[X] Close

”ஹிதேந்திரன்…இதயத்தைவிட்டு நீங்காத; நீக்கமுடியாத பெயர்: இன்று ஹிதேந்திரன் நினைவு தினம்

சிறப்புச் செய்திகள்

hithendran

ஹிதேந்திரன்…


Advertisement

அவ்வளவு சீக்கிரம் நம் இதயத்தைவிட்டு நீங்காத;நீக்கமுடியாத பெயர். வெறும் பெயர் அல்ல… தமிழ் மக்களின் இதயங்களில் செதுக்கப்பட்ட விழிப்புணர்வு  கல்வெட்டு. துடி துடித்துக்கொண்டிருக்கும் உங்கள் மகனின் இதயத்தை எடுத்து இன்னொருவரின் உடம்பில் பொருத்தலாமா? என்று டாக்டர்கள் கேட்டால் நம் இதயம் என்ன பாடு பாடும். யோசிக்கும்போதே இதயத்தில் இரத்தக்கசிவு ஏற்படுவதுபோல் இருக்கிறதல்லவா? ஆனால், ஒரு சிறுமியின் உயிரைக்காப்பாற்ற மூளைச்சாவு அடைந்த தனது மகனின் துடித்துக்கொண்டிருக்கும் உயிருள்ள இதயத்தை ஹிதேந்திரனின் பெற்றோர் தானமாக கொடுத்தபிறகுதான் தமிழகத்தில் உறுப்புதானம் என்ற ஒன்று இருப்பதே தெரிய ஆரம்பித்தது. இந்தியாவில் உடல் உறுப்பு தானங்களில் தமிழகமும் முதன்மை மாநிலமாக இருப்பதற்கும்  ஹிதேந்திரன் உடலுறுப்புகளைத் தானம் செய்ததுதான் காரணம். இன்று ஹிதேந்திரனின் நினைவு தினம்.

கடந்த 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தேதி விபத்தில் சிக்கிய ஹிதேந்திரன் இரு நாட்கள் கடந்த பின்னர் மூளைச்சாவு அடைந்தது இதே செப்டம்பர் 23 ஆம் தேதிதான். சிறுமி அபிராமிக்கு ஹிதேந்திரனின் இதயம் பொருத்தப்பட்டதும் இதே நாளில்தான். ஹிதேந்திரனின் தாய் புஷ்பாஞ்சலியிடம் பேசினோம்,


Advertisement

image

தாய் புஷ்பாஞ்சலியுடன் ஹிதேந்திரன்

     “எங்க ரெண்டு பேரு வீட்டிலுமே முதல் பேரக்குழந்தைங்கறதால எல்லோருக்குமே அவன் செல்லப்பிள்ளை. நாங்க அவனை செல்லமா ஹிது… ஹிதேஷ்ன்னுதான் கூப்பிடுவோம். சின்ன வயசுலருந்தே ரொம்ப அமைதியானவன். யாரிடமும் அதிர்ந்துக்கூட பேசமாட்டான். அவன் உண்டு அவன் வேலை உண்டுன்னு இருப்பான். எல்லார்கிட்டேயும் ரொம்ப ஃப்ரண்ட்லியா பழகுவான். அவனுக்கு நான் அம்மா மட்டுமில்லை. அவனோட பெஸ்ட் ஃப்ரண்ட்டும் நான்தான். ஏன்னா, ஹிதேஷ் அம்மாச்செல்லம். சின்னப்பையன் லக்‌ஷ்மன் அப்பா செல்லம். கண்டிப்புடன் இருப்பாருன்னு ஹிதேஷ்க்கு அப்பா மேல கொஞ்சம் பயம். எல்லாத்தையும் என்கிட்டதான் ஷேர் பண்ணிக்குவான். தினமும் ஸ்கூல்ல என்ன நடந்தது? எங்கப்போறான்? யார்க்கிட்ட பேசுறான்னு  ஒன்னுவிடாம ஷேர் பண்ணிக்குவான். அப்படியும் மீறி நான் ஏதாவது அவங்க அப்பாக்கிட்ட சொல்லிட்டா ‘ஏன் மம்மி அப்பாக்கிட்ட சொன்னீங்க’ன்னு செல்ல சண்டைப்போடுவான். அவனுக்கு நானும், அவனோட பாட்டி விஜயலட்சுமியும்தான் உயிர். அடிக்கடி வந்து கையப்பிடிச்சிக்கிட்டு ‘எனக்கு நீங்களும், அம்மமாவும்தான்  பெஸ்ட் ஃப்ரண்ட்ஸ்’ன்னு சொல்லி குதூகலிப்பான்.


