[X] Close

சென்னையைத் தாக்கிய புயல்கள்: ஒரு ரீவைண்ட் பார்வை!

சிறப்புக் களம்,தமிழ்நாடு

Chennai-Cyclones-in-Last-50-years

வங்கக் கடலில் உருவாக உள்ள ‘நிவர்’ புயல் நாளை மறுநாள் காரைக்கால்-மாமல்லபுரம் இடையே கரையை கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள நிலையில், இதற்கு முன்னதாக சென்னையைத் தாக்கிய புயல்கள் பற்றியத் தொகுப்பை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.


Advertisement

தெற்கு மற்றும் வங்கக் கடலின் மத்திய பகுதியில் நேற்று முன்தினம் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னையில் இருந்து சுமார் 700 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், பின்னர் புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகரும் என வானிலை மையம் கூறியிருக்கின்றது.

image


Advertisement

‘நிவர்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல், நாளை மறுநாள் பிற்பகலில், காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இன்று, தென்மேற்கு மற்றும் தமிழக கடலோரப் பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழக கடலோரப் பகுதியில், சூறாவளிக் காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 75 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஆகையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிகத்தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

முன்னதாக சென்னையை தாக்கிய புயல் விவரங்கள்

1972 ஆம் ஆண்டு சென்னையை புயல் தாக்கியது. அந்தப் புயலின்போது 100 மிமீ முதல் 150 மிமீ வரை மழை பதிவானதாகச் சொல்லப்படுகிறது. மணிக்கு 115 கிமீ முதல் 170 கிமீ வரையிலான வேகத்தில் வீசிய இந்தப் புயலானது ஸ்ரீஹரிகோட்டா வழியாக கரையைக் கடந்தது.


Advertisement

1984-ஆம் ஆண்டு மற்றொரு புயல் சென்னையைத் தாக்கியது. இந்தப் புயலின்போது 400 மிமீ மழை பதிவானது. ஸ்ரீஹரிகோட்டா வழியாக கரையைக் கடந்த இந்தப் புயல் காற்றின் வேகமானது மணிக்கு 213 கிமீ வேகத்தில் வீசியது.

image

1985-ஆம் ஆண்டு சென்னையைத் தாக்கிய புயலானது நெல்லூர் வழியாக கரையைக் கடந்தது. புயல் உருவான 3 நாட்களில் 650 மிமீ முதல் 900 மிமீ வரை மழை பதிவானது. காற்றின் வேகமானது மணிக்கு 80 கிமீ முதல் 90 கிமீ வரை வீசியது.

1994 ஆம் ஆண்டு சென்னையை மீண்டும் புயல் தாக்கியது. புயல் உருவான 2 நாட்களில் 350 மிமீ மழை பதிவானது. காற்றின் வேகமானது 120 கிமீ முதல் 140 கிமீ வரை வீசியது. அந்தப் புயலின்போது புயலின் கண் பகுதியானது சென்னையைக் கடந்தது. இந்தப் புயலின்போது 69 நபர்கள் உயிரிழந்ததாகச் சொல்லப்படுகிறது.

1996 ஆம் ஆண்டு சென்னையைத் தாக்கிய புயலின்போது மணிக்கு 100 கிமீ வேகத்தில் காற்று வீசியது. 3 நாட்களில் 150 மிமீ மழையானது பதிவானது. அதனைத்தொடர்ந்து கடந்த 2005 ஆம் ஆண்டும் சென்னையை புயல் தாக்கியது. இந்தப் புயலுக்கு பாஸ் என்று பெயர் வைக்கப்பட்டது. ஒரே நாளில் 250 மிமீ மழை பதிவான அந்தப் புயலின்போது, காற்றின் வேகமானது 50 கிமீ வேகத்தில் வீசியது. பாஸ் புயலினால் பெருவெள்ளம் ஏற்பட்ட நிலையில், பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது.

image

2010 ஆம் ஆண்டு ஜல் புயல் சென்னையைத் தாக்கியது. சென்னைக்கு மிக அருகில் கரையைக் கடந்த இந்தப் புயலானது வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைத் தொட்டது. ஜல் புயலின்போது கனமழை இருந்தாலும் சென்னைக்கு பெரிதளவு பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் ஆந்திரா கடுமையாக பாதிக்கப்பட்டது.

அதன் பின்னர் கடந்த 2012 ஆம் ஆண்டு சென்னையைத் தாக்கிய நீலம் புயலின் போது 120 மிமீ மழை பதிவானது. இந்த மழையின் போது 19 பேர் பலியாகினர். காற்றின் வேகமானது 70 கிமீ வேகத்தில் வீசியது.

1994 ஆம் ஆண்டுக்குப் பிறகு, கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னையைத் தாக்கிய மிகப் பெரிய புயலாக வர்தா அமைந்தது. 192 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீசியதால் சென்னையில் நீண்ட காலமாக இருந்த பல மரங்கள் சரிந்து விழுந்தன. 24 நபர்கள் உயிரிழந்ததாகச் சொல்லப்பட்டது. 

அதன் பின்னர் கடந்த 2017-ஆம் ஆண்டு ஒகி புயலானது சென்னையைத் தாக்கியது. 2 நாட்களில் 300 மிமீ மழையிலிருந்து 500 மிமீ மழையானது பதிவானதாகச் சொல்லப்படுகிறது. அதிதீவிரமாக சென்னையைக்கடந்த இந்தப் புயலின்போது மணிக்கு 60 கிமீ வேகத்தில் காற்று வீசியது.

தகவல் உதவி: Tamil Nadu Weatherman


Advertisement

Advertisement
[X] Close