[X] Close

பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளை எப்படி நடத்தலாம்? இணைய கல்வி நிபுணரின் ஆலோசனைகள்

கல்வி&வேலைவாய்ப்பு,சிறப்புச் செய்திகள்

How-to-conduct-online-classes-to-the-school-students--The-advice-of-an-Online-expert

தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கி தேர்வுகள் நடத்தும் அளவுக்கு நாட்கள் மாதங்களாகிவிட்டன. அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் நடந்துவருகிறது. பள்ளிகள் திறப்பது பற்றி முடிவெடுக்கவில்லை என அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஆன்லைன் வகுப்புகள்தான் நிரந்தரமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், ஆன்லைன் வகுப்புகளை எப்படி நடத்தலாம் என்பது பற்றி புதிய தலைமுறை இணையதளத்துக்காக ஐபிஎம் இந்தியா நிறுவனத்தின் (Learning and Development) இணை மேலாளர் கார்குழலி பகிர்ந்துகொண்டார்.

image

இந்த கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வருவதுபோலத் தெரியவில்லை. உயர்நிலை வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் பள்ளிகள் திறக்கும் என்பது போன்ற செய்திகள் கசிந்தாலும், மற்ற வகுப்புகளுக்கு எப்போது எனப் புரியவில்லை. எதுவும் உறுதியற்ற நிலையில் எந்த வயதில் இருந்து குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்தலாம் என்ற கேள்வி எல்லோரின் மனதிலும் எழுகிறது.


Advertisement

ஸ்மார்ட்போன்கள் இல்லை

சமீபத்திய ஆய்வில் இந்தியாவில் 56 சதவீத குழந்தைகளிடம் ஸ்மார்ட்போன்கள் இல்லை என்று தெரியவந்துள்ளது. இந்திய மக்களின் வருமான நிலவரத்தைப் பார்த்தால், இந்தச் சதவீதம் இதைக் காட்டிலும் அதிகமாகத்தான் இருக்கும். ஸ்மார்ட்போன்களின் தரம் அவற்றின் விலையைப் பொறுத்து மாறுபடுகிறது. ஆறாயிரம் ரூபாயில் இருந்து வாங்கலாம் என்றாலும், குறைந்த விலை ஃபோன் தரம் எல்லோருக்கும் தெரியும்.

image

(கார்குழலி)

என் உறவினர் ஒருவருக்கு அவரிடம் படித்த மாணவர்கள் ரூ. 5000 மதிப்புள்ள ஸ்மார்ட்போன் ஒன்றை வாங்கிக் கொடுத்தனர். என்னிடம் கொண்டுவந்து கொடுத்து அதில் வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் எல்லாம் போட்டுக்கொடு என்றார். அதன் குறைந்த அளவு மெமரியினால் டெலிபோன் எண்களைக்கூட சேமிக்கமுடியவில்லை. ஒரு மெமரி கார்டு வாங்கி போட்டால்தான், அதைப் பயன்படுத்தவே முடியும். அதன் காமிராவின் பிக்ஸல் அளவும், அதன் தொடுதிரையின் ரெசெல்யூசனும் என்ன தரத்தில் இருக்கும் என்பதைச் சொல்லாமலே எளிதில் புரிந்துகொள்ளலாம்.

கூடுதல் டேட்டா தேவை

எப்படியோ பத்தாயிரம் ரூபாய்க்கு நல்ல ஃபோன் ஒன்றை வாங்கிவிட்டோம் என்றே வைத்துக்கொள்ளலாம். அத்தோடு முடிந்ததா? அதற்கு டேட்டா பேக் வேண்டும். குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டா தேவையென்றால், மாதம் ரூ. 250 மதிப்புக்கு ரீசார்ஜ் செய்யவேண்டும். ஆனால் கல்வித்துறையின் பரிந்துரைப்படி, உயர்நிலை வகுப்புகளுக்கு மூன்று மணி நேரம் ஆன்லைன் வகுப்புகள் நடத்தலாம். இதற்கு 1 ஜிபி டேட்டா போதுமா?

