[X] Close

”காவி என்பது தீவிரவாதத்தின் அடையாளம் கிடையாது" – ராஜேந்திர பாலாஜி ’எக்ஸ்குளுசிவ்’ பேட்டி

சிறப்புச் செய்திகள்

All-religions-my-brothers-minister-rajendra-balaji-exclusive-interview

மீண்டும் பழைய ராஜேந்திர பாலாஜியாக வந்திருக்கிறார், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. கடந்த மார்ச் மாதம் விருதுநகர் மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவருக்கு மீண்டும் ’மாவட்ட பொறுப்பாளர்’ பதவியை கொடுத்திருக்கிறது அ.தி.மு.க தலைமை. எப்போதும் அதிரடியாக பேசக்கூடியவர் நான்கு மாதங்களாக அமைதிகாத்து வந்தார். புதிய பொறுப்பு கொடுத்தவுடன் புதுத்தெம்புடன் வலம் வந்துகொண்டிருப்பவர், கடந்த நான்கு மாதங்களாக எந்த ஊடகத்திற்கும் பேசவில்லை. புதிய தலைமுறை இணையதளத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அவரிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். உற்சாகத்துடன் பேசினார்.


Advertisement

image

 மீண்டும் மாவட்டச் செயலாளர் பதவி கொடுக்கவில்லை என்கின்ற வருத்தம் இருக்கிறதா?


Advertisement

என் உழைப்பின் மீது நம்பிக்கை வைத்து மதிப்பிற்குரிய முதல்வரும் துணை முதல்வரும் இப்பொறுப்பைக் கொடுத்துள்ளார்கள். அவர்களின் நம்பிக்கைக்குரியபடி கட்சி செயல்பாடுகளை வேகமாக முன்னெடுத்து, வரும் சட்டமன்றத் தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தின் வெற்றிக்காக முழுமையாக பாடுபடுவேன். மாவட்டச் செயலாளர் பதவி கொடுக்கவில்லை என்று சிறு வருத்தமும் கிடையாது. இப்போது, கொடுத்துள்ள மாவட்ட பொறுப்பாளர் என்பதே மாவட்டச் செயலாளர் செய்யும் பணிகள் போன்றதுதான்.

எப்போதும் அதிரடியாக கருத்து சொல்லும் உங்களால், இத்தனைநாள் எப்படி பேசாமல் இருக்க முடிந்தது?

இத்தனைநாள் கோயில் கோயிலாக சென்றுகொண்டிருந்தேன். பெரிய கோயில்களின் நடைகள் சாத்தப்பட்டிருந்தாலும்கூட, கிராமங்களில் இருக்கும் சிறிய கோயில்களுக்கு சென்றுவிடுவேன். சாமி கும்பிடுவது, புத்தகம் படிப்பது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தேவையான உதவிகளையும், அரசு நலத்திட்டங்களையும் மக்களிடம் கொண்டுசேர்ப்பது போன்ற பணிகளை செய்துவந்தேன். கொரோனாவால் கட்சி நிகழ்ச்சிகள் எதுவும் இல்லை. கிடைக்கின்ற வாய்ப்பை பயன்படுத்தி மாவட்ட மக்களின் நன்மைக்காக் பாடுபட்டேன். கடந்த மார்ச் 22 ஆம் தேதி மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டேன். அன்றைக்கே கொரோனாவால் ஊரடங்கு அறிவித்தபோது, தமிழக மக்கள் மட்டுமல்ல, உலக மக்களே அச்சத்தில் இருந்தார்கள். எதுவுமே இயங்கவில்லை. மக்கள் நடமாட்டமும் இல்லை. அமெரிக்க அதிபரிலிருந்து வல்லரசு நாடுகளே மீடியாக்களை சந்திக்காமல் ஓடிக்கொண்டிருந்த காலத்தில், இந்திய பிரதமரும் அண்ணன் எடப்பாடியாரும் மக்கள் துயர்தீர்க்க ஓடிக்கொண்டிருந்த காலத்தில், நமக்கு ஏற்படுகிற சின்ன சின்ன பிரச்சனைகளைப் பெரிதாக நினைத்துக்கொண்டு பேசினால் மக்களும் கட்சியும் விரும்ப மாட்டார்கள். அந்தச் சூழலில் மெளனமாக இருந்ததுதான் எனது பலம். நான் கொடுத்த விளக்கங்களை ஏற்றுக்கொண்டு மீண்டும் வாய்ப்பு வழங்கினார்கள். இது அண்ணன், தம்பி பிரச்சனை. பேசாமல் இருந்ததற்கும் இதற்கும் சம்மந்தம் கிடையாது.


