[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

வடபழனி கொலையில் திடீர் திருப்பம்: நாடகமாடிய கணவனின் கதை அம்பலம் 

vadapalani-murder-case-husband-arrest

சென்னை வடபழனியில் மனைவியை கொன்று நாடகமாடிய கோயில் குருக்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை வடபழனியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் பாலகணேஷ். இவரது மனைவி ஞானப்பிரியா. இவர்களுக்கு திருமணம் ஆகி மூன்று வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை. பாலகணேஷ் வடபழனியில் உள்ள சிவன் கோயிலில் அர்ச்சகராக பணிபுரிந்து வருகிறார்.இவர்கள் வசிக்கும் அதே தளத்தில் வீட்டின் உரிமையாளரும் வசித்து வந்துள்ளார். இந்தக் குடியிருப்பில் குளியல் அறை போன்றவைகள் வீட்டிற்கு வெளியில் தான் உள்ளது. 

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை காலையில் வீட்டின் உரிமையாளர் குளியலறைக்கு செல்லும் போது அங்கு பாலகணேஷ் கைகள் கட்டப்பட்டு மயக்க நிலையில் இருந்தார். இதனால் பதட்டமடைந்த அவர் இதுகுறித்து பாலகணேஷ் மனைவிக்கு தகவல் தெரிவிக்க அவரது இல்லத்திற்கு சென்றுள்ளார். ஆனால் அவரது வீடு வெளிப்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. தரையில் ரத்தக்கறைகள் படிந்திருந்தது. இதனையடுத்து கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது ஞானப்பிரியா வீட்டின் உள்ளே ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனையடுத்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் 108க்கு தகவல் தெரிவித்தனர். தலையில் பலத்த காயமடைந்திருந்த ஞானப்பிரியா சம்பவ இடத்திலே உயிரிழந்து விட்டார். பாலகணேஷை சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஞானப்பிரியாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. 

இந்நிலையில் கொலை நடந்த வீட்டிற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு ஆய்வுகளை மேற்கொண்டனர். சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்ட மோப்ப நாய் கொலை நடந்த வீட்டில் இருந்து வடபழனி 100 அடி சாலையில் வெகு தொலைவு ஓடி விட்டு நின்றது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். இதனடிப்படையில் விசாரித்தனர். ஞானப்பிரியா கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியை காணவில்லை எனத் தெரிந்தது. எதற்காக இந்தக் கொலை சம்பவம் நடைப்பெற்றது என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வந்தனர். கணவருக்கு அதிகமான படுகாயங்கள் இல்லை. கைகள் மற்றும் கால்கள் கட்டப்பட்டிருந்தது. அவரது மனைவியின் கைகள் கட்டப்பட்ட நிலையில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது.

அவரது வீடு அமைந்திருப்பது அடுக்குமாடி குடியிருப்பு. அருகில் நிறைய வீடுகள் உள்ளன. கொள்ளையர்கள் இந்த ஒரு வீட்டை மட்டும் குறிவைத்து கொள்ளையடிக்க வந்தார்களா? அப்படி என்றாலும் வீட்டிற்கு வெளியே தாக்கப்பட்ட பால கணேஷின் அலறல் சத்தம் யாருக்கும் கேட்கவில்லை. காலை 6 மணி வரையிலும் அவர் கைகள் கட்டப்பட்ட நிலையிலேயே மயங்கி கிடந்துள்ளார். இவையெல்லாம் காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாலகணேஷிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர், ‘‘நள்ளிரவு கதவு தட்டும் சத்தம் கேட்டு, நான் எழுந்து வந்து கதவை திறந்தேன். அப்போது வெளியில் இருந்த இருவர் இரும்பு கம்பியால் என்னை தாக்கினர். உடனே அவர்கள் என் கைகளை கட்டினர். அப்போது என் மீது சாமி வந்ததது போன்று இருந்தது. அதன்பின்னர் என்ன நடந்தது என்று தெரியாது. காலையில் என்னை காவல்துறையினர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போது நினைவு திரும்பியதும் எனது மனைவி கொலை செய்யப்பட்ட தகவல் எனக்கு தெரிய வந்தது’’ என்று தெரிவித்துள்ளார்.பாலகணேஷ் முன்னுக்கு பின் முரணாக தகவல் அளித்து வருவதால் அவரிடம் மேலும் விசாரணை நடத்தினால் முழுவிபரமும் தெரியவரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஞானப்பிரியாவின் இறுதிசடங்குகள் முடிந்த நிலையில் பால கணேஷிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். காவலர்களின் கிடுக்குப்பிடி விசாரணையில் மனைவியை கொலை செய்ததை பாலகணேஷ் ஒப்புக்கொண்டார்.  இவர்கள் இருவருக்கும் திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. மனக்கஷ்டத்தில் இருந்த ஞானப்பிரியா சம்பவத்தன்று குழந்தை இல்லாததை காரணம் காட்டி தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த பாலகணேஷ் அவரது மனைவியை சுத்தியால் அடித்து கொலை செய்ததாக காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.இதன்பின்னர் கொலையை மறைக்க முயன்ற  பாலகணேஷ் தனது மனைவி ஞானப்பிரியாவின் கைகளை கட்டி வீட்டிற்குள் கிடத்திவிட்டார். பின்னர் வெளியில் வந்து வீட்டின் கதவை வெளிப்புறமாக தாழிட்டு தனது கை மற்றும் கால்களை கட்டிப்போட்டு குளியலறையில் படுத்துவிட்டதாக விசாரணையில் கூறியுள்ளனர்.

இச்சம்பம் நடைப்பெற்ற தினத்தன்று காவல்துறையினர் விசாரணையில் இருவர் தன்னை தாக்கியதாகவும் அதன் பின் எதுவும் நினைவில் இல்லை என  பிரபு நாடகமாடினார். இந்நிலையில் தற்போது காவல்துறையினரிடம் உண்மையை தெரிவித்துள்ளார். கொலைக்கு உடந்தையாக இருந்த பாலகணேஷின் நண்பர் மனோஜ் என்பரை கைது செய்துள்ள காவல்துறையினர், அவரிடம் இருந்து 15 சவரன் தங்கச் சங்கிலி மற்றும் பட்டுப்புடவை ஒன்றை பறிமுதல் செய்துள்ளனர்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close