Advertisement

image

எனக்கு நேட்டிவ் பெங்களூரு. கணவருக்கு சென்னைதான். அவருடன் பிறந்தவங்க ஏழு பேர். அதுல அவர்தான் மூத்தவர். எங்க வீட்டிலும் நான் மூத்த பொண்ணு. 1993 ஜூன் 22-ந்தேதிதான் ஹிதேஷ் பிறந்தான். அவன் பிறந்து 5 வருஷம் கழிச்சிதான் சின்னவன் லக்‌ஷ்மன் பிறந்தான். நானும் கணவரும் தினமும் க்ளினிக் போய்டுவோம். நாங்க வர்ற வரைக்கும் சின்னவனை பொறுப்பாவும் கவனமாவும் பார்த்துக்கிறது ஹிதேஷ்தான். ஸ்கூல் விட்டுட்டு வந்ததும் அவன் தம்பிக்கூட கலகலப்பா சண்டைப்போட்டுக்கிட்டும் விளையாடிக்கிட்டும் இருப்பான். ஆனா, மத்த நேரத்திலெல்லாம் ரொம்ப அமைதி. தனிமையை அதிகமா விரும்புவான். செல்போனை எடுத்துக்கிட்டு மாடிக்குப்போயி அமைதியா பாட்டுக்கேட்டுட்டு இருப்பான். சமையல்ல அம்மா என்னப் பண்ணாலும் அவனுக்கு பிடிக்கும். ரசம் உருளைக்கிழங்கு பொரியல்னா விரும்பி சாப்பிடுவான். இறால் குழம்பும் ரொம்ப புடிக்கும்.

image

ஹிதேஷ் ரொம்ப நல்லா படிக்கிறப்பையன்னு சொல்லமாட்டேன். ஆவரேஜ் ஸ்டூடண்ட்தான். ஆனா, சயின்ஸ், சோஷியல் சயின்ஸ் பாடத்துல நல்ல மார்க்ஸ் எடுப்பான். ஏன்னா, அதுலதான் அவனுக்கு இன்ட்ரஸ்ட். ஆனா, கணக்குல கொஞ்சம் வீக். அதனால, அவனுக்கு டியூஷன் வெச்சோம். அதுக்கப்புறம், பிக்கப் ஆகிட்டான். ஒவ்வொரு சம்மர் லீவ்லேயும் பெங்களூருக்குப் போயிடுவோம். தம்பி, அம்மான்னு ஒட்டுமொத்தக் குடும்பமும் டூர் போறது ஹிதேஷ்க்கு மகிழ்ச்சித் திருவிழாதான்.

image

பத்து மாதக் குழந்தையாக ஹிதேந்திரன்

      அப்படித்தான், 2008 மே மாசம் ஏற்காடு டூர் போனோம்.

