Published : 04,Jul 2017 10:52 AM
ஆள்வது மோடி... திரையுலகம் கிடக்கிறது வாடி.... டி.ராஜேந்தர் கொந்தளிப்பு

இந்தியாவை ஆண்டுகொண்டிருப்பது பிரதமர் மோடி; தமிழகத்தில் திரையரங்குகள் எல்லாம் கிடக்கிறது மூடி; தமிழ் திரையுலகமே கிடக்கிறது வாடி என்று டி.ராஜேந்தர் கூறியிருக்கிறார்.
ஜி.எஸ்.டி வரி விதிப்பைக் கண்டித்து டி.ராஜேந்தர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் பேசிய அவர், “ஏழை எளிய மக்களை பாதிக்கும் ஜி.எஸ்.டி விதிப்பைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்த அனுமதி கேட்டேன். ஆனால் எங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தக் கூட இந்த ஆட்சியில் அனுமதியில்லை. ஜி.எஸ்.டி பிரச்னையில் திரையரங்குகள் மூடியிருப்பதைப் பார்க்கும்போது மனம் வருத்தமளிக்கிறது” என்றார்.
மேலும், அவருடைய பாணியில், “இந்தியாவை ஆண்டுகொண்டிருப்பது பிரதமர் மோடி; தமிழகத்தில் திரையரங்குகள் எல்லாம் கிடக்கிறது மூடி; தமிழ் திரையுலகமே கிடக்கிறது வாடி; உணர்வுள்ளவர்கள் இங்கு நிற்கிறோம் கூடி; உணர்ச்சியைக் கொட்டுவதற்காக வந்திருக்கிறேன் உங்கள் தாடி” என்றார். மேற்கொண்டு பேசிய அவர், பெரிய தயாரிப்பாளர்கள் யாரும் இப்பிரச்சனைக்கு குரல் கொடுக்கத் தயாராக இல்லை என்றும், சிறிய தயாரிப்பாளர்களால் இதைத் தாங்க முடியாது என்றும் கூறினார். ஜி.எஸ்.டி 28 சதவீதம், தமிழக அரசின் கேளிக்கை வரி 30 சதவீதம், இதர வரிகள் 4 சதவீதம் என 62 சதவீத வரி விதிக்கப்பட்டிருப்பது தாங்க முடியாத வலியை ஏற்படுத்துகிறது என்றார். திரையரங்க உரிமையாளர்கள் போராட்டத்தை குறை கூறவில்லை. ஆனால் வரும்முன் காப்பதே சிறந்தது என்று உணரவில்லை. இப்போது வேறு வழியில்லாமல் திரையங்கங்களை மூட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இவற்றை எல்லாம் பார்த்த பின்பும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எந்த பதிலும் சொல்லவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.
தமிழ் இனத்துக்கு துரோகம் செய்த காங்கிரஸ் அரசு திரும்பவும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக பாஜகவுக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்தோம். ஆனால் காங்கிரஸ் ஆட்சியை விட மோசமான ஆட்சி நடைபெறுகிறது. இந்த ஜி.எஸ்.டி வரியை எடுத்துக் கொண்டால், உலகத்தில் எந்த நாட்டிலும் 28 சதவீதம் ஜி.எஸ்.டி வரி இல்லை. பணக்கார நாடு குவைத்தில் 5 சதவீதம், உலகின் வல்லரசு நாடு அமெரிக்காவில் 7.5 சதவீதம், ரஷ்யாவில் 18 சதவீதம், சீனாவில் 17 சதவீதம், இந்தியாவில் 28 சதவீதம் வரி போட்டுள்ளார், மோடி. ஒரு ஏழை நாடு இந்தியா, இந்த வரியை எப்படி தாங்கமுடியும் என்றார். ஒருவேளை சோற்றுக்கு வழியில்லாத நாட்டில், மக்கள்தொகையில் பாதி பேர் வீட்டில் கழிவறையில்லாத நாட்டில் 28 சதவீத ஜி.எஸ்.டி என்றால் தாங்குமா? என்று கொதிப்போடு பேசினார் டி.ராஜேந்தர்.