Advertisement

image

 

இஸ்லாமியர்கள் மீது சொன்ன கருத்து சர்ச்சையானதே? இப்போதாவது மனம் மாறினீர்களா?

தி.மு.கவின் அங்கமாகத்தான் கறுப்பர் கூட்டம் உள்ளது. இந்து மதத்தை கொச்சைப்படுத்துபவர்களாக தி.மு.க இருந்து வருகிறது. தங்களிடம் வேலைப்பார்த்த தகவல் தொழில்நுட்பப் பிரிவை மறைமுகமாக கறுப்பர் கூட்டமாக ஆரம்பித்து இந்து மதத்தை மட்டுமே இழிவுப்படுத்தும் விதமாக தி.மு.க செயல்படுகிறது. இதனை இந்து மக்கள் மட்டுமல்ல. இஸ்லாமியர்களும் கிறிஸ்துவர்களும் கண்டித்துள்ளார்கள். இஸ்லாமியர்களைப் பற்றி நான் எப்போதும் தவறாக பேசமாட்டேன். ஏழு ஜமாத் தலைவர்கள் என் நண்பர்கள். ஜமாத் கூட்டத்திலேயே எனக்கு நல்ல மரியாதை கொடுப்பார்கள். நான் ஐ.எஸ் தீவிரவாதிகளைத்தான் குறிப்பிட்டுச் சொன்னேன். இலங்கையில் சமீபத்தில் வழிபாடு செய்துகொண்டிருந்த மக்களை கொன்றவர்கள் குறித்துதான் பேசினேன். இந்தக் கொடூரச் செயலை செய்தவர்களைத்தான் கண்டித்தேன். எந்த இறைவனும் மக்களை கொல்லச் சொல்லவில்லை. இல்லாதவர்களுக்கு உதவு என்றுதான் எல்லா மதங்களின் கடவுள்களும் சொல்கிறார்கள். நான் தாலீபான்களைத்தான் கண்டிக்கிறேன். ஆனால், அவர்களுக்குத்தான் தி.மு.க, தி.க போன்றவை ஆதரவாக உள்ளன. எல்லா மதத்தினரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும். கேரளாவில் வெள்ளம் வந்தபோது, அதில் மாட்டிக்கொண்ட எங்கள் மாவட்ட மக்களை மீட்க அதிகாரிகள் உதவி புரிந்தாலும், அந்தச் சூழலில் யாரிடமும் படகு இல்லை. அப்போது ஒரு இஸ்லாமியர்தான், தன் படகில் பள்ளிக்கு கொண்டுவந்து ஒருவாரம் சாப்பாடு போட்டு ஊருக்கு அனுப்பி வைத்தார். மதங்களைக் கடந்து மனிதநேயத்தோடு உதவக்கூடியவர்கள் எல்லா மதத்திலும் இருக்கிறார்கள். நல்ல மனதோடு இந்துக்களோடு ஒற்றுமையாக வாழும் எல்லா மதத்தினரும் எனது சகோதரர்கள்தான். நான் எத்தனையோ சர்ச்களுக்குச் என்றுள்ளேன். பாட்டுப் பாடியுள்ளேன். நான் தேசத்தால் இந்தியன். மதத்தால் இந்து. இதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. நான் எல்லா சாதிகளையும் மதங்களையும் மதிக்கத் தெரிந்த மனிதநேயமிக்க மனிதன்.

எல்லா மதங்கள் மீதும் ரொம்ப அன்பாக இருக்கிறீர்களே? எப்படி வந்தது இந்த மாற்றங்கள் எல்லாம்?