image

வகுப்புகள் முடிந்ததும் பாடங்களும் குறிப்புகளும் வாட்ஸ்ஆப் மூலம் பகிரப்படுகின்றன. பிறகு குழந்தைகள் டெஸ்ட் அல்லது அசைன்மெண்டுகளை எழுதி ஆசிரியருக்கு அனுப்பிவைக்க வேண்டும். பிறகு வீட்டுக்குள் அடைந்து கிடக்கும் நேரத்தில் பொழுதைப்போக்க குழந்தைகள் இணையத்தையே நாடுகிறார்கள். நட்புகளுடன் அரட்டை, ஆதர்ச நடிக நடிகையரும் வேறு ஆளுமைகளும் அதிகமாகப் புழங்கும் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், சினிமா தளங்கள் என எல்லாவற்றையும் பார்க்க 1 ஜிபி டேட்டா எப்படி போதும்? பல வீடுகளில் இரண்டு குழந்தைகளும் வகுப்புகளில் கலந்துகொண்டு படிக்கவேண்டியிருக்கிறது.

வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி.. 
என்ன சொன்னாலும் சிறிய திரையைக் கொண்ட ஸ்மார்ட்போனில் தொடர்ச்சியாக ஃபேஸ்புக்கையும் வாட்ஸ்ஆப்பையும் இணையத்தையும் மேய்ந்ததிலும் ஆன்லைன் கேம்ஸ் மற்ற விளையாட்டில் மூழ்கியதிலும் சிலரின் மூக்குக் கண்ணாடியின் பவர் அதிகமானதை மறுக்கவே முடியாது. பெரிய திரை கொண்ட மடிக்கணினியின் ஆரம்ப விலையே ரூ. 20 ஆயிரம். எத்தனை குடும்பங்களில் ஏற்கனவே மடிக்கணினி இருக்கும்? எத்தனைக் குடும்பங்களால் உடனே வாங்கமுடியும்.

image

ஏற்கனவே வாயைக்கட்டி வயிற்றைக் கட்டித்தான் குழந்தைகளைப் பிரபலமான தனியார் பள்ளிகளில் படிக்கவைக்கின்றன நடுத்தரக் குடும்பங்கள். அதில் கூடுதல் செலவாக இதையெல்லாம் செய்ய பணத்துக்கு எங்கே போவது. வீட்டில் வேலை செய்யும் பெண் ஒருவர், இரண்டு குழந்தைகளையும் படிக்கவைக்க வருடத்துக்கு ஒன்றரை லட்ச ரூபாய் செலவு செய்வதாகச் சொன்னார். குடும்ப வருமானம் வருடத்துக்கு 2 லட்ச ரூபாய்க்குள்தான். இந்தக் கொரோனா காலத்தில் கணவன், மனைவி இருவருக்கும் வேலையில்லை. கிடைக்கும் சொற்பக் காசில் அரிசி பருப்பு வாங்குவார்களா? ஸ்மார்ட்போனும் மடிக்கணினியும் வாங்குவார்களா?

உளவியல் சிக்கல்

இன்னொரு உளவியல் சிக்கலும் இருக்கிறது. நாமும் நம் குழந்தைகளும். ஸ்மார்ட்போனை இதுவரை பொழுதுபோக்குக்குப் பயன்படுத்திப் பழகிவிட்டோம். இயற்கையாகவே குழந்தைகள் எளிதில் கவனச்சிதறலுக்கு ஆளாகிறார்கள். சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதைக் கவனிப்பதுதானே மனித இயல்பு. வகுப்பு நேரத்தில் என்னதான் கட்டுப்பாடாக இருந்தாலும், கவனம் சிதறி அந்தப் போனிலோ கணினியிலோ வேறு இணையதளத்துக்குப் போய் நேரத்தைக் கழிக்கலாம்.