ஆனா, அதுதான் எங்கக்கூட அவன் வர்ற கடைசி டூர்ன்னு தெரியாமப்போச்சு. அதனாலயே என்னவோ தெரியல ரொம்ப குதூகலமா இருந்து எங்களை சந்தோஷப்படுத்தினான். அதுவும், ’ரொம்ப நாளாவே எனக்கு பலம் வந்துடுச்சு. உங்களை என் கையால தூக்கணும் அம்மா’ ன்னு சொல்லிக்கிட்டே இருப்பான்.  டேய்… அப்படியெல்லாம் தூக்கி அம்மாவை கீழப்போட்டுடாதடான்னு  சொல்வாரு கணவர். ஆனா, அன்னைக்கு எல்லோரும் ஃபோட்டோ எடுத்துக்கிட்டிருக்கும்போது என்கூட நின்னவன் திடீர்ன்னு என்னை தூக்கிட்டான். நான் தூக்கி வளர்த்தக் குழந்தை என்னயவே தூக்கிட்டான்னு நினைச்சு ரொம்ப சந்தோஷப்பட்டேன். அதுதான், முதல்முறையா அவன் என்னை தூக்கினது. ஆனா, அந்தக்கொடுப்பினை எனக்கு தொடரல. அதே வருஷத்துலேயே செப்டம்பர் 20 ந்தேதி எங்களை விட்டுட்டு போய்ட்டான்.

image

 என் ரெண்டு பிள்ளைங்களையுமே எப்பவும் ஸ்கூலுக்கு அனுப்பும்போது முத்தம் கொடுத்துதான் அனுப்புவேன். ஆனா, ஹிதேஷ் ப்ளஸ் ஒன் போனதும், ’ஏம்மா இன்னும் எனக்கு முத்தம் கொடுக்கிற? எனக்கு கூச்சமா இருக்கு. நான் என்ன சின்னக்குழந்தையா?’ன்னு சொன்னான். ‘டேய்… இப்ப மட்டுமில்லடா இன்னும் உனக்கு 50 வயசானாலும் எனக்கு நீ சின்னக்குழந்தைதான். அப்பவும் உனக்கு முத்தம் கொடுத்துக்கிட்டுத்தாண்டா இருப்பேன்னதும் அவனுக்குள்ள பாசச்சிரிப்பு.

image

தந்தை அசோகன் மற்றும் தம்பியுடன் ஹிதேந்திரன்

     என்னைக்குமே அவன் வெளியிலப்போகும்போது அவனுக்கு முத்தம் கொடுக்கமாட்டேன். ஆனா, அன்னைக்கு அவன் வெளியிலப்போகுபோது,  ‘பாய்மா’ன்னு சொல்லிட்டுப்போக அந்தப்பார்வை எனக்கு எதையோ தோணவெச்சது. அவன் கண்கள் எதையோ முன்கூட்டியே சொல்றமாதிரி இருந்துச்சு. உடனே, அவன்கிட்டப்போயி அவன் கையைப்புடிச்சு முத்தம் கொடுத்து அனுப்பிவெச்சேன். அதுதான், அவனுக்கு நான் கொடுத்த கடைசி முத்தம்.

 பத்தாவது படிக்கும்போது, அவங்க ஸ்கூலிலிருந்து ஹைதராபாத், காசி, கல்கத்தாவுக்கு டூர் கூட்டிக்கிட்டுப்போனாங்க. வரும்போது, வீட்டுல உள்ள எல்லோருக்குமே ஏதேதோ பொருட்கள்தான் வாங்கிட்டு வந்தான். ஆனா, எனக்கு மட்டும்தான் ட்ரெஸ் எடுத்துட்டு வந்தான். அதுவும், எனக்கு நாலு புடவை, பர்ஸ், காதுல போட்டுக்க ரெண்டு செட் கம்மல்னு வாங்கிட்டுவந்து கொடுத்து என் அன்பு முத்தத்தை பரிசா வாங்கிக்கிட்டான். ஒரு பத்தாவது படிக்கிற புள்ள அம்மா மேல இவ்வளவு பாசமா இருக்கிறது மட்டுமில்ல, பெரிய மனுஷன் மாதிரி அம்மாவுக்கு என்னப்புடிக்கும்னு பார்த்து வாங்கிட்டு வந்திருக்கானேன்னு யோசிச்சப்பதான் அவனோட நேசிப்பு எந்தளவுக்கு இருக்குன்னு புரிஞ்சுக்கிட்டேன். அப்படிப்பட்ட பாசமான பிள்ளைகூட முழுசா வாழ கொடுத்துவைக்கல.