என்னுடைய நிறமே இதுதான். சிலப்பேர் என்னை மதத்துவேஷம் செய்யும் ஆளாக நினைக்கிறார்கள். நான் அப்படிப்பட்ட ஆள் கிடையாது. எங்கள் மாவட்ட இஸ்லாமியர்களையும் கிறிஸ்துவர்களையும் கேளுங்கள். நானே இந்த மாவட்டத்தில் விஸ்வகர்மா என்னும் சிறுபான்மையான சமூகத்தைச் சேர்ந்தவன். 38 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்தேன். சிறுபான்மை பெரும்பான்மை பார்க்கவில்லை. நல்லவரா? கெட்டவாரா என்று பார்த்துதான் வாக்களித்தார்கள். எல்லா மதங்களையும் சேர்த்துதான் புரட்சித் தலைவர் இக்கட்சியை ஆரம்பித்தார். அவரின் கொள்கைகளைத்தான் அண்ணன் எடப்பாடியாரும் நாங்களும் பின்பற்றுகிறோம்.

 image

 கந்தசஷ்டி கவசம் பிரச்சனையில் தி.மு.கவுக்கு தொடர்பு இல்லை என்று சொல்லிவிட்டதே?  

கறுப்பர் கூட்ட வீடியோவில் இருப்பவர்கள் தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலினுடன் போட்டோ எடுத்திருக்கிறார்கள். தி.மு.கவின் தகவல் தொழில்நுட்பத் தலைவருடன் போட்டோ எடுத்துள்ளார்கள். அந்த போட்டோக்கள் எல்லாம் வருகின்றதே? இதைவிட என்ன ஆதாரம் வேண்டும்? தி.மு.கவால்தான் மதப்பிரச்சனை வருகிறது. அக்கட்சி ஒழிக்கப்பட்டால் மதப்பிரச்சனையே வராது. மனங்களை இணைக்கும் இயக்கம் அ.தி.மு.க.

கோரோனா பாதித்த குடும்பத்திற்கு தலா 3 லட்சம் கொடுத்து உதவியிருக்கிறீர்கள். அதேபோல வேறு யாருக்கேல்லாம் உதவி இருக்கீங்க?

இந்தப் பேரிடர் காலத்தில் நான் செய்த உதவியை சொல்லக்கூடாது. இருந்தாலும் நீங்கள் கேட்பதற்காகச் சொல்கிறேன். ஏழை எளியவர்கள் மட்டுமல்ல மாற்றுக் கட்சியினருக்குகூட நிறைய செய்தேன். சிவகாசியில் ’இதயம் காப்போம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி இதயப் பிரச்சனைகள் உள்ள ஏழை மக்களுக்கு ஒரு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைகளை இலவசமாக செய்ய வைக்கிறேன். அதற்கான செலவுகளை மொத்தமுமாக நானே செய்து வருகிறேன். இதெல்லாம்  அமைச்சராவதற்கு முன்பிருந்தே எந்த சுயநலமும் இல்லாமல் பொதுநலத்தோடு செய்ய ஆரம்பித்தது. இதய அறுவை சிகிசைக்கு  எத்தனையோ தி.மு.ககாரர்களுக்கு உதவியுள்ளேன்.  ஏழை,எளிய மக்களுக்கு இலவசமாக செய்து வருவதால் மருத்துவமனையும் நியாயமான பீஸை வாங்குகிறது. நான் ஒரு ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன். ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட குடும்பத்திலிருந்து வளர்ந்து உழைப்பால் உயர்ந்தவன். என்னால் ஆன உதவியை செய்துகொண்டு வந்தாலும் என்னைவிட அண்ணன் எடப்பாடியார் மிகச்சிறப்பக தமிழகத்திற்கே சேவை செய்து வருகிறார்.  

image

எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு போடப்பட்டதில் உங்கள் கருத்து என்ன?

