Published : 03,Mar 2021 06:47 PM

"ஆரம்பத்தில் 'கமல் கட்சி' என்பதே பிரபலம். அது மாறிவிட்டது!" - ஸ்ரீப்ரியா சிறப்புப் பேட்டி

actress-sripriya-special-interview

'மக்கள் நீதி மய்யம்' கட்சி தொடங்கப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகப்போகின்றன. திரைத்துறையில் துணிச்சலுக்கு பெயரெடுத்த நடிகை ஸ்ரீப்ரியா, அரசியலில் தனது அணுகுமுறையால் மென்மையான அரசியல்வாதியாகத் திகழ்ந்து வருகிறார். எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக களப்பணியில் சுழன்று கொண்டிருப்பவரிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம்.

துணிச்சலுக்கு பெயரெடுத்த ஸ்ரீப்ரியா... ஆனால், அரசியலில் மென்மையான போக்கை கடைப்பிடிக்கிறீர்களே?

"அனைத்துக் கட்சியினரையும் மரியாதையுடன்தான் பேசவேண்டும் என்று எங்கள் தலைவர் ஆரம்பத்திலேயே கூறியுள்ளார். அவரும் நாகரிகமாகத்தான் பேசுவார். அதனையே, நான் மட்டுமல்ல... கட்சியினரும் கடைபிடித்து வருகிறோம். எப்போதும் அடுத்தவரை துன்புறுத்தி எனது கருத்தை சொல்லவேண்டும் என்று நினைத்ததில்லை."

வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவீர்களா?

"பதவிக்காக நான் அரசியலுக்கு வரவில்லை. கட்சியின் மகளிரணியை வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்தபோது 'எல்லா மட்டத்திலும் பணிபுரியவே விரும்புகிறேன்' என்று கூறினேன். தேர்தலில் நின்றுதான் மக்கள் சேவை செய்யவேண்டும் என்பதில்லை. ஆனால், தலைவர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன்."

கடந்த தேர்தல்களில், உங்கள் கட்சிக்கு நகர்ப்புற மக்களின் வாக்குகளே கிடைத்த நிலையில், அதிமுக - திமுகவைத் தாண்டி கிராமப்புற மக்களின் வாக்குகளைக் கவர்வதற்கு என்ன வியூகம் வைத்துள்ளீர்கள்?

"ஆரம்பத்தில் கமல் கட்சி என்றுதான் மக்களுக்கு தெரிந்ததே தவிர, கட்சியின் பெயர் சரியாக போய்ச் சேரவில்லை. ஆனால், இப்போது அதனை மாற்றிவிட்டார் தலைவர். தொடர்ச்சியாக கிராமப்புறங்களுக்குச் சென்று மக்கள் மனதில் கட்சியை நிலைக்க வைத்துவிட்டார். கண்டிப்பாக லஞ்சம், ஊழல் இல்லாத ஆட்சியை வழங்குவார். ஒரு காலத்தில் கிராமங்களில் காங்கிரஸ் கட்சி மட்டுமே இல்லையா? அதன்பிறகு திமுக, அதிமுகவாக அது மாறவில்லையா? அப்படித்தான் நிலைமை மாறும். அதுவும், இப்போதைய தலைமுறையினர் சிந்திக்கக் கூடியவர்கள். நல்லது கெட்டது அறிந்தவர்கள். வம்சாவளியாக ஒரே கட்சிக்கு ஓட்டுப்போட இப்போது விரும்புவதில்லை."

image

சினிமாவில் நடிக்க வாய்ப்பு போன பிறகே கமல்ஹாசன் அரசியலுக்கு வந்துள்ளதாக அதிமுகவினர் விமர்சிக்கிறார்களே?

"மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற நல்ல எண்ணத்தை எதனுடனும் ஒப்பிடவேக் கூடாது. ஓட்டுப் போடும் ஒவ்வொருவருமே அரசியலில் ஈடுபட்டவர்கள்தான். அதுவும், அரசியல் பங்கேற்புதான். ஒவ்வொரு தேர்தலின்போதும் தலைவர் ஓட்டுப் போட்ட போட்டோ செய்தித்தாள்களில் வரும். அதுமட்டுமல்ல, எங்கள் தலைவர் 60 வருடங்களாக சினிமாவில் இருக்கிறார். அவருக்கென்று ஃபேன்ஸ் கிளப் வைக்கவில்லை. ஆனால், அவரது நற்பணி மன்றத்தின் மூலம் பல்வேறு சேவைகளை செய்துள்ளனர். அதனால், இவர்கள் தலைவர் குறித்து விமர்சிப்பதற்கு முன்பு யோசித்துப் பார்க்கவேண்டும்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் இபிஎஸ், ஓபிஎஸுக்கா வாக்களித்தார்கள்? ஜெயலலிதா அம்மாவுக்காக வாக்களித்தார்கள். என்னவோ இவர்களுக்கே வாக்களித்த மாதிரியல்லவா அடுத்தவர்களை விமர்சிக்கிறார்கள். ஒரு நடிகர் முதல்வராகலாம். ஆனால், ஒரு முதல்வர் எல்லாம் தெரிந்த மாதிரி ஒரு நடிகராக இருக்கக்கூடாது. ஆட்சி நன்றாக செய்தால் தலைவர் ஏன் அரசியலுக்கு வரப்போகிறார்? எங்களை வரவைத்ததே இவர்கள்தான். கம்பராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார் என்று சொல்வதிலேயே இது எப்படிப்பட்ட ஆட்சி என்பது தெரியவில்லையா?"

