[X] Close

ஐபிஎல் 2020: கோப்பையா? அல்லது இதயமா ? காத்திருக்கும் ஆர்சிபி ரசிகர்கள் !

விளையாட்டு,சிறப்புச் செய்திகள்

RCB-fans-are-waiting-to-win-teams-first-IPL-Trophy-this-year-in-UAE

13 ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி ஒருவழியாக இந்தாண்டு செப்டம்பர் 19 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க இருக்கிறது. இந்தாண்டு தொடங்கவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை கூட இன்னும் வெளியாகவில்லை. ஆனால் ரசிகர்கள் மத்தியில் இப்போதே ஐபிஎல் ஜுரம் தொற்றிக்கொண்டது. ஏற்கெனவே மார்ச் மாதம் தொடங்கவிருந்த ஐபிஎல் போட்டிக்கு முன்பு அணியின் புதிய லோகோவை வெளியிட்டது ஆர்சிபி நிர்வாகம். அப்போதே ரசிகர்கள் பலர் "கண்ணாடிய திருப்பினா ஆட்டோ எப்படி ஓடும் ஜீவா" என கலாய்த்தனர்.


Advertisement

image

எவ்வளவு கிண்டல் செய்தாலும் ஆர்சிபி இப்போது மட்டுமல்ல; எப்போதும் கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்களை வென்ற அணி. ஆனால் துரதிருஷ்டவசமாக இதுவரை கோப்பையை வெல்லவில்லை. 12 ஆண்டுகள் ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி அணி மூன்று முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியும் ஒரு முறை கூட கோப்பையைக் கைப்பற்றவில்லை. உலகின் தலைச்சிறந்த கிரிக்கெட் வீரர்கள் ஆர்சிபியில் இருக்கிறார்கள், இருந்தார்கள். ஆனால் ஏனோ கோப்பை அவர்களுக்கு கானல் நீராகவே இருக்கிறது.


Advertisement

ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி. அணியை சற்றே பின்னோக்கி பார்ப்போம் !

2008 முதல் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு இந்திய பெருஞ்சுவர் ராகுல் டிராவிட் கேப்டனாக இருந்தார். அந்தத் தொடரின் இறுதியில் புள்ளிகள் பட்டியலில் 7 ஆம் இடத்தை பிடித்தது. 2009 இல் ஆர்சிபியின் கேப்டன் பொறுப்பு இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சனுக்கு கொடுக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற அந்த ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டி வரை முன்னேறியது ஆர்சிபி.

image


Advertisement

2010 இல் ஆர்சிபி அணிக்கு கேப்டனாக இந்திய சுழற்பந்து மன்னன் அனில் கும்ப்ளேவுக்கு கொடுக்கப்பட்டது. இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடினாலும் கோப்பையை வெல்ல முடியவில்லை. இத்தொடரில் புள்ளிகள் பட்டியலில் 3ஆம் இடத்தை பிடித்தது. 2011 ஆம் ஆண்டு பல முக்கிய மாற்றங்கள் செய்தது ஆர்சிபி நிர்வாகம். இந்தாண்டு வீரர்களின் ஏலம் நடைபெற்றது. அப்போது தங்கள் அணியில் விராட் கோலியை மட்டுமே வைத்தொண்டு, மற்ற வீரர்கள் அனைவரையும் விடுவித்தது. அந்தாண்டுதான் ஏபி டி வில்லியர்ஸ், திலக்ரத்னே தில்ஷன், ஜாகீர் கான், கிறிஸ் கெயில் ஆகியோரை ஆர்சிபி அணி ஏலத்தில் எடுத்தது. நியூசிலாந்து வீரர் டேனியல் வெட்டோரி கேப்டனாக நியமிக்கப்பட்டார். இத்தொடரில் நூலிழையில் கோப்பையை தவறவிட்ட ஆர்சிபி, இறுதிப் போட்டி வரை சென்றது.

image

2012 இல் கேப்டன் பதிவியிலிருந்து பாதியிலேயே விலகினார் டேனியல் வெட்டோரி. இதனையடுத்து முதன்முறையாக ஆர்சிபி அணிக்கு கேப்டனானார் விராட் கோலி. இதனையடுத்து அத்தொடரில் சுமாராக விளையாடிய ஆர்சிபி புள்ளிகள் பட்டியலில் 5 ஆம் இடத்தை பிடித்தது. 2013 இல் மிகப் பெரிய சாதனையை செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட அந்த அணி மீண்டும் 5 ஆம் இடத்தையே பிடித்தது. 2014 இல் ஐபிஎல் ஏலத்தில் ஆல்பி மார்கல், மிட்சல் ஸ்டார்க், ரவி ராம்பவுல், பார்த்திவ் படேல், அசோக் டிண்டா, முத்தையா முரளிதரன், வரூண் ஆரோன், யுவராஜ் சிங் ஆகியோரை வாங்கியது. ஆனால் மிக மோசமான ஆட்டத்தால் அந்தாண்டு ஐபிஎல் தொடரில் 7ஆம் இடத்தை பிடித்தது.

image

2015 இல் சிறப்பாக விளையாடியும் இந்த அணிக்கு 3ஆம் இடம்தான் கிடைத்தது. 2016 ஆம் ஆண்டும் இந்த அணி மிகப் பிரமாதமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. அத்தொடரில் மட்டும் அணியின் கேப்டன் விராட் கோலி 4 சதங்களை விளாசினார். இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் அணியுடன் மோதி 7 ரன்கள் வித்தியாசத்தில் கோப்பையைக் கைப்பற்றத் தவறி, ரசிகர்களை ஏமாற்றியது ஆர்சிபி. 2017 மிக மோசமான ஆண்டாக அமைந்தது. அத்தொடரில் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தை பெற்றது. 2018 இல் 6ஆம் இடம், 2019 இல் கடைசி இடம். எனவே 2020 இல் அணியை பலப்படுத்தியுள்ளது ஆர்சிபி என அணி நிர்வாகம் கூறுகிறது. உலகின் மிகச் சிறந்த கிரிக்கெட் அணியான இந்தியாவின் கேப்டன் விராட் கோலி அணிக்கு தலைமை ஏற்றும் தோல்விகள் தொடர்ந்துக்கொண்டு இருப்பதால் இந்தாண்டு ஐபிஎல் கோப்பையை வெல்லும் முயற்சியில் ஆர்சிபி இறங்கியிருக்கிறது.

image

இந்தாண்டு ஐபிஎல் தொடரில் பட்டையைக் கிளப்ப ஆர்சிபி அணி மிகவும் நம்பியிருக்கும் வீரர்கள் மொத்தம் 5 பேர். அது கேப்டன் விராட் கோலி, தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏபி டி வில்லியர்ஸ், இங்கிலாந்தின் முக்கிய ஆல் ரவுண்டர் மொயின் அலி, இந்திய சுழற் பந்துவீச்சாளர் சாஹல் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் அரக்கன் மற்றும் கேப்டனுமான ஆரோன் பின்ச். இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த வீரர்களை வைத்துக்கொண்டுள்ள ஆர்சிபி, இந்தாண்டு மீண்டும் இதயங்களை மட்டுமே வெல்லப்போகிறதா? இல்லை கோப்பையை வெல்லப்போகிறதா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Advertisement

Advertisement
[X] Close