[X] Close

சென்னை: திருட்டு வழக்கில் நடைபெற்ற விசாரணையில் அம்பலமான இரட்டைக் கொலை சம்பவம்

குற்றம்

Chennai-Murder-case-exposed-in-theft-case

சென்னையில் இரண்டு பேரை கொலை செய்து உடலில் கல்லை கட்டி 40அடி ஆழ கிணற்றில் நீரில் மூழ்கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் மருத்துவமனையில் புகுந்து மருத்துவரை மிரட்டி 10 சவரன் நகையுடன் தப்பிச் சென்ற கும்பலை பிடித்து விசாரித்ததில் இரட்டை கொலை சம்பவம் அம்பலமானது.

சென்னை நந்தனத்தில் ஆர்எஸ்பி எனும் தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. கடந்த 13ஆம் தேதி இரவு மருத்துவமனைக்குள் புகுந்த கும்பல், 75 வயதான ராமகிருஷ்ணன் என்ற மருத்துவரை கத்தி முனையில் மிரட்டி, மருத்துவமனை பெண் ஊழியர் உஷா என்பவரையும் மிரட்டி 10 சவரன் நகையை பறித்துக் கொண்டு, மருத்துவரின் ஹூண்டாய் க்ரிட்டா காரையும் கடத்திக் கொண்டு தப்பிவிட்டனர்.

image


Advertisement

இந்த சம்பவம் தொடர்பாக சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் அடையாறு துணை ஆணையர் தலைமையில் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடிவந்தனர். சிசிடிவி மூலம் கொள்ளையர்கள் பழைய குற்றவாளிகள்தான் என அடையாளம் கண்டு, செல்போன் சிக்னல் மூலம் பின் தொடர்ந்தனர். அப்போது கொள்ளை கும்பல் சிவகங்கையில் பதுங்கியிருப்பதை கண்டுபிடித்து சுற்றி வளைத்து பிடித்தனர்.

கொள்ளை கும்பல் தலைவன் ஆறு கொலை வழக்குகளில் தொடர்புடை ராக்கப்பன் அவரது கூட்டாளிகள் வந்தவாசியை சேர்ந்த சீனிவாசன், பல்லாவரம் சங்கர் நகரைச் சேர்ந்த ரஜினி ஏழுமலை, மயிலாப்பூர் கருக்கா வெங்கடேசன், கோட்டூர்புரத்தைச் சேர்ந்த நெல்சன் மற்றும் ஜாபர்கான் பேட்டையைச் சேர்ந்த மதன்ராஜ் ஆகிய 6 பேரையும் சென்னை கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.

இவர்கள் அனைவரும் பழைய கொலை வழக்கு குற்றவாளிகள் என்பதால் வேறேதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனரா என தனிப்படை போலீசார் அவர்கள் பாணியில் விசாரித்தனர். அப்போது ராக்கப்பனுடன் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் அண்ணாதுரை என்ற பழைய குற்றவாளி குறித்து விசாரித்தனர். மருத்துவமனையில் நடந்த வழிப்பறி சம்பவத்தில் அண்ணாதுரைக்கும் தொடர்பு இருக்கும் என எண்ணி தனிப்படை போலீசார் விசாரிக்க அவர்கள் முன்னுக்கு பின் முரணாக உளறியதில் இரட்டைக் கொலை சம்பவம் அம்பலமானது.

அண்ணாதுரையையும், உடன் வந்த கூட்டாளி தங்க பாண்டியையும் கொலை செய்துவிட்டதாக ராக்கப்பன் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்றனர். கிண்டியில் ஆளுநர் மாளிகை அருகே புதர்மண்டி கிடக்கும் இடத்தில் உள்ள 40அடி ஆழமுள்ள பழைய கிணற்றில் அண்ணாதுரையையும், தங்கபாண்டியையும் கொலை செய்து கிணற்று நீரில் மேலே வராமல் இருக்க கல்லை கட்டி இறக்கியுள்ளனர். இந்த இரட்டை கொலை சம்பவம் கடந்த 9ஆம் தேதி நடந்துள்ளது. அதற்கு பிறகு தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் உதவியுடன் இருவரது சடலத்தையும் மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட கோட்டூர்புரத்தைச் சேர்ந்த அண்ணாதுரை மீதும் இரண்டு கொலை வழக்குகள் உள்ளது. ராக்கப்பனிடம் நடத்திய விசாரணையில் கொலைக்கான பின்னணி தெரியவந்தது. கடந்த 2015-ம் ஆண்டு ஆவடியில் பகுஜன்சமாஜ் கட்சி மாநில செயலாளர் முருகன் என்பவர் கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்றதால், எதிர்த்து போட்டியிட்ட ஆனந்தன் தனது உறவினரான அண்ணாதுரையிடம் முருகனை கொலை செய்ய கூறியுள்ளார். அதன்படி அண்ணாதுரை, கூலிப்படை தலைவன் ராக்கப்பனிடம் சொல்லியுள்ளார்.

image

அதன்படி கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலையில் கவுன்சிலர் முருகன் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கிற்கு செலவுகளை செய்யவில்லை என்பதால் ராக்கப்பன் மற்றும் அவனது கூட்டாளிகள், அண்ணாதுரை சொல்லிதான் கொலை செய்தனர் என்பதால் பணம் கேட்டு தராமல் இழுத்தடித்ததாக கூறப்படுகிறது. இந்த விரோதத்தில் ராக்கப்பன் கடந்த 9ஆம் தேதி தனது கூட்டாளி கருக்கா வெங்கடேசன் ஆட்டோவில் சென்று, சூளைமேட்டில் தங்கபாண்டி என்பவர் வீட்டில் இருந்த அண்ணாதுரையை பேசிக்கொள்ளலாம் வா என்று அழைத்து கொண்டு தனது கூட்டாளி நெல்சன் வாட்ச் மேனாக வேலை பார்த்து வந்த இந்த இடத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.

அங்கேயே அமர்ந்து பேசி மது அருந்திவிட்டு அண்ணாதுரையையும், வெளியில் சொல்லி விடுவார் என்பதனால் உடன் வந்த தங்கபாண்டியையும் கொலை செய்துள்ளனர். அதன் பிறகுதான் மருத்துவமனைக்குள் புகுந்து கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றுள்ளதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close