image

நாம் குழந்தைகளை குறை சொல்லப்போய்விட்டோமே. கணினியில் வேலை செய்யும்போது எத்தனை கவனச்சிதறலை எல்லாம் தெரிந்த பெரியவர்களான நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. சில மணித்துளிகளுக்கு ஒருமுறை வாட்ஸ்ஆப்பையும் ஃபேஸ்புக்கையும் எட்டிப் பார்க்காமல் கண்ணைக் கட்டிக்கொண்டு வேலை பார்க்கமுடிகிறதா நம்மால்?

ஆன்லைன் வகுப்புக்கான வழிமுறைகள்

தமிழகம் போன்ற மாநிலத்தில் அனைவரது வீடுகளிலும் தொலைக்காட்சி இருக்கிறது. ஏற்கனவே சில வகுப்புகளுக்கு கல்வி தொலைக்காட்சி வழியாகப் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இது மகிழ்ச்சிதான். ஆனால் கவனம் சிதறாமல் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதற்கான உத்திகளை ஆசிரியர்களும் கல்வியாளர்களும் மின்வழிக்கற்றல் நிபுணர்களும் தொழில்நுட்ப வல்லுனர்களும் விவாதித்துப் பலனளிக்கும் வழிமுறைகளைப் பட்டியலிடவேண்டும்.

தொலைக்காட்சிப் பாடங்களைத் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கவனம் சிதறாமல் கேட்பதற்காக, அவற்றில் இசை, நடனம் மற்றும் எளிய உடற்பயிற்சிகளையும் இணைக்கவேண்டும். கூடவே உடலையும் கைகால்களையும் அசைப்பதற்கு 15 அல்லது 20 நிமிடங்களுக்கு ஒருமுறை வகுப்பில் சிறிய இடைவேளை கொடுக்கவேண்டும். ஆசிரியர் வகுப்பில் குழந்தைகளிடம் நேரடியாகப் பேசுவதுபோலவே பேசலாம். பழைய தூர்தர்ஷனில் வயலும் வாழ்வும் நிகழ்ச்சியில் பேராசிரியர் நன்னன் இப்படித்தான் பேசுவார். இது ஆசிரியரோடு குழந்தைகளுக்கு ஒட்டுதலை ஏற்படுத்தும்.

image

அவ்வப்போது குட்டிக்கதை, நகைச்சுவைத் துணுக்குகள் போன்றவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம். வானொலியில் தென்கச்சி சாமிநாதனின் 'இன்று ஒரு தகவலை' தவறாமல் கேட்டது இதற்குத்தானே. கவன ஈர்ப்பு உத்திகள் எல்லோருக்கும் எளிதில் கைவராது. எனவே இவற்றை எங்கே எப்படிச் செய்யலாம் என்று ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்குவது அவசியம். இந்த மின்வழி அல்லது தொலைக்காட்சிவழிக் கற்றல் முறைகளுக்கு ஆசிரியர்களைத் தயார்செய்வது இன்றியமையாதது. இதை அரசும் கல்வித் துறை நிபுணர்களும் கல்வியாளர்களும்தான் முன்னெடுக்கவேண்டும்.

"அன்னயாவினும் புண்ணியங்கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்" என்ற மகாகவி பாரதியின் சொல்லை மனதில் வைக்கவேண்டும். ஐம்பதாண்டு காலமாக தமிழகத் தலைவர்கள் கட்டிவளர்த்த எல்லோருக்கும் கல்வி என்ற சமூக வளர்ச்சிக்கான அடித்தளம் இடிந்துவிடாமல் காப்பாற்றி, அதை நம்முடைய குழந்தைகளின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் படிக்கற்களாக மாற்றவேண்டும். அதற்காக எல்லோரும் ஒன்றாகக் கைகோர்த்து செயல்படவேண்டும். 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close