மின் இணைப்பு துண்டிப்பு, தகவல்தொடர்பு முடக்கம் போன்றவற்றைத்தான் இழப்புகளாகப் பார்க்கிறோம். மரங்களின் இழப்பு தீவிரமாக நம்மை பாதிப்பதில்லை. அவற்றை இன்னும் பலர் உணரவில்லை. அவை இந்த அளவு வளர எத்தனை நாட்கள் ஆகியிருக்கும்?. வேரோடு வீழ்ந்த மரங்களின் வேலைகளை இனி யார் செய்வார்?. உணவைக் கூட தொழிற்கூடங்களில் தயாரித்துவிடலாம், ஆனால் காற்றை?. காற்றிலுள்ள உயிர் வளியை யார் உருவாக்க முடியும்?. கரியமில வாயுவை இனி யார் ஆக்ஸிஜன் என்கிற உயிர் வளியாக மாற்றுவார் அல்லது மாற்ற முடியும்?. புவி வெப்பத்தைக் குறைப்பதில் அந்த மரங்கள் செய்த பங்களிப்பை யார் செய்ய முடியும்?. விழுந்த மரத்தின் அளவை உலகளவில் ஒப்பிட்டால் மிக குறைவான எண்ணிக்கைதான் என்றாலும், விழுந்த மரங்கள் செய்த பணியை ஈடுகட்ட நீண்டநாட்கள் ஆகும். ஏற்கனவே சாலை விரிவாக்கம் நகர விரிவாக்கம் என்கிற பெயரில் மரத்தை வகைதொகையில்லாமல் இழந்துகொண்டிருக்கிறோம். ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு சுமாராக எண்ணூறு கிராம் அளவில் உயிர்வளி தேவைப்படுகிறது. அவற்றை இலவசமாகவே மரங்கள் நமக்குத் தருகின்றன. இதையெல்லாம் மனிதனின் பொருளாதாரக் கணக்கினால் மதிப்பிடவே முடியாது!. ஒரு மரம் பல்லுயிர்ச் சூழலை பேணக்கூடியதாக இருக்க வேண்டும். அதாவது அந்தத் தாவரங்கள் மற்ற உயிரினங்களுக்கு உணவாகவோ அல்லது இருப்பிடங்களாகவோ இருக்க வேண்டும். அயல் மரங்களில் பெரும்பாலானவற்றில் மற்ற உயிரினங்களுக்கு உணவு கிடைப்பதில்லை. மேலும், மற்ற உயிரினங்கள் அவற்றில் வசிப்பதும் இல்லை. இந்த காரணியை இதுவரை கவனிக்கவில்லையெனில் இனி கவனியுங்கள்.

சரி அவைகள் கெட்ட மரங்களா?. உடனடியாக அந்த முடிவுக்கு வர முடியாது. மரங்களின் பூர்வீகத்திற்கேற்ப, அந்த மண்ணிற்கும், தட்பவெப்ப சூழலுக்கும், அங்கு மட்டும் காணப்படும் உயிரினங்களுக்கும் அந்த மரங்கள் சிறிதளவேனும் பங்காற்றும். அந்தவகையில் அயல்மரங்களாலும் நன்மை உண்டு. அதேமரங்கள் நம் மண்ணில் அதிக நீரை உறிஞ்சும் அல்லது யூகலிப்டஸ் மற்றும் சீமைக்கருவேல மரங்கள் போல காற்றிலுள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி, சூழலியல் பாதிப்பு ஏற்படுமளவு மாற்றத்தை ஏற்படுத்தலாம். இதன் விளைவாக மழை குறைவு உள்ளிட்ட தட்பவெப்ப மாற்றங்கள் கூட ஏற்பட வாய்ப்புண்டு. சரி இதற்காக என்ன செய்ய வேண்டும்? புயலில் விழுந்த மரங்களை யாராவது கணக்கெடுத்து அரசிற்கு அறிக்கையாகக் கொடுத்தால் என்றாவது இந்த நிலைமாறும். அந்தந்த பகுதி சார்ந்த மண்ணின் மரங்களை இனியாவது நடப்பட ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்த இது உதவும்.

நகரத்தில் மட்டுமல்லாது நாடு முழுவதும் சமூக காடுகள் வளர்ப்பு என்கிற பெயரில் யூகலிப்டஸ் போன்ற அயல் மரவகைகள் வளர்க்கப்படுவது தவிர்க்கப்படவேண்டும். ஏற்கனவே ஆங்கிலேயர் ஆட்சியின் போது, அவர்கள் வசதி மற்றும் தேவைகளுக்காக தேயிலை, காபி தோட்டங்களும் தேக்கு, பைன், சில்வர் ஓக், ரப்பர் போன்ற மரவகைகள் பயிரிடப்படவும், மேற்குதொடர்ச்சி மலை முழுவதும் மழைக்காடுகள் எனும் சோலைக் காடுகள் அழிக்கப்பட்டது. இதன் விளைவுதான் வற்றாத பல நதிகளை இழந்து தண்ணீருக்காக மற்ற மாநிலங்களின் தயவையோ உரிமையையோ கேட்டுக் கொண்டிருக்கிறோம். இப்போதுள்ள பாதிப்பைவிட பாதிப்பின் அளவு எதிர்காலத்தில் இன்னும் அதிகமாகக் கூடிய நிலைதான் தற்போது உள்ளது.

நமது மரங்கள்தான் இந்த மண்ணிற்கும், தட்பவெப்ப சூழலுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் ஏற்றவையாக இருப்பதோடு, ஒன்றுக்கொன்று பயனாகவும் இருக்கும். மரங்கள் உணவையும் இருப்பிடத்தையும் தரும், மற்ற உயிரினங்கள் மரங்களின் விதை பரவலில் உதவும். நம் மரங்கள் தாமதமாகத்தான் வளரும். ஆனால் நீண்டநாட்கள் நிலைத்து நின்று பயனளிக்கும். ஆனால் அயல்மரங்கள் விரைவாக வளரும்; விரைவாகவே விழுந்துவிடும். புயலால் மனிதன் உருவாக்கிய கட்டிடங்களை இழந்தால், அது அந்நாட்டுக்கு சிறிய பாதிப்பையே ஏற்படுத்தும். அவற்றை விரைவில் கட்டிவிடலாம். ஆனால் மரங்களை இழந்தால் இந்த உலகிற்கே பாதிப்பு. அந்த இழப்பின் வெற்றிடத்தை உடனே சரிசெய்ய முடியாது. அதற்கான விஞ்ஞானமும் நம்மிடம் இல்லை. ஏனெனில், மரங்கள் கொடுக்கும் ஆக்ஸிஜன் இந்த உலகம் முழுமைக்கும் சொந்தம். அதனால்தான் உலகில் எங்கே மரங்களை இழந்தாலும் அதன் பாதிப்பு இங்குவரை நமக்கும் ஏற்படும். எதிர்காலத்தில் ஏற்படும் இயற்கை சீற்ற பாதிப்புகளை சிறிதளவாவது குறைத்திட இனியாவது முன்யோசனையுடன் இந்த மண்ணின் மரங்களை நட்டு உலகிற்கு பயனளிப்போம்.

ஆர்.ராமமூர்த்தி

சூழலியல் ஆர்வலர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close