Published : 19,Jul 2017 04:26 PM
காய்ச்சல் பாதித்த மாணவர்களை கண்காணிக்க உத்தரவு

கோவை மாவட்டத்தில் காய்ச்சல் காரணமாக பள்ளிகளில் விடுப்பு எடுக்கும் மாணவர்களைக் கண்காணிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. காய்ச்சல் காரணமாக பள்ளிக்கு வராத மாணவ, மாணவிகள் வசிக்கும் பகுதிகளுக்குச் சென்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், ஆங்காங்கே தேங்கி நிற்கும் கொசுக்களால் காய்ச்சல் பரவுகிறது. இதனிடையே பொதுமக்களை காய்ச்சல் பாதிப்பிலிருந்து கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒருபகுதியாக, காய்ச்சல் காரணமாக விடுப்பு எடுக்கும் மாணவர்கள் பற்றிய விவரங்களை நாளை காலை 11 மணிக்குள் தெரிவிக்க அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அதன்மூலம், பாதிக்கப்பட்ட மாணவர்கள் உள்ள பகுதிக்கு சுகாதாரத்துறையினர் சென்று நடவடிக்கை எடுக்க வசதியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.