காவி என்பது தீவிரவாதத்தின் அடையாளம் கிடையாது. அது இறைவனின் அடையாளம். கோயிலுக்கு விரதம் இருந்தால் காவி வேட்டித்தான் கட்டுவோம். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை  இறைவனாக நினைத்துப் காவித்  துண்டைப் போட்டிருப்பார். ஆனால், இந்த வேலையை செய்யாமல் இருந்திருக்கலாம். அதுதான் நல்லது.  அவர், எந்த நோக்கத்தில் போட்டார் என்பது தெரியாது. எம்.ஜி.ஆர் ஆயிரக்கணக்கான கோயில்களுக்கு கும்பாபிஷேகம் செய்தவர்.  அண்ணன் எடப்பாடியாரும் தன் சொந்த செலவில் பல்வேறு கோயில்களைக் கட்டியுள்ளார். நான் எங்கள் குலதெய்வம் கோயிலைக் கட்டிக்கொண்டிருக்கிறேன். காவித்துண்டைப் போட்டவர் நாத்திகராக நிச்சயம் இருந்திருக்கமாட்டார். கடவுள் நம்பிக்கை கொண்டவராகத்தான் இருப்பார். கோடிக்கணக்கான மக்கள் வணங்கக்கூடிய தலைவர் எம்.ஜி.ஆர். அதனால், போட்டிருப்பார்

ஆவின் பால் நிறுவனத்தில் அதிகம் பேருக்கு  கொரோனா பாதிப்பு வந்திருக்கிறதே? அந்தளவுக்கு பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதா?

இப்படி குற்றம் சாட்டுவது எளிது. கடமையைச் செய்வது கடினம். அடித்தட்டு மக்களில் இருந்து அனைவரும் பயன்படுத்தக்கூடியப் பொருள் பால்தான். அதில், மிக கவனமாக இருக்கிறோம். மிகுந்த பாதுகாப்போடுதான் பால் பாக்கெட்டுகளை கையாள்கிறார்கள். கொரோனா வந்திருக்கிறது என்று தெரிந்தவுடனேயே பணியாளர்கள் தனிமைப்படுத்தப் பட்டார்கள். வெளிநாட்டு அதிபர்களுக்கே கொரோனா வருகிறது. மத்திய பிரதேச மாநில முதல்வருக்கே கொரோனா வந்துள்ளது. ஏன் ஆவின் ஊழியர்களுக்கு மட்டும் கொரோனா வராதா? கொரோனா சூழலிலும் சிரமமில்லாமல் பால் தரமாகக் கொடுக்கிறோமா? மக்கள் கைகளில் சேர்க்கிறோமா? என்பதைத்தான் பார்க்கவேண்டும்.

image

இன்னமும் வைத்தியநாதன் கையில்தான் ஆவின் நிர்வாகம் உள்ளது என்று குற்றம் சாட்டப்படுகிறதே?

அனைத்தும் பொய். வைத்தியநாதன் இப்போது கர்நாடகாவின் நந்தினி பாலை விநியோகம் செய்துகொண்டிருக்கிறார். ஒருவருக்கு ஒருவர் பிடிக்காமல் பகையை வைத்துக்கொண்டு, அவரை  தேவையில்லாமல் வம்புக்கு ஏன் இழுக்கவேண்டும்?

நீங்கள் அமைச்சரானப் பிறகு, ஆவினில் தொடர்ச்சியாக நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டுகிறார்களே?

இதுதான் எனக்கு கஷ்டமாக உள்ளது. ஒரு மாதம் நஷ்டம் வந்தால், ஒரு மாதம் லாபம் வரும். கொள்முதலின் ஏற்றம்:இறக்கம், விற்பனையின் ஏற்றம்: இறக்கம் மாறி மாறி வரக்கூடிய இயல்புக் கொண்டது. ஆவின் அரசின் சேவைத்துறை. ஆனாலும், லாபத்தில்தான் இருக்கிறது. அண்ணன் எடப்பாடியாரின் வழிகாட்டுதலில் ஆவினை சிறப்பாக கொண்டு செல்கிறோம்.  அவரின், வழிகாட்டுதலின்படியே ஆவின் மோரில் இஞ்சி, சுக்கு, மிளகு கலந்த அற்புதமான மோரை 15 ரூபாயில் கொடுக்கிறோம். எல்லோரும் பாராட்டினார்கள். இத்தனை பொருட்களைப் போட்டு யாரும் தயாரிக்கமாட்டார்கள்.

- வினி சர்பனா


Advertisement

Advertisement
[X] Close