[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

2018 ஆம் ஆண்டில் தமிழ் சினிமா இழந்த திரைநட்சத்திரங்கள்

from-sridevi-to-cheenu-mohan-kollywood-celebrities-who-passed-away-in-2018

தமிழ் சினிமா இந்த ஆண்டு சில முக்கியமான நட்சத்திரங்களை இழந்திருக்கிறது. அவர்கள் யார்? அவர்களின் சினிமா பங்களிப்பு என்ன? ஒரு சின்ன நினைவுறுத்தல். 

ஸ்ரீதேவி

தமிழ் சினிமாவின் தனி அடையாளமாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின் கதாநாயகியாக மலர்ந்து அதன் பின் பாலிவுட் திரை நட்சத்திரமாக ஜொலித்தவர். இவர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டபோது அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். அதற்கு அவர், ‘என் சொந்த விஷங்களை பற்றி உங்களுக்கு விளக்க தேவையில்லை’ என்று பதிலளித்தார். அதே போல் அவரது மரணமும் பெரும் விவாதத்தை கிளப்பியது. அவர் துபாய்க்கு சென்றிருந்தபோது அங்கு தங்கியிருந்த ஹோட்டலின்‘பாத் டப்’பில் விழுந்து இறந்துவிட்டதாக முதலில் செய்தி பரவியது. அதன் பிறகு அவர் மதுபோதையில் இருந்தார் என்று கூறி சிலர் செய்தி வெளியிட்டனர். அவரது உடல் துபாயில் இருந்து இந்தியா கொண்டு வரும் வரை இப்படி பல ஊகங்கள் பரவின. 

தமிழ் சினிமாவில் இவர் ‘கந்தன் கருணை’ படத்தில் 1967ல் அறிமுகமானார். அப்போது அவருக்கு 4 வயது. அதன் பிறகு எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்தில் தொடங்கி ரஜினி, கமல் வரை பல நடிகர்களின் நாயகியாக சேர்ந்து நடித்தார். ’மூன்று முடிச்சு’, ‘16 வயதினிலே’, ‘ப்ரியா’, ‘ஜானி’, ‘மூன்றாம் பிறை’, ‘வறுமையின் நிறம் சிகப்பு’ என அவர் நடித்த அத்தனை படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகின.

தமிழில் இருந்து பாலிவுட் சென்ற அவரை மும்பை சினிமா ‘லேடி சூப்பர் ஸ்டார்’என்று அன்பாக அழைத்தது. பாலிவுட் சினிமாவின் முதல் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ இவர்தான். போனி கபூரை இவர் மணம் புரிந்த பிறகு எட்டு ஆண்டுகள் தன் திரை வாழ்க்கைக்கு அவர் இடைவெளி கொடுத்திருந்தார். அதன் பிறகு அவர் ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தின் மூலம் திரை வாழ்க்கைக்கு திரும்பினார். அந்தப் படம் பெரிய வெற்றியை சம்பாதித்தது. இந்திய திரை உலகையே தன் வசீகரமான நடிப்பால் துடிப்பாக இயங்கச் செய்த இவர், இந்த ஆண்டு பிப்ரவரி 24 அன்று இறுதி வாழ்க்கையை முடித்துக் கொண்டபோது நாடே துயரத்தில் ஆழ்ந்தது. 


சீனு மோகன்


அதிகம் அறியப்பட்ட நடிகர் இல்லை சீனு மோகன். ஆனால் வந்த சில படங்களிலேயே அதிகம் கவனிக்கப்பட்ட நடிகர் இவர் என்று நிச்சயமாக சொல்லலாம். ‘இறைவி’,‘மெர்சல்’,‘கோலமாவு கோகிலா’ உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், இந்த மாதம் 27 தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 61. 

இவர் 3000க்கும் அதிகமான மேடை நாடகங்களில் நடித்தவர்

. 'கிரேசி' மோகனின் நாடகங்களில் நடித்து பிரபலமானவர். இவர் நாடகங்களில் சீனு என்ற கதாபாத்திர பெயரில் நடிப்பதால் சீனு மோகன் என்று அழைக்கப்பட்டார். 1979 இல் கிரியேஷன்ஸ் நாடகக் குழு தொடங்கப்பட்டது. கிட்டத்தட்ட நாடக்கக்குழு தொடங்கப்பட்ட நாளில் இருந்தே அக்குழுவில் நடித்து வந்தார் சீனு மோகன். நாடகத்திலிருந்து மெல்ல சினிமாவிலும் முகம் காட்டத் தொடங்கினார். அஞ்சலி, தளபதி, வருஷம் 16 உள்ளிட்ட படங்களில் நடித்தார். 

