Published : 21,Jul 2017 06:28 AM
ஜம்மு காஷ்மீரில் கனமழை: நிலச்சரிவில் சிக்கி 13 பேர் பலி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பெய்த மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 13 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனமழை காரணமாக தோடா மாவட்டத்தின் தாத்ரி நகரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் படோதே - கிஸ்த்வார் நெடுஞ்சாலையில் உள்ள 6-க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இதில் 5 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கிய 11 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை உயரக் கூடும் என அஞ்சப்படுகிறது.
இதேபோல் கிஸ்த்வார் மாவட்டத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 45 வயது பெண்மணியும், அவரது 4 வயது பேரனும் உயிரிழந்தனர். உதம்பூர் மாவட்டத்தில் கரை ஒதுங்கிய நிலையில் 3 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அம்மாவட்டத்தின் காகோட் பகுதியில் 2 பெண்கள் நிலச்சரிவில் சிக்கி பலியாகியுள்ளனர். இதுவரை 13 பேர் உயிரிழந்திருப்பது காஷ்மீரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.