சந்திரயான்2 இறுதிக்கட்ட பின்னடைவால் நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை என இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாத்துரை தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்திலுள்ள காரமடை பகுதியில் இயங்கும் ஒரு தனியார் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற இஸ்ரோவின் முன்னாள் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, 197 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர் மாணவ மாணவிகள் மத்தியில் பேசிய மயில்சாமி அண்ணாதுரை, “அறிவியல் கல்வியை தாய்மொழியில் கற்க அனைவரும் முன்வரவேண்டும். தமிழ் மொழிக்கல்வி தாழ்வில்லை என்பதை உணர்தல் வேண்டும். நம் நாடு நல்ல சந்தர்ப்பங்களை உருவாக்கி கொடுக்கும், அதில் சாதிப்பவர்களை அரவணைத்து வாய்ப்பளிக்கும்” என்றார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது, “இம்முறை நாம் அனுப்பிய சந்திரயான்2 இறுதிகட்ட பின்னடைவால் நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை. நாம் இருமுறை நிலவுக்கு விண்கலங்களை அனுப்பி வெற்றி பெற்றுள்ளோம். நாம் இறுதியாக அனுப்பிய சந்திரயான்2 திட்டமும் வெற்றிதான். அதன் இறுதிகட்ட பணியில் மட்டுமே பின்னடைவு ஏற்பட்டது.
அறிவியலில் அனைத்துமே பாடம் தான். அடுத்ததாக மீண்டும் நிலவுக்கு ஆளில்லா விண்கலம் அனுப்பி சோதிக்கப்படும். அதில் மனிதர்கள் இருந்தால் என்னென்ன வசதிகள் தேவையோ அனைத்தும் செய்து பரிசோதனை நடத்தப்படும். இதன் பின்னரே நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும். சந்திரயான் ஒன்று மற்றும் இரண்டின் செயல் திட்டங்களுக்கும் நிலவுக்கு மனிதனை அனுப்பும் பணிக்கும் வேறுபாடு உள்ளது. எனவே, சந்திரயான்2 இறுதிகட்ட பின்னடைவால் நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை. நம் அடுத்தகட்ட இலக்கை நோக்கி ஆராய்ச்சிகள் தொடர்கின்றன” என்றார்.
“குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்” - 5 மாநில அரசுகள் போர்க்கொடி
50 நாட்களை நிறைவு செய்த ‘பிகில்’, ’கைதி’ - ரசிகர்களுக்கு இயக்குநர் நன்றி
சாய்ந்த 50 ஆண்டுகள் பழமையான மரம் - மீண்டும் அழகாக நட்டு வைத்த அதிகாரிகள்
பாலியல் வன்கொடுமைக்கு 21 நாட்களுக்குள் தூக்கு - ஆந்திர பேரவையில் நிறைவேறியது திஷா மசோதா
அசாம் போராட்டத்தால் ஜப்பான் பிரதமரின் இந்திய வருகை ஒத்திவைப்பு?