ஆனாலும் மேடை நாடகங்களுக்கே முன்னுரிமை கொடுத்து வந்தார். நாடகங்களை தொடர்ந்து 'கிரேசி' மோகன் குழு தொலைக்காட்சி தொடர்கள் எடுத்தது. அந்தத் தொடர்களிலும் நடித்தார் சீனு மோகன். மேலும் பல குறும்படங்களிலும் நடித்தார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த ‘இறைவி’ படத்தில் அனைவரின் கவனத்தை ஈர்த்தார் அவர், அதன் பிறகு ‘ஆண்டவன் கட்டளை’,‘கோலமாவு கோகிலா’,‘ஸ்கெட்ச்’,‘வடசென்னை’,‘மெர்சல்’ உள்ளிட்ட படங்களிலும் நடித்தார்.


இதுவரை 3000க்கும் அதிகமான மேடை நாடகங்களில் நடித்த இவர், தமிழ் சினிமா சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என பலர் அவரது மறைவின் போது கூறினர். 


நீலு 

பழைய கருப்பு வெள்ளை படங்களில் தன் நகைச்சுவை திறமையால் ரசிகர்களை ஈர்த்தவர் நீலு. உடல்நலக் குறைவு காரணமாக கடந்த மே மாதம் உயிரிழந்தார்.

 நீலு என்று அழைக்கப்படும் இவரது இயற்பெயர் நீலகண்டன். ஜூலை 26, 1936ஆம் ஆண்டு பிறந்த இவர், கேரள மாநிலத்தில் உள்ள மஞ்சேரி என்ற ஊரை சேர்ந்தவர். 

ஆனால் இவர் படித்தது எல்லாம் சென்னையில்தான். தனியார் நிறுவனம் ஒன்றில் பொது மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இருப்பினும் சிறுவயது முதலே நடிப்பிலும் ஆர்வம் கொண்டிருந்தார். தனது 7 வயதிலிருந்தே நாடகங்களில் நடித்துள்ளார்.

 சோ ராமசாமி, க்ரேசி மோகன், எஸ்.வி.சேகர், மெளலி போன்றவர்களின் இயக்கத்தில் 7 ஆயிரம் நாடகங்களில் நடித்துள்ளார்.

திரைத்துறையில் ‘ஆயிரம் பொய்’ படத்தின் மூலம் 1969ஆம் கால் பதித்த இவர், 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் சிவாஜி கணேசன், நாகேஷ், ரஜினிகாந்த், கமல்ஹாசன், அர்ஜூன், அஜீத், சரத்குமார், பிரபு, கார்த்திக், விக்ரம், மாதவன் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். கடந்த 2009ஆம் ஆண்டு இவருக்கு“வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கப்பட்டது. 

தனது இறுதி நாட்களில் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’, ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’போன்ற படங்களில் இளம் நடிகர்களுடன் இணைந்து நடித்தார். சில காலமாக  உடல்நலம் சரியின்றி காணப்பட்ட இவர், இந்த ஆண்டு  மே மாதம் இயற்கை எய்தினார். அப்போது அவரது வயது 83.


வெள்ளை சுப்பையா

பழம்பெரும் நடிகர் வெள்ளை சுப்பையா. இவரும் இந்த ஆண்டு உடல் நலக்குறைவால் காலமானவர். அவர் மறைந்த போது அவருக்கு வயது 80.

மேட்டுப்பாளையம் அருகிலுள்ள புஞ்சை புளியம்பட்டியை சேர்ந்தவர் இவர், சினிமா ஆர்வம் காரணமாக சென்னை வந்த அவர் சிவாஜி, எம்ஜிஆர், ரஜினி, கமல் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார். 

அவர் நடிக்க வந்த புதிதில் சுப்பையா என்ற பெயரில் பலர் இருந்ததால் தனது பெயருடன் ‘வெள்ளை’யை சேர்த்துக்கொண்டார். ‘வைதேகி காத்திருந்தாள்’,‘கரகாட்டக்காரன்’ உள்பட 300-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். 

‘மேகங் கருக்கையிலே புள்ள தேகம் குளிருதுடி’ என்ற பாடலில் தனியாக ஆடி பாடி நடித்தவர் இவர். வடிவேலுவுடன் இவர் நடித்த, ‘திரும்ப திரும்ப பேசற நீ...’ காமெடி காட்சி புகழ்பெற்ற ஒன்று. கவுண்டமணி, செந்தில், வடிவேலு மட்டுமல்லாமல் 3 தலைமுறை நடிகர்களோடு நடித்த இவர்,  கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவு காரணமாக சொந்த ஊருக்கு திரும்பினார். சிகிச்சைக்குப் பணமின்றி அவதிப்பட்ட அவர் அதற்காக கலெக்டரிடம் சில வருடங்களுக்கு முன் மனு கொடுத்ததாக செய்திகள் வெளியாயின. கடந்த செப்டம்பர் மாதம் காலமானார். 


