[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் - அசோக் லவாசாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS பொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு
  • BREAKING-NEWS ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு
  • BREAKING-NEWS அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்

10% இடஓதுக்கீடு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மீறுகிறதா?: சட்டநிபுணர்கள் கருத்து

10-reservation-exceeds-the-supreme-court-judgement


பொருளாதார ரீதியில் நலிவுற்ற பொதுப் பிரிவினருக்கு 10 சதவித இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவை மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்தது. இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கவே முடிவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 323 உறுப்பினர்களின் ஆதரவுடன் 10 சதவீத இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேறியது. இதனையடுத்து மாநிலங்களவையிலும் 149 உறுப்பினர்கள் ஆதரவுடன் 10 சதவீத இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியது.

ஆண்டுக்கு ‌8 லட்சம் ரூபாய்க்கு ‌கீழ் வருமானம் உள்ளவர்கள், 5 ஏக்‌கருக்கு கீழ் விவசாய நிலம் வைத்திருப்போர், ஆயிரம் சதுர அடிக்கு கீழ் வீடு உள்ளவர்களை மட்டுமே பொருளாதார ரீதியில் நலிவுற்றவர்களாக கருதவதாக மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது போன்ற சில நிபந்தனைகளை பூர்த்தி செய்பவர்கள் மட்டுமே 10 சதவீத இடஒதுக்கீட்டு பலனை பெற முடியும். 

இந்தச் சட்டத்திருத்தம் அரசியலமைப்பு சட்டம் பிரிவு 15 மற்றும் பிரிவு 16 ஆகியவற்றில் திருத்தங்களை மேற்கொள்கிறது. இந்நிலையில் இந்த அரசியலமைப்பு சட்டத்திருத்ததின் முன் உள்ள சட்ட சவால்கள் என்ன? 

முதலில், இந்தச் சட்டம் ஏற்கெனவே இருக்கும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மீறும் வகையில் உள்ளதா? என்பது மிகப் பெரிய கேள்வி. அதாவது இந்திரா சாஹானி வழக்கில் உச்சநீதிமன்றம் இடஒதுக்கீடு 50 சதவிகிதத்திற்கு மேல் செல்ல கூடாது என்றது. ஆனால் அந்த வழக்கின் தீர்ப்பில் 50 சதவிகிதம் என்பது பொதுவிதி அதற்குமேல் கூட இடஒதுக்கீடு தேவைப்பட்டால் செய்யலாம் என்று குறிப்பிட்டது. அதனால் இந்தச் சட்டத்திருத்தம் இந்தத் தீரப்பை மீறும் வகையில் இருப்பதற்கு வாய்ப்புகள் குறைவு என சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.  

இரண்டாவதாக அரசியலமைப்பு சட்டப்பிரிவு 16னில் மேற்கொண்ட திருத்தம்தான் மிகவும் சிக்கலான ஒன்று. ஏனென்றால், பிரிவு 16(4)ல் சமூகத்தில் பின் தங்கியவர்கள் அரசாங்க பணிகளில்‘போதுமான அளவு பிரதிநிதிதுவம்’இல்லை என்றால் உரிய இடஒதுக்கீட்டை அவர்களுக்கு வழங்கலாம் என்கிறது. ஆனால் இந்தச் சட்டத்திருத்ததில் 16(6)ல் அந்த நிபந்தனை மீறப்படுகிறது. இதனால் இந்தச் சட்டத் திருத்தம் சிக்கலானது என சட்டவல்லுநர்கள் கருதுகின்றனர்.

மூன்றாவது, முக்கியமான சட்ட சவால் ‘பொருளாதரத்தில் நலிவடைந்தவர்களுக்கான’ வரையறை. இந்த வரையறை எந்த அளவிற்கு பெரிதாக உள்ளதோ அந்த அளவிற்கு அது சிக்கலான ஒன்று. ஏனென்றால் இந்த வரையறை ஆண்டிற்கு 8 லட்சத்திற்கு குறைவாக வருமானம் பெறுபவர்கள் பொருளாதரத்தில் நலிந்தவர்கள் என்கிறது. ஆனால் அவர்கள் பொருளாதர ரீதியில் நலிந்தவர்கள் என்றால் அவர்களும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களும் ஒன்றா என்பது மிகப் பெரிய கேள்வி. ஆகவே இந்தச் சட்டத்திருத்தத்தை எதிர்கொள்வதில் அரசுக்கு பெரிய சிக்கல் ஏற்படும் என்கின்றனர் சட்டவல்லுநர்கள். அப்படியென்றால் என்ன சிக்கல்? இது இப்போதைக்கு மக்கள் முன்னிருக்கும் கேள்வி.

