[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது அதிமுக
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னை ஐஐடியில் மாணவர்களின் தற்கொலைகள் குறித்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
  • BREAKING-NEWS ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் ஸ்மிருதி இரானி புகார் மனு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தெர்தலில் மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சோமநாதன் மத்திய நிதி அமைச்சக செயலாளராக நியமனம்

சீனர்களின் செல்லப்பிராணி சைக்கிள் - ஒரு நெகிழ்ச்சியான சினிமா

a-young-country-boy-comes-to-the-big-city-beijing-bicycle

சீனர்களை பொருத்தவரை மிதிவண்டி என்பது அவர்களது வீட்டின் செல்லப் பிராணி போன்றது. அவர்களது வாழ்வின் துண்டு பிரதியாக, அவர்களது உழைப்பின் தோழனாக கலந்து போயிருக்கின்றன மிதிவண்டிகள். ஒரு வகையில் அவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ சைக்கிளின் பயன்பாடு கூட காரணமாக இருக்கலாம். ஒரு சைக்கிளை மையமாக வைத்து சீனாவின் வெவ்வேறு பொருளாதார அடுக்குகளில் வாழும் சிறுவர்களின் வாழ்க்கையினை மெல்லிய அரசியல் பார்வை தெளித்து பேசுகிறது ‘பெய்ஜிங் பை சைக்கிள்’ (2001)

சீனாவின் கிராமப் பகுதியில் இருந்து வேலை தேடி பெய்ஜிங் நகருக்கு வருகிறான் ‘க்குயி’. பெய்ஜிங் நகரில் பெட்டிக்கடை வைத்திருக்கும் ஒரு நண்பனைத் தவிர அங்கு அவனுக்கு யாரையும் தெரியாது. ‘க்குயி’ ஒரு கொரியர் நிறுவனத்தில் டெலிவரி பையனாக வேலைக்குச் சேர்கிறான். அந்த நிறுவனம் அவனுக்கு ஒரு புதிய சைக்கிளை கொடுக்கிறது. அதற்கான தொகை ஊதியத்திலிருந்து பிடித்துக் கொள்ளப்படும். ’க்குயி’ கடினமாக உழைத்து குறுகிய நாட்களில் அந்த சைக்கிளை தனக்கு சொந்தமாக்கிக் கொள்கிறான். ஆனால் அன்றோ துரதிஷ்ட வசமாக அது திருடு போகிறது. சைக்கிள் இல்லாததால் கொரியர் நிறுவன வேலையும் பறிபோகிறது. அந்நிறுவன மேனேஜர் ”சைக்கிள் இல்லாமல் எப்படி கடிதங்களை கொண்டு செல்வாய்…? அந்த சைக்கிள் மறுபடி கிடைத்தால் உன்னை மீண்டும் வேலையில் சேர்ப்பது பற்றி யோசிக்கலாம்” என்கிறார்.

பதின்பருவத்திலிருக்கும் டெலிவரி பையன் ‘க்குயி’ன் வயதை ஒத்த ’ஜியான்’ என்ற மாணவன் பெய்ஜிங் நகரவாசி. ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பையன். இந்நிலையில் தொலைந்து போன சைக்கிள் பள்ளி மாணவன் ‘ஜியா’னிடம் இருப்பதை கண்ட ‘க்குயி’ அவனை பின்தொடர்ந்து தனது சைக்கிளை மீண்டும் கைப்பற்றுகிறான். ஆனால் ’ஜியா’னின் பள்ளிக் கூட நண்பர்களால் ’க்குயி’ உதைக்கப்பட்டு சைக்கிள் மீண்டும் பறிக்கப்படுகிறது.

இந்நிலையில் சைக்கிள் யாருடையது என கதை விரிகிறது. ‘ஜியான்’ இதனை தான் சந்தையில் 500 யான்கள் கொடுத்து வாங்கியதாக சொல்கிறான். ‘க்குயி’ இது என்னுடைய சைக்கிள் யாரோ உன்னிடம் திருடி வித்துவிட்டார்கள் என்கிறான். ‘ஜியா’னின் நண்பர்களோ ”நீ உன் சைக்கிளை திருடியவர்களிடம் போய் தேடாமல்” பணம் கொடுத்து வாங்கிய என் நண்பனிடம் கேட்பது முறையல்ல” என்று சொல்ல சிக்கல் வலுக்கிறது. மாறி மாறி சைக்கிள் பறிப்பு அடிஉதை என நீளும் கதையில் அவ்விருவரும் ஒரு உடன்படிக்கை செய்து கொள்கிறார்கள். அதன் படி ஒரு நாள் ‘ஜியா’னும் ஒரு நாள் ‘க்குயி’யும் என சைக்கிள் சுழற்சி முறையில் பயன்படுத்தப்படுகிறது.