கோவை செந்தில்

இவர் ஒரு கேரக்டர் ஆர்டிஸ்ட். கோவையைச் சேர்ந்த இவரின் இயற்பெயர் குமாரசாமி. சொந்த ஊர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள பள்ளிபாளையம். மனைவி பெயர் லட்சுமி. திலக் என்ற ஒரு மகன், பொன்மணி என்ற மகள் உள்ளனர். வங்கியில் வேலை பார்த்து வந்த கோவை செந்தில், சினிமாவில் வாய்ப்பு கிடைத்ததும் அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு சென்னை வந்தவர்.‘ஒரு கை ஓசை’,‘இது நம்ம ஆளு’,‘ஆராரோ ஆரிரரோ’,‘என் ரத்தத்தின் ரத்தமே’,‘பவுனு பவுனுதான்’,‘மௌன கீதங்கள்’,‘புதிய பாதை’,‘அவசர போலீஸ் 100’,‘படையப்பா’,‘கோவா’ என ஏகப்பட்ட படங்களில்  குணச்சித்திரம் ப்ளஸ் நகைச்சுவை  நடிகராக நடித்தவர். மேலும் தனித்தன்மையோடு கவனிக்கப்பட்டவர்.

முதற்கட்ட சினிமா வாழ்க்கை சிறப்பாக இருந்த அளவுக்கு இவரது இறுதிக்கட்ட திரை வாழ்க்கை அமையவில்லை. 74 வயதான இவர், 200 படங்களுக்கு மேல் நடித்தவர். இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மறைந்தார். 

மேக் அப் மேன் முத்தப்பா

நடிகர் ரஜினிகாந்த்தின் ஆஸ்தான மேக்-அப் மேன் முத்தப்பா. ரஜினி இமைய மலைக்கு செல்லும் போது வைத்திருந்த கைத்தடியை இவருக்குதான் அவர் பரிசளித்திருந்தார்.  75வது வயதான முத்தப்பா வடபழியில் வசித்து வந்தார். அவரது 
‘ஏவிஎம்’ முத்தப்பா என்றால் தென்னிந்திய சினிமாவில், தெரியாதவர்கள் இருக்க முடியாது. அப்போதைய முன்னணி இயக்குனர் கே. சுப்பிரமணியத்தின் சிபாரிசுடன், சினிமா உலகின் மூத்த தயாரிப்பாளர் ஏவி.மெய்யப்பன் செட்டியார் அவர்களால் மேக்-அப் மேனாக வாழ்க்கையைத் துவக்கியவர் முத்தப்பா. 

சிவாஜியின் ‘பராசக்தி’மூலம் முதன்முதலாக ஒப்பனைக் கலைஞராக தன் வாழ்க்கையை தொடங்கிய இவர், கமலஹாசன் நடித்த முதல் படமான ‘களத்தூர் கண்ணம்மா’ என பல படங்களுக்கு ஒப்பனைக் கலைஞராக பணி செய்திருக்கிறார். கடந்த 60 ஆண்டுகளாக நடிகை, நடிகர்களுக்கு மேக்-அப் போட்டு ஜொலித்த வைத்தவர் முத்தப்பா. எம் ஜி.ஆர்., சிவாஜி, ரஜினிகாந்த், கமலஹாசன், ராஜ்குமார் என பல முன்னணி நாயகர்களின் மேக்-அப் மேனாக இருந்தவர்.

பிறகு ரஜினியின் பர்சனல் மேக்-அப் மேனாக மாறி அவருக்கு மட்டுமே வேலை செய்ய துவங்கினார். அத்துடன் ரஜினி நடித்த சில படங்களில் நகைச்சுவை பாத்திரங்களில் நடித்தும் இருக்கிறார். இவரும் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் மறைந்தார்.

ராக்கெட் ராமநாதன்

தமிழ் சினிமாவின் முன்னணி மிமிக்ரி ஆர்டிஸ்ட். இவர் இறக்கும் போது இவருக்கு 74 வயது. இவர் தனது வாழ்நாளில் மிக அதிகமாக எம்.ஜி.ஆர் குரலை வைத்தே மிமிக்ரி செய்துள்ளார். மேலும் சிவாஜி கணேற்சன் குரலிலும் அதிகம் பேசி அசத்தியவர். தமிழக அரசு வழங்கும் கலைமாமணி விருதை பெற்றவர். பல குரல் மன்னனாக வாழ்ந்த இவர் கடந்த செப்டம்பர் மாதம் மறைந்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close