இந்தச் சிக்கல்கள் குறித்து மேலும் அறிய ஒய்வு பெற்ற நீதிபதி ஹரி பரந்தாமனை கேட்டோம். அதற்கு அவர், “அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 15 (4)ல் கல்வியில் முன்னேற்றம் அடைவதற்காகதான் இடஓதுக்கீடு அளிக்கப்பட்டது. மேலும் பிரிவு 16 (4)ன்படி‘போதுமான அளவு பிரதிநிதிதுவ’த்தின்படி (Adequately represented)யார் எல்லாம் அரசாங்க பணிகளில்  இல்லையோ அவர்களுக்குதான் இடஓதுக்கீடு தரவேண்டும் என சட்டம் சொல்கிறது. 

அதேபோல, பல ஆண்டுகளாக சாதிய அடிப்படையில்தான் மக்கள் ஒடுக்கப்படுகின்றனர். மேலும் மத்திய அரசின் பணிகளில் உயர்பதவிகளில் இன்னும் சாதி அடிப்படையில் பின் தங்கியவர்களின் பங்களிப்பு இல்லை. பொருளாதார அடிப்படையில் ஆண்டிற்கு 8 லட்சத்திற்கு கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் நலிந்தவர்கள் என்றால், அப்போது வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களும் இவர்களும் ஒன்றா? இடஓதுக்கீடு என்பது வறுமையை ஒழிப்பதற்கல்ல; அதனால் இந்தப் பிரச்னையில்  பொருளாதார அடிப்படையிலான அளவுகோல் என்பது தேவையேயில்லை” என்றார்.

மேற்கொண்டு விவரங்களை பெற மூத்த வழக்கறிஞர் கே.எம். விஜயனிடம் பேசினோம்.“சாதி ரீதியிலான இடஓதுக்கீட்டில் நிறைய பிழைகள் உள்ளன. அவற்றை களைவதற்கு பொருளாதார ரீதியிலான இந்த இடஓதுக்கீடு உதவிசெய்யும். ஏனென்றால், சாதி அடிப்படையிலுள்ள இடஓதுக்கீட்டில் ஏற்கனவே இடஓதுக்கீட்டை பயன்படுத்தியவர்களே அதனை மீண்டும் பயன்படுத்துவதினால் சாதி அடிப்படையில் சமன் இன்மை ஏற்படுகிறது. ஆகவே வெறும் சாதிய அடிப்படையில் இடஓதுக்கீடு இருப்பதால் சமூகநீதியை அடைந்துவிட முடியாது. மேலும் பிற்படுத்தப்பட்டவர்களில் பொருளாதார அடிப்படையில் முன்னேறியவர்களுக்கு இடஓதுக்கீடு இல்லை. அதேபோல், இடஓதுக்கீடு இல்லாத பொதுப்பிரிவினருக்கு பொருளாதார அடிப்படையில் இடஓதுக்கீடு தருவதில் தவறில்லை” என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக புதியதலைமுறையின் வட்டமேசை விவாதத்தில் பேசிய அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் வழக்கறிஞருமான நவனீத கிருஷ்ணன் எம்பி ஒரு கருத்தை முன்வைத்திருந்தார். அதில் அவர், “உச்சநீதிமன்றம் ஏற்கனவே நரசிம்ம ராவ் அரசு கொண்டு வந்த 10% இடஓதுக்கீடு ஆணை பற்றி விசாரித்த போது வெறும் பொருளாதார அடிப்படையில் மட்டும் இடஓதுக்கீடு கொண்டுவர முடியாது என்றது. தேவைப்பட்டால் சமூகம் மற்றும் கல்வி அடிப்படையில் பின் தங்கியவர்களுடன் பொருளாதாரத்தையும் சேர்த்து இடஓதுக்கீடு தரலாம் என்றது. இந்த 10% இடஓதுக்கீடு அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பை மீறுவதாகும். மினர்வா மில்ஸ் (1980) வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், நாடாளுமன்றம் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பை மீறி சட்டம் இயற்றமுடியாது. அதேபோல, இப்போது கொண்டுவரப்பட்டுள்ள 10% இடஓதுக்கீடு என்பது எந்தவிதமான தரவுகளின் அடிப்படையில் இல்லை” என்றார். 

மேலும் இந்தச் சிக்கல் தொடர்பாக திமுக மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான ஆர்.எஸ்.பாரதியிடம் கேட்டோம். “இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் நான் வழக்கு தொடர்ந்திருப்பதால் இது பற்றி கருத்து கூற விரும்பவில்லை”என்றார்.

ஆக, தொடரும் இந்தக் குழப்பங்களுக்கு நீதிமன்றம்தான் முடிவு சொல்ல வேண்டும்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close