வலுவான இரு கூட்டணிகள் களத்தில் இருக்கும்போது, சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் எப்படி தாக்குப்பிடிக்கும்?

"எங்கள் தலைவர் மக்களுடன் நல்ல தொடர்பில் உள்ளவர். புதியவர் கிடையாது. கமல்ஹாசன் என்ற பெயர் தமிழக மக்கள் மனங்களில் ஒலிக்கும் பெயர். அவர்மீது எங்களுக்கு மட்டுமல்ல, மக்களுக்கும் பெரிய நம்பிக்கை உள்ளது. அது தேர்தலில் வாக்குகளாக வெளிப்படும்."

image

கமல்ஹாசன் முன்னணி நடிகர். எம்.ஜி.ஆரை பெயரைச் சொல்லித்தான் வாக்கு கேட்கவேண்டுமா? எம்.ஜி.ஆர் எங்கள் சொத்து என்கிறார்களே அதிமுகவினர்?

அதிமுகவினர் 'இது அம்மா ஆட்சி என்றுதானே சொல்கிறார்கள்? எம்.ஜி.ஆர் ஆட்சி என்று ஏன் சொல்வதில்லை? எம்.ஜி.ஆர் எங்களுக்கெல்லாம் ஆசான். வழிகாட்டி. எங்கள் கலைத்துறையில் இருந்து வந்தவர். நாங்கள் அவரது பெயரை உபயோகிப்பதில் என்னத் தவறு இருக்கிறது? அதில், இவர்களுக்கு என்ன பிரச்னை? மக்கள் நீதி மய்யம் கட்சி ஆரம்பிக்கும்போதே ‘நாளை நமதே'தான் எங்கள் முழக்கமாக இருந்தது. 'நாளை நமதே' புரட்சித் தலைவரின் முழக்கம். அதனால், தேர்தல் என்றவுடன்தான் அவரை இழுக்கிறோம் என்பது தவறானது."

ஆனால், எம்.ஜி.ஆர் பெயரைச் சொல்லி அரசியலுக்கு வந்த பலர் காணாமல் போய்விட்டர்கள் என்று அதிமுக விமர்சனம் செய்கின்றதே?

"அதிமுகவும் தேர்தல் சமயத்தின்போது மட்டும் எம்.ஜி.ஆரை ஏன் இழுக்கிறது? அது என்ன காணாமலா போய்விட்டது? காந்தியடிகள், பெரியார், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர் ஆகிய தலைவர்களைப் எங்களின் முன்னோடிகளாகப் பார்க்கிறோம். இவர்கள் ஒரு கட்சியினருக்கே மட்டுமே சொந்தம் கிடையாது. அனைவருக்கும் சொந்தம். பொதுவுடைமையானவர்கள்."

காங்கிரஸ் கட்சி கமல்ஹாசனை தொடர்ச்சியாக தங்கள் கூட்டணிக்கு அழைக்கிறதே?

"கூட்டணி யாருடன் என்று தலைவரும், அதற்கான குழுவினரும் முடிவு செய்வார்கள். எனக்கு நம்பிக்கை உண்டு... தலைவர் சரியானவர்களைத்தான் காட்டுவார்கள். யாருக்கு வேலை செய்யவேண்டும் என்று சொன்னாலும் செய்வோம்."

அதிமுகவை விமர்சிக்கும் அளவுக்கு, பிரதமர் மோடியை கமல்ஹாசன் கடுமையாக விமர்சிப்பதில்லையே என்ற குற்றச்சாட்டு இருக்கிறதே?

"எனக்கு தெரிந்து தலைவர் அப்படி கிடையாது. தவறு செய்பவர்களை தொடர்ந்து சுட்டிக்காட்டித்தான் வருகிறார். பிரதமர் மோடிக்குகூட நீண்ட கடிதம் எழுதி இருந்தார்."

கமல்ஹாசன் பிக்பாஸுக்குதான் முதல்வர் ஆகலாம். தமிழகத்துக்கு ஆகமுடியாது அதிமுகவினர் விமர்சிக்கிறார்களே?

"அதிமுகவினரே பிக்பாஸ் பார்க்கிறார்கள். ஒரு நிகழ்ச்சியை பார்த்துவிட்டு விமர்சனம் செய்யலாம். ஆனால், பார்க்காமல் செய்யக்கூடாது. கமல் சார் சினிமா துறையை சேர்ந்தவர். அவருக்கு தெரிந்த வேலை இது. அரசியல் என்பது தனி. இரண்டையும் ஒப்பீடு செய்து விமர்சிக்கக் கூடாது."

image

குடும்பத்தலைவி, நடிகை, இயக்குநர், அரசியல்வாதி என பல முகங்களில் எப்படி பயணிக்க முடிகிறது?