image

      எங்கக்கூட 15 வருஷம்தான் வாழ்ந்தான். அவன் எங்களை விட்டுட்டுப்போனது நாங்க சாகுறவரைக்கும் உள்ள மரணவலி. அவன், இருக்கிற இடமே தெரியாது. அவ்வளவு அமைதியானவன். அதனாலதான், அவனோட உடலை புதைக்கும்போதுகூட எல்லோரும் சத்தம்போட்டுக்கிட்டிருந்தாங்க. ’தயவு செஞ்சு சத்தம் போடாதீங்க. என் பிள்ளை அமைதியை விரும்புறவன். அமைதியா உறங்கட்டும்’ ன்னு அமைதிப்படுத்தினேன். நாங்க ரெண்டு பேருமே டாக்டரா இருந்தாலும் அவனை பெத்தவங்க. அதனால, அவனோட உடல் புதைக்கப்பட்டாலும்  உயிர் எங்களோடுதான் இருக்கு. அவனோட  ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் ஏழைகளுக்கு துணி எடுத்துக் கொடுத்துக்கிட்டிருக்கேன்.  அவனோட அப்பா, ஹிதேந்திரன் மெமோரியல் ட்ரஸ்ட் ஆரம்பிச்சு விபத்துகளை தடுக்கவும் உறுப்புதானம் குறித்தும் பள்ளிக் கல்லூரிகளுக்கு சென்று தொடர்ந்து விழிப்புணர்வூட்டிக்கிட்டிருக்காரு. ஹிதேஷை என் சின்னப்பையன் லக்‌ஷ்மன் மூலமாத்தான் பார்த்துக்கிட்டிருக்கேன். அவனுக்கும் ஹிதேஷுக்கு அஞ்சு வயசு வித்யாசம். அவனும்  பைக்கை எடுக்கிறேன்னான். அவனுக்கு சொல்லி புரியவெச்சதும் புரிஞ்சுக்கிட்டான். தயவு செஞ்சு பெத்தவங்களை ரிக்வெஸ்ட் பண்ணி கேட்டுக்கிறேன். ஸ்கூல் படிக்கும்போது தயவு செஞ்சு வண்டியை கொடுக்காதீங்க. அவங்களுக்கான வயசு வரட்டும். ஹிதேஷ் இறந்தபிறகுதான் 108 ஆம்பூலன்ஸ் சேவையை இன்னும் துரிதப்படுத்தினாங்க. உடலுறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகமானது. உடலுறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வூட்ட மருத்துவமனைகளில் க்ரீஸ் கவுன்சிலர்களை நியமிச்சிருக்காங்க.  அவன் உயிரோட இருக்கும்போதும் என்னை உயர்வா வெச்சிருந்தான். இறந்தபிறகும் அவனால எனக்கு உயர்வுதான் கிடைச்சது. கல்பனா சாவ்லா விருதிலிருந்து பல விருதுகளை வாங்கிக்கொடுத்தான்” என்று கண்ணீரோடு நெகிழ்கிறார்.

image

ஹிதேந்திரன் விபத்தில் சிக்கிய செப்டம்பர் 20 ஆம் தேதி, அவரது தந்தை அசோகன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “ செப்டம்பர் 20 ஆம் தேதி ஹிது விபத்தடைந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டார்.  அன்புக்குரிய இளைஞர்களே  பைக்குகளில் பாதுகாப்பாக பயணம் செய்யுங்கள். நீங்கள் இந்த உலகத்திற்கு ஒருவராக இருக்கலாம். ஆனால், உங்கள் பெற்றோருக்கு நீங்கள்தான் உலகம்” என்று உருக்கமுடன் விழிப்புணர்வு செய்து பதிவிட்டிருக்கிறார்.

- வினி சர்பனா

 


Advertisement

Advertisement
[X] Close