[X] Close

"அதிமுக திருந்துவதற்கு வாய்ப்பில்லாத கட்சி!" - கமல்ஹாசன் நேர்காணல்

நேர்காணல்

Kamal-Haasan-says-AIADMK-is-a-party-that-has-no-chance-to-change

'தலைவர்களுடன் ஒரு நாள்' நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அளித்த சிறப்பு நேர்காணலில், 'புதிய தலைமுறை' தொலைக்காட்சியின் நிர்வாக ஆசிரியர் கார்த்திகைச் செல்வன் முன்வைத்த பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அதன் சில துளிகள் இங்கே...

தேர்தல் அரசியலில் ஊழல் அல்லது லஞ்சம்தான் பிரதான பிரச்யனையா? பிரிவினையை உண்டாக்கும் அரசியல் கருத்துக்கள் பரப்பப்படுகிறதே...

"அடுக்கடுக்கான பிரச்னைகள் உள்ளன. அதில் முதல் பிரச்னை லஞ்சம். அது காய்ச்சலைப் போல் பரவி மக்களை வதைக்கிறது. மக்கள் மத்தியில் பிரிவினையை உண்டாக்கும் பிரசாரத்தையும் எதிர்ப்போம். அதை எப்போதும் எதிர்த்து வருகிறோம்.''


Advertisement

திரைத்துறையில் இருந்து ஓய்வு பெற்றபின் கமல்ஹாசன் அரசியலுக்கு வந்துள்ளார் என்று நிலவிவரும் கருத்து...

''நான் ஒன்றும் விளையாட்டு வீரர் அல்ல. நடிகர்களும், வழக்கறிஞர்களும் எந்த வயதில் வேண்டுமானாலும் வேலை செய்யலாம். கலைஞனுக்கு வயது கிடையாது. ரிட்டையர்ட்மென்ட் என்பது என்னை வெறுப்பவர்கள் பேசும் ஒன்றும்.''

image


Advertisement

தேர்தலில் எந்த கட்சியை அல்லது எந்த தலைவரை எதிர்த்து நிற்பீர்கள்?

''கால்பந்து விளையாட்டைப் பார்ப்பது போன்று அரசியலை பார்ப்பது தவறு. திமுக, அதிமுக இரு கட்சிக்கும் வேண்டாம், மூன்றாவதாக இருக்கும் கட்சிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்கிறோம். 'ஆம் இல்லை'.. 'ஆம் இல்லை'.. என்றே வாழ்க்கை போய்க்கொண்டிருக்க முடியாது.

மூன்றாவது ஒரு நிலையை கண்டுபிடிக்க வேண்டும் அப்படியொரு வார்த்தை இல்லையென்றால் அந்த வார்த்தையை கண்டுபிடியுங்கள். திமுக, அதிமுக தவிர்த்து வேறு கட்சிகளே இல்லையா? சிறுசிறு துளி பெரும் வெள்ளமாக மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. திமுக, அதிமுகவும் வெற்றி பெறுவதற்கான தகுதியை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கிறார்கள்.

பாஜக தமிழகத்திற்கு பொருத்தமற்ற கட்சி. அதிமுக திருந்துவதற்கு வாய்ப்பில்லாத கட்சி. திமுக திருந்தினால் நல்லது. திராவிட இயக்கம் என்பது திமுக, அதிமுக மட்டும் கொண்டாடும் விஷயங்கள் அல்ல. திராவிடம் என்பது ஓர் தனிப்பெரும் இயக்கம். அதிலிருந்து மலர்ந்த மலர்கள் தான் இவை.

மூன்றாவது அணி என்பது வெவ்வேறு வியூகத்தில் அமைய வாய்ப்புண்டு. எல்லா கட்சிகளிடமிருந்தும் எனக்கு அழைப்புகள் வருகின்றன. ஆட்சியில் இருப்பவர்கள் நீங்க வேண்டும். ஊழல்வாதிகள் வரக்கூடாது.''

ரஜினிகாந்திடம் ஆதரவு கேட்பீர்களா?

''என் நண்பனிடத்தில் கேட்பதற்கான உரிமை என்னிடம் இருக்கிறது. கண்டிப்பாக கேட்பேன்'' என்றார்.

2017-ம் ஆண்டு நடந்த ஒரு நேர்காணலில், தேர்தல் அரசியலில் ஈடுபடுவது பயமாக உள்ளது. ஏனெனில் நான் கோபக்காரன். இந்தக் களம் சரியாக இருக்குமா என தெரியவில்லை என்று சொன்னீர்கள். இப்போது இந்தக் களம் சரியாக இருக்கும் என எண்ணுகிறீர்களா?

"எனக்கு இப்போது பலம் தருவதே என் கோபம்தான். வெறும் பாமரத்தனமான கோபமாக அப்போது இருந்தது. அந்தக் கோபம் பண்பட்ட கோபமாக இப்போது மாறியிருக்கிறது."

ஆன்மிக அரசியலுக்கான இடமிருக்கிறது என்றும் திராவிட ஆட்சிகளுக்கு எதிரான வேறொரு கருத்தியல் வெற்றி பெறக்கூடியதாக மாறுகிறது என்றும் சொல்லப்படுகிறது. இதில் மக்கள் நீதி மய்யத்தின் நிலைப்பாடு என்ன?

"ஜனநாயகம் வருவதற்கு முன்பாகவே இங்கே ஆன்மிகம் இருந்திருக்கிறது. அதுவொரு பகுதிதான். அதையும் சேர்த்து பரிபாலனம் செய்வதுதான் பகுத்தறிவு. எனவே, பகுத்தறிதல் என்பது நிரகாரித்தல் என்பதாகாது. அரசியல், ஆளுகை என்று வரும்போது எல்லோரும் உள்பட்டதுதான். தோற்கும் கட்சியும் மக்களில் ஒருவர்தானே."

வாக்கு அரசியலில் எம்.ஜி.ஆரை முன்னிறுத்தும் அளவிற்கு கருணாநிதியை முன்னிறுத்தவில்லையே?

"கலைஞர், என்னிடம் பிரியமாக இருந்தார். அதற்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். தமிழுக்கு கலைஞர் செய்ய விரும்பியதை நானும் செய்ய விரும்புகிறேன். ஆனால் நெருக்கம் என்று சொன்னால் அது எம்.ஜி.ஆர்., சிவாஜி அவர்களுடன்தான். அதற்கு காரணம், நான் செய்து கொண்டிருந்த தொழில். அவர்கள் செய்து கொண்டிருந்த தொழில். அதனால் எங்கள் நெருக்கம் இன்னும் அதிகமாக இருந்தது."

image

எம்.ஜி.ஆர். நல்ல படங்களை தந்தார். ஆனால் கமலின் படங்களை பார்த்தால் குடும்பங்கள் உருப்படாது என்று முதல்வர் பழனிசாமி சொல்லி இருக்கிறாரே?

"அவர் அரசியலை கவனிக்காதது போன்று எனது படங்களையும் கவனிக்கவில்லை என்றுதான் தோன்றுகிறது. 'நல்லது சொல்ல வேண்டும் என்ற முனைப்பு உங்களிடம் தெரிகிறது, வாழ்த்துக்கள் 'என்று சினிமாவை அடிக்கடி பார்க்கதாவர்கள்கூட என்னிடம் சொல்லி இருக்கிறார்கள். 'ஹே ராம்' படமாக இருக்கட்டும் 'தேவர் மகன் படமாக இருக்கட்டும் அதிலுள்ள பூடகமான கருத்து மக்கள் நலனுக்கான கருத்தாக இருக்கும்."


Advertisement

Advertisement
[X] Close