சைக்கிள் இல்லாத நாட்களில் ‘க்குயி’ பெய்ஜிங் நகர வீதிகளில் வியர்வை சொட்ட ஓடி கடிதங்களை டெலிவரி செய்கிறான். இதற்கிடையில் ‘ஜியான்’ காதலித்த பெண் ஒரு சைக்கிள் வித்தை காட்டும் இளைஞனின் காதலில் விழுகிறாள். ஆத்திரமடையும் ‘ஜியான்’ அந்த இளைஞனை கல்லால் தாக்கிவிட்டு சைக்கிளை கொண்டு வந்து வழக்கமாக ‘க்குயி’யை சந்திக்கும் இடத்தில் ஒப்படைக்கிறான். மேலும் “இனி நீ சைக்கிள் கொண்டுவர வேண்டாம், இனி இது அவசியம் இல்லை, உன் வேலைக்கு இது உதவியாக இருக்கும் நீயே வைத்துக் கொள்” என விரக்தியுடன் பேசிக் கொண்டிருக்கும் போது. தாக்குதலுக்கு ஆளானவனின் நண்பர்கள் இவ்விருவரையும் துரத்துகிறார்கள். குறுவீதிகள் தெருக்கள் என ஓட்டமும் சைக்கிளுமாக பறக்கும் உச்சகட்ட காட்சியில் ‘ஜியான்’ ‘க்குயி’ இருவரும் கடுமையாக தாக்கப்படுகிறார்கள். கோபத்தில் அக்குழுவில் ஒருவன் ‘க்குயி’ன் சைக்கிளை உடைத்து சேதப்படுத்துகிறான். ஆத்திரமும் இயலாமையும் கண்கள் வழியே உருள ‘க்குயி’ தனது உடைந்த சைக்கிளை சுமந்து கொண்டு பெய்ஜிங் வீதியில் நடந்து போவதாக படம் முடிகிறது.

’க்குயி’ பொருத்தவரை அந்த சைக்கிள் அவனது வாழ்வாதாரம் பொருளீட்டும் வறுமை புள்ளியில் நிற்கும் ஆதரவற்ற அவனுக்கு அதன் இழப்பு எளிதில் ஈடுசெய்யக் கூடியதல்ல. பள்ளி மாணவன் ‘ஜியான்’ பொறுத்தவரை அந்த சைக்கிள் அவனது பொருளாதார பலத்தை காட்டும் ஒரு அங்கம் உண்மையில் அந்த சைக்கிள் இருந்த வரை தான் அவனது காதலியும் உடன் இருந்தாள்.

சைக்கிளை திருடியன் யாரோ. எங்கோ சந்தையில் வாங்கியன் ஒருவன். சைக்கிளை பறிகொடுத்தவன் ஒருவன் என சுழலும் சக்கரத்தில் யாரையும் நோவதற்கில்லை. ஒரு சைக்கிள், ஒரே வயதுள்ள சிறுவர்கள் ஆனால் வெவ்வேறு வாழ்வியல் தேவைகள் என வித்தியாசத்தை காட்ட சைக்கிளை ஒரு குறியீடு போல பயன் படுத்தியிருப்பதில் இப்படம் அரசியல் கவனம் பெறுகிறது.

இயக்குனர்      ’வாங் ஸியோசிய்’ இயக்கிய இத்திரைப்படம் முதலில் பெர்லின் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு ’வெள்ளிக் கரடி’ விருது பெற்றது. பிறகு சில காரணங்களால் சீனாவில் தடை செய்யப்பட்ட இப்படம் சில திருத்தங்களுக்கு பின்னர் மீண்டும் திரையிட அனுமதி பெற்றது. ’பெய்ஜிங் பை சைக்கிள்’ படத்திற்கு முன் சில படங்களை இயக்கியிருந்தாலும் இப்படம் தான் இயக்குனர் ‘வாங் ஸியோசிய்’ற்கு சர்வதேச அடையாளத்தை பெற்றுத் தந்தது. இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஜிலியூ ஒரு பன்முக ஆளுமை பேபி, ஹைய்ட் அண்ட் சீக் உள்ளிட்ட ஆறு படங்களை இயக்கியிருக்கும் இவர் பெய்ஜிங் பை சைக்கிள் உட்பட சில படங்களுக்கு ஒளிப்பதிவும் செய்துள்ளார். மேலும் அட் கேஃப் 6, டீப் இன் தி கிளவுட்ஸ் என சில படங்களை தயாரித்துள்ளார் ஜிலியூ.

பெய்ஜிங் பை சைக்கிளில் கிளைக்கதையாக, ஒரு பெரிய பங்களாவில் இருக்கும் பெண் அடிக்கடி ஆடம்பர உடைகளை மாற்றிக் கொள்கிறாள். ‘க்குயி’ மற்றும் கடைக்கார நண்பன் இருவரும் அவளது பணக்கார வாழ்க்கையை கண்டு கொஞ்சம் பொறாமை கொள்கிறார்கள். உண்மையில் அவள் அந்த வீட்டின் வேலைக்காரப் பெண். முதலாளி வீட்டில் இல்லாத போது அவர்களின் உடைகளை பயன்படுத்துகிறாள்.

இப்படி நாம் ஒருவரின் புறத்தோற்றத்தை வைத்து தீர்மானிக்கும் நம் தவறான யூகங்களுக்கு பின் வாழ்க்கை வெவ்வேறு வண்ணங்களை பூசி இருக்கலாம். திரைக்கதை ஓட்டத்தில் பள்ளி மாணவன் ‘ஜியான்’ ஒருவேளை சைக்கிளை திருடியிருக்கலாம் என்ற யூகங்கத்தை பார்வையாளனுக்கு உருவாக்கி  அதை நம்முன் உடைத்தும் காட்டுகிறார் இயக்குனர். அகத்தின் அழகு முதத்தில் தெரியாது.

நான் எனது தட்டில் மிச்சம் வைக்கும் உணவு யாரோ ஒருவரின் தேவை என நினைப்பதில் கொஞ்சம் அதிகார நாற்றம் வீசுகிறது. யாரோ ஒருவரின் தேவையைத் தான் நான் வீணடிக்கிறேன் என புரிந்து கொள்வதில் இருக்கிறது இச்சமூகத்தின் மீதான நம் விரிந்த பார்வையும் மனிதமும்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close