[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS மறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என வெளியான செய்திகளில் உண்மையில்லை: தமிழக அரசு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்

அதிமுக, திமுக நேரடியாக மோதும் 8 தொகுதிகள்: முந்தைய கள நிலவரம் என்ன?  

loksabha-elections-2019-dmk-and-aiadmk-direct-contest-constituencies

நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஆகவே அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு வாகனத்தில் ஊர் ஊராக வலம் வந்து கொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் முக்கிய கட்சிகளான அதிமுக மற்றும் திமுக  ஆகிய இரண்டும் பல கட்சிகளுடன் கூட்டணி வைத்து இத்தேர்தலுக்கு தயாராகி உள்ளன. 

மொத்தம் 40 மக்களவைத் தொகுதிகளுக்கான போட்டி நடைபெற்றாலும் திமுகவும் அதிமுகவும் நேரடியாக மோத உள்ளது மொத்தம் 8 தொகுதிகளில்தான். ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் நேரடியாக மோத இருக்கும் இந்தக் களங்கள் முந்தையை தேர்தலில் யாருக்கு சாதகமாக இருந்தது என்பது முக்கியமான கேள்வி. இந்தக் கேள்விக்கு பதில் தேவை என்றால் நாம் கொஞ்சம் பின்நோக்கி போவது அவசியம். அந்தத் தேர்தல் முடிவுகளை வைத்து நடைமெற உள்ள இந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகமாக அமையும் என்பதை ஊகிக்கலாம்.  

தென் சென்னை:

2014 நாடாளுமன்றத் தேர்தலை பொருத்தவரை தென் சென்னையிலுள்ள அனைத்து இடங்களிலும் அதிமுக அதிக வாக்குகள் பெற்றிருந்தது. இத்தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் 1லட்சத்து 35ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் தோற்கடித்தார். 

இதனைத் தொடர்ந்து 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தலில் தென்சென்னை சட்டப் பேரவை தொகுதிகளில் திமுக சிலவற்றில் வெற்றி பெற்றது. குறிப்பாக சைதாப்பேட்டை மற்றும் வேளச்சேரியில் திமுக வேட்பாளர்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். அதேபோல விருகம்பாக்கம் மற்றும் தி.நகர் தொகுதிகளில் இரு கட்சிகளுக்கும் இடையே இருந்த வாக்கு இடைவெளி குறைந்துள்ளதை நாம் கொடுத்துள்ள பெட்டிச் செய்தியின் புள்ளிவிவரங்கள் மூலம் காணமுடிகிறது. இந்தநிலை இந்தத்தேர்தலிலும் தொடர்ந்தால் அதிமுக மற்றும் திமுக இடையே கடும் போட்டி நிலவும் என்பது உறுதி.

காஞ்சிபுரம்:

2014 மக்களவைத் தேர்தலில் காஞ்சிபுரத்தில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் 1 லட்சத்து 46 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.  ஆனால் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்குள் வரும் சட்டப்பேரவை தொகுதிகளில் திமுகவின் வாக்கு வங்கியை கணிசமாக உயர்ந்து காணப்படுகிறது. அதிலும் செங்கல்பட்டு மற்றும் உத்திரமேரூர் தொகுதியில் திமுகவின் வாக்குவங்கி பெரிய அளவில் உயர்ந்துள்ளது. அதேசமயம் இந்த இடங்களில் அதிமுகவின் வாக்குகள் சரிந்துள்ளன. மற்ற இடங்களான மதுராந்தகம், செய்யூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகியவற்றில் திமுக வெற்றியும் பெற்றுள்ளது. 

திருவண்ணாமலை:

2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இந்தத் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் 1லட்சத்து 68ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று வென்றார். இதனையடுத்து 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தலில் திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சட்டப் பேரவை தொகுதிகளில் அதிக இடங்களை வென்றிருந்தது திமுக. குறிப்பாக திருப்பத்தூர், செங்கம், திருவண்ணாமலை மற்றும் கீழ்பென்னாத்தூர் ஆகிய இடங்களில் திமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது. இந்த இடங்களில் அதிமுக தனது செல்வாக்கை அதிகம் நிரூபிக்கவில்லை. 

சேலம்:

2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் 2 லட்சத்து 67ஆயிரத்திற்கும் மேலான வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து 2016ல் நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தலில் சேலம் வடக்கு தொகுதியில் மட்டும் திமுக வென்றது. மற்ற தொகுதிகளில் அதிமுக-திமுக இடையேயான வாக்கு வித்தியாசம் சற்று குறைந்தே உள்ளது.

நீலகிரி:

2014 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் 1லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றிப் பெற்றார். எனினும் கூடலூர் தொகுதியில் மட்டும் திமுக வேட்பாளர் ஆ.ராசா அதிக வாக்குகள் கிடைத்தன. இதனையடுத்து 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தலில் உதகமண்டலம், கூடலூர், பவானிசாகர் ஆகிய தொகுதியில் திமுக வென்றது.

பொள்ளாச்சி:

2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் 1 லட்சத்து 40ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார். இந்தத் தேர்தலில் அதிமுக அனைத்து இடங்களில் அதிக வாக்குகள் பெற்றது. 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தலில் அதிமுக அதே நிலையில் தொடர்ந்தாலும் இரு கட்சிகளுக்கும் இடையே இருந்த வாக்கு வித்தியாசம் குறைந்து காணப்படுகிறது.

மயிலாடுதுறை:

2014 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் 2 லட்சத்து 77ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற 2016 சட்டப் பேரவை தேர்தலில் கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் ஆகிய இடங்களில் மட்டும் திமுக கைப்பற்றியது. எனினும் மற்ற இடங்களில் அதிமுக அதன் வாக்குகளை தக்கவைத்திருந்தது.

திருநெல்வேலி:

2014 மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் 1லட்சத்து 26ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அத்துடன் அங்குள்ள அனைத்து இடங்களிலும் கணிசமாக வாக்குகளை வாங்கினார். எனினும் இதனைத் தொடர்ந்து நடைபெற்ற 2016ஆம் ஆண்டு சட்டப் பேரவை தேர்தலில் ஆலங்குளம், திருநெல்வேலி, பாளையங்கோட்டை ஆகிய இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் நாங்குநேரியில் வெற்றி பெற்றது. அத்துடன் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் வெறும் 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.


இந்த இரண்டு தேர்தல்களும் திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் முக்கிய தலைவர்களான கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் உயிருடன் இருந்தப்போது நடைபெற்றன. தற்போது இவர்கள் இருவரும் இல்லை. புதிய தலைமைகள் இணைந்து சந்திக்கும் முதல் பெரிய தேர்தல். அதுவும் நாடாளுமன்றத் தேர்தல். 

இத்துடன் இந்த நாடாளுமன்றத் தேர்தல் திமுக மற்றும் அதிமுக தங்கள் தரப்பிற்கு பலமான கூட்டணிகளை அமைத்துள்ளதால் தேர்தல் முடிவுகளில் அதிக மாற்றங்கள் நிகழக்கூடும். அந்த முடிவுகள் நிச்சயம் ஒரு புதிய தலைமையை தமிழ்நாட்டிற்கு அடையாளம் காட்டுவதாக அமையும்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close