கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான மே 23 ஆம் தேதி இரவு பலரின் கவனமும் சிதம்பரம் தொகுதியில்தான் இருந்தது. விடிய விடிய முன்னணி, பின்னடைவு என்று தேர்தல் வெற்றியை ஆட்டம் காண வைத்த இரவு அது. தமிழகம் மட்டுமல்லாமல், கட்சி பாகுபாடுகளின்றி இந்திய மக்களில் பலரும், சிதம்பரம் தொகுதியின் முடிவைக் காண பேராவலோடு காத்துக்கொண்டிருந்தார்கள். ஆம். அந்த தொகுதியில் போட்டியிட்டவர் திருமாவளவன்.
அந்தத் தேர்தலில், திருமாவளவனுக்கு கிடைத்த வாக்குகள் நாலரை லட்சத்திற்குமேல். இந்த தேர்தல் மட்டுமல்ல. போட்டியில்; தேர்தல் களத்தில் அவர் நின்றாலே பலரின் கவனமும் தேர்தல் முடிவுகளின்போது, அவரது தொகுதியைத்தான் உற்றுநோக்கியிருக்கும். அப்படிப்பட்ட ’திருமாவளவன்’ 58 வது பிறந்தநாளை முன்னிட்டு சமூக வலைதளப் பக்கங்களில் பலரும் அவருக்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.
1962-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17-ஆம் தேதி பெரம்பலூர் மாவட்டம் அங்கனூரில் பிறந்தார். இவரது தந்தை தொல்காப்பியன். தாயார் பெரியம்மாள். 1982 ஆம் ஆண்டு அண்ணல் அம்பேத்கரின் துணைவியார் சவீதா அம்பேத்கர் ஆரம்பித்த ’தலித் பேந்தர்ஸ்’ இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார் திருமாவளவன். அக்கட்சியின் தமிழகத் தலைவர் மலைச்சாமி மரணமடைந்துவிடவே, அவரது நண்பரும் போராட்டக் களத்தில் இருந்த திருமாவளவன் 1990 ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் நாள், அந்த அமைப்பின் தலைவரானார். தலித் பேந்தர்ஸ் ‘விடுதலை சிறுத்தைகள்’ அமைப்பாய்... கட்சியாய் வளர்ந்தது என்பது வரலாறு.
சாதிக்கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்ளே திருமாவளவனை தமிழக அரசியல் களத்தில் தலைவராக உருவாக்கியதாக கூறப்படுகிறது. கடந்த 1999 ஆம் ஆண்டு முதன்முறையாக மூப்பனாருடன் இணைந்து தேர்தல் களத்தைச் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி, அதன் முதல் தேர்தலிலேயே சிதம்பரம் தொகுதியில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளையும் பெரம்பலூரில் 1 லட்சத்திற்கும் மேலான வாக்குகளையும் பெற்று தமிழக அரசியலில் ஆழப்பதிந்தது. 2001 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் திமுக கூட்டணியில் மங்களூர் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்றத்திற்கு சென்ற திருமாவளவன்தான், இப்போது நாட்டையே ஆளும் நாடாளுமன்றத்தில் எம்.பியாக இருக்கிறார். தமிழகத்தில் தவிர்க்கவே முடியாத முக்கியத் தலைவராகவும் உருவாகியுள்ளார்.
தமிழகத்தில் நடக்கும் சாதிய ஒடுக்குமுறைகள் மட்டுமல்ல. மீனவர் பிரச்சனை, ஈழப்பிரச்சனை, நீட் தேர்வு, எட்டுவழிச்சாலை, ஓ.பி.சி இட ஒதுக்கீடு என பட்டியலின மக்கள் மட்டுமல்லாமல், பொதுசமூகத்தின் அத்தனை பிரச்சனைக்கும் குரல் கொடுப்பதோடு போராட்டக்களங்களில் மக்கள்விரோதத் திட்டங்களை எதிர்த்து அரசை அதிர வைப்பவர். அதனாலேயே, திருமாவளவனை பலதரப்பினரும் கொண்டாடுவதாக சொல்லப்படுகிறது. இவருக்கு எப்போது போன் செய்தாலும் பெரும்பாலும் போராட்டக் களங்களிலோ அல்லது பயணங்களிலோதான் இருப்பார் என்று பத்திரிகையாளர்கள் கூறுவதுண்டு. காரணம், மக்கள் நலப் பிரச்னைகளுக்காக மாவட்டம் மாவட்டமாக பயணிக்கும் மக்கள் தலைவர் இவர், என்கிறார்கள்.
அரசியல் தலைவர் மட்டுமல்லாமல் படிப்பதிலும் ஆர்வம் கொண்டிருப்பவர். இந்த வயதிலும் முனைவர் பட்டம் முடித்திருக்கிறார். ஒவ்வொரு பிறந்தநாளையும் உற்சாகமாகக் கொண்டாடுபவருக்கு இந்த பிறந்தநாள் என்பது மறக்க முடியாததாய் மீளாத் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அக்காவாய்.. அன்னையாய் இருந்த அவரின், ஒரே அக்கா பானுமதி இரு வாரங்களுக்கு முன்புதான் கொரோனாவால் உயிரிழந்தார். ஆனாலும், தொண்டர்களும் பொதுச்சமூகத்தினரும் திருமாவளவனின் பிறந்தநாளை நேசிப்போடு உற்சாகமுடன்தான் கொண்டாடி வருகிறார்கள்.
-வினி சர்பனா
Loading More post
அமலாக்கத்துறை விசாரணை முடித்து பின்வழியாக வாடகை காரில் சென்ற இயக்குநர் சங்கர் - ஏன்?
ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்ந்தது சிலிண்டர் விலை... இம்முறை எவ்வளவு?
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்