[X] Close

அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!

உலகம்,சிறப்புக் களம்

Minds-behind-US-President-Joe-Biden---s-inaugural-speech--Who-is-Vinay-reddy

அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்றுக்கொண்டார். இதையடுத்து, அவர் தொடக்க உரையை நிகழ்த்தினார். உலக அரங்கில் கவனம் ஈர்த்த அவரது உரை வடிவமைப்பில் பங்கு வகித்த்தவர்களில் முக்கியமானவர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது அனைவருக்கும் ஆச்சரியம் தரும் உண்மை.

இந்திய வம்சாவளியைக் கொண்டவர் வினய் ரெட்டி. இவர்தான், பைடன் பதவியேற்பு விழாவில் பேசிய உரையை தயாரித்து தரும் பணியில் முக்கிய இடம்பெற்றவர். இந்த உரையை தயாரிக்கும் குழுவை வழிநடத்தியவர் வினய். பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் பிரச்சாரத்தின்போது பேசிய உரையை தயாரித்து கொடுத்ததும் இவர்தான். முன்பு பராக் ஒபாமாவின் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபர் பதவியிலிருந்தபோது, பைடன் துணைத் தலைவராக இருந்தார். அப்போது, வினய் அவர்களின் உரையை வடிவமைக்கும் குழுவில் தலைமை அதிகாரியாக இருந்தார்.

image


Advertisement

தெலங்கானாவில் உள்ள பொதிரிடெடிபெட்டா கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் வினய். பல ஆண்டுகளுக்கு முன்பாக அவரது பெற்றோர் அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்துவிட்டனர். வினய் பிறந்து வளர்ந்தது அமெரிக்காவில்தான். ஓஹியோ மாநில பல்கலைக்கழக சட்டக் கல்லூரியில் படித்தார். மியாமி பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற அவர், அரசியல் அறிவியல் மற்றும் தத்துவத்தில் இரட்டைப் பட்டம் பெற்றுள்ளார். பைடனின் உரைகளை எழுதி வடிவமைக்கும் துறையின் இயக்குநராக உள்ளார்.

அமெரிக்க அதிபர்களின் உரை!

1789 ஏப்ரல் 30ம் தேதி அமெரிக்காவின் முதல் அதிபராக ஜார்ஜ் வாஷிங்டன் பதவி ஏற்றதிலிருந்து உரை நிகழ்த்துவது பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. "சுதந்திரத்தின் புனிதமான நெருப்பு" மற்றும் "புதிய மற்றும் சுதந்திரமான அரசாங்கம்" என்ற தலைப்பில் தனது முதல் உரையை நிகழ்த்தினார் ஜார்ஜ் வாஷிங்டன்.


Advertisement

1793 ஆம் ஆண்டில் அவரது இரண்டாவது பதவிக்காலத்தில், 135 சொற்களைக் கொண்ட வாஷிங்டனின் பேச்சு மிகவும் சிறியதாக இருந்தது. 1841-ஆம் ஆண்டு பதவி ஏற்ற வில்லியம் ஹென்றி ஹாரிசனின் பேச்சு 8,455 சொற்கள் கொண்ட மிக நீளமான உரையாக பதிவாகியுள்ளது. அவரது அந்த உரையானது இரண்டு மணி நேரம் நீடித்தது.

1961 ஆம் ஆண்டு, ஜான் எஃப் கென்னடி தனது தொடக்க உரையின்போது பொது சேவை செய்ய மக்களுக்கு அழைப்பு விடுத்தார், "என் சக அமெரிக்கர்களே! உங்கள் நாடு உங்களுக்காக என்ன செய்தது என்று கேட்காதீர்கள்... நீங்கள் உங்கள் நாட்டுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்று நினைத்துப்பாருங்கள்" என்று கூறினார்.

ஸ்பீச் ரைட்டர்ஸ்!

உரைகள் தயாரிப்பு அலுவலகம் என்பது வெள்ளை மாளிகையில் உள்ள ஓர் அதிபரின் துறையாகும். அதிபரின் உரைகளை ஆராய்ந்து எழுதுவது இந்த துறையின் முக்கியமான பணி.

“அதிபர் யோசனைகளை வார்த்தைகளாக மொழிபெயர்ப்பது” குறித்த 2019-இல் நடந்த கலந்துரையாடலில், ஒபாமாவின் பேச்சு எழுத்தாளர்களில் ஒருவரான சரதா பெரி இப்படி குறிப்பிடுகிறார். ``பேச்சுக்கான உலகம் பார்வையாளர்கள்தான்” என்றார். அவருடன் பணியாற்றிய கெய்லி ஓ கார்னர் என்பவர், ``அதிபரின் நடை மற்றும் குரல் தொனியில் கவனம் செலுத்துவது முக்கியம்” என கூறியிருந்தார்.

ஜோ பைடனின் நீண்டகால ஆலோசகராக இருந்த மைக் டொனிலோன், இந்தத் தொடக்க உரையின் உள்ளடக்கத்தை மேற்பார்வையிட்டார். பின்னர் வரலாற்றாசிரியரும், அதிபரின் சுய சரிதை ஆசியருமான ஜான் மீச்சமும் உரையின் வரைவை வடிவமைக்க உதவினார்.

image

அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பைடன் தனது முதல் உரையில், "எல்லா அமெரிக்கர்களுக்கும் நான் அதிபராக இருப்பேன். அமெரிக்காவை ஒன்றிணைத்தல், நம் மக்களை ஒன்றிணைத்தல், நம் தேசத்தை ஒன்றுபடுத்துதல் என்று இதில் தான் எனது முழு ஆன்மாவும் உள்ளது. அமெரிக்காவின் ஆன்மாவை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும்; இந்த தேசத்தின் முதுகெலும்பை மறு சீரமைக்க வேண்டியது அவசியம். அமைதி, முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பிற்கான வலுவான மற்றும் நம்பகமான பங்காளியாக நாங்கள் இருப்போம்.

அரசியலமைப்பையும், நமது ஜனநாயகத்தையும், அமெரிக்காவையும் நான் பாதுகாப்பேன், நான் செய்யும் எல்லாவற்றையும் உங்கள் சேவையில் வைத்திருப்பேன், அதிகாரத்தைப் பற்றி அல்ல, சாத்தியக்கூறுகளை நினைத்து, தனிப்பட்ட நலன்களுக்காக அல்ல, பொது நலனுக்காக. மக்களின் விருப்பம் கேட்கப்பட்டு, மக்களின் விருப்பத்திற்கு செவிசாய்க்கப்பட்டுள்ளது. இது அமெரிக்காவின் நாள். இது ஜனநாயக நாள். வரலாறு மற்றும் நம்பிக்கையின் நாள்" என்று தனது 21 நிமிட உரையில் நம்பிக்கை வரிகளை குறிப்பிட்டார். இந்த உரைக்கு நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை பாராட்டு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

- மலையரசு


Advertisement

Advertisement
[X] Close