"குடும்பத்தலைவி, நடிகை, இயக்குநர், அரசியல்வாதி மட்டுமல்ல... எம்ராய்டிங் செய்வது, ஓவியம் வரைவது என அனைத்தையும் கவனிக்கும் திறமை திறமை இருப்பதால் செய்கிறேன். என்னால் மல்டி டாஸ்கிங் பண்ணமுடியும். பிடிக்காத எதையும் செய்யமாட்டேன். பிடித்த விஷயத்தை மட்டுமே செய்வேன்."

கமல்ஹாசன் சமீபத்தில் மேடையில் அனைவரையும் நிற்கவைத்து, அவர் மட்டும் உட்கார்ந்திருந்தது விமர்சனத்தை ஏற்படுத்தியதே?

"தலைவர் அனைவரிடமும் எளிமையாக பழகுபவர். கொரோனா சூழலில் மேடையில் நிறைய பேர் ஏறக்கூடாது என்பதற்காக நிற்க வைத்தார். மற்றக் கட்சியினர்போல் காலில் விழ வைக்கும் பழக்கமெல்லாம் அவருக்கு கிடையாது. அப்படியே விழ வந்தாலூம் 'உங்க அம்மா அப்பா காலில் விழுங்கள்' என்று தடுத்துவிடுவார். அப்படிப்பட்டவர் எப்படி இதுபோன்ற செயலை செய்வார்? கட்சியின் அடிமட்ட தொண்டர்களுக்கும் எனக்கும் ஒரே மாதிரியான மரியாதையைத்தான் கொடுப்பார்."

ரஜினியின் அரசியல் நிலைப்பாட்டை எப்படி பார்க்கிறீர்கள்?

"ரஜினி சார் மருத்துவமனையில் இருந்து வந்தவுடனேயே 'உடம்ப பார்த்துக்கொள்ளுங்கள்' என்று போன் செய்து பேசினேன். எனக்கு தெரிந்து, அவருக்கு பெரிய விருப்பம் இல்லாமல் இருந்திருக்கலாம். சூழ்நிலையால் அரசியலுக்கு வந்திருக்கலாம். அரசியலுக்கு வருவது வராததெல்லாம் அவருடைய விருப்பம். ஆனால், அரசியலுக்கெல்லாம் அப்பாற்பட்டது எங்களுடைய நட்பு. ஒரு நண்பராக அவர் ஆரோக்கியம்தான் முக்கியம் என்பேன்."

image

'மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கும் சம்பளம் கொடுக்கப்படும்' என்று அறிவித்திருக்கிறாரே கமல்ஹாசன்? இது பெண்களின் வாக்குகளைக் கவர்வதற்காகவா?

"பெண்கள்தான், குடும்பத்தை நிர்வகிப்பவர்கள். வறுமைக்கோட்டிற்குகீழ் உள்ள பெண்களுக்கு இந்தத் திட்டம் தன்னம்பிக்கையை கொடுக்கும். 'நான்தான் படிக்கவில்லை என் பிள்ளை படிக்கட்டும்' என்று பிள்ளைகளை படிக்க, அந்த சம்பளத்தை செலவு செய்வார்கள். அதேபோல, குடும்பத் தலைவியாக இருக்கும் பெண்கள் என்பவர்கள் ஒரு கணவரை இழந்தவராகவோ பிரிந்தவராகவோக்கூட இருக்கலாம். அவர்களுக்கும் இந்தத் திட்டம் பெரிய உதவியாக இருக்கும். அப்படியே பெண்களின் வாக்குகளுக்காக என்றாலும்கூட என்ன தவறு இருக்கிறது? பெண்கள்தான் நாட்டில் மாற்றத்தை உருவாக்குபவர்கள். அவர்களுக்கு இது மரியாதை செய்வதற்கு சமம்."

ஆனால், இதுவும் இலவசம் கொடுப்பதுபோல் ஆகிவிடுமல்லவா?

"இலவசமே கிடையாது. தன்னோட அம்மாவுக்கு ஒரு புடவை வாங்கிக் கொடுத்தால் அது இலவசமாகிவிடுமா? நாட்டை தாய்நாடு என்றும் மொழியை தாய்மொழி என்றும் கூறும்போது இல்லத்தரசிகளுக்கு சம்பளம் கொடுப்பது தாய்க்கு கொடுப்பது போன்றதுதான். அப்படி, கொடுக்கும் திட்டத்தில் ஊழல் நடந்தால் மட்டும்தான் தவறு. இதுவொரு நல்ல திட்டம். யாரும் கொச்சைப்படுத்த வேண்டாம். எங்கள் கட்சி எந்த நல்லது செய்தாலும் அதில் கண்டிப்பாக ஊழல் நடக்காது."

- வினி சர்பனா

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்