Published : 13,Jun 2020 03:43 PM
2 வாரங்களுக்கு முன்பு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் தகவல்கள்: இன்று வெளியிட்ட தமிழக அரசு

மே மாதம் மற்றும் ஜூன் 10ம் தேதிக்கு முன்பு கொரோனாவால் உயிரிழந்த பலரது தகவல்களை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுவரை 42,687 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக இதுவரை 397 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று ஒரே நாளில் 30 பேர் உயிரிழந்தனர்.
இதனிடையே, கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பாக எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மாநகராட்சி சொல்லும் இறப்பு கணக்கிற்கும், சுகாதாரத்துறை சொல்லும் இறப்பு கணக்கிற்கும் வேறுபாடு இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் பெயர்கள் அரசின் பட்டியலில் இடம்பெறுவதில்லை என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், மே மாதத்தில் கொரோனா காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் இன்றைய அரசின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. அதேபோல், ஜூன் 10ம் தேதிக்கு முன்பு உயிரிழந்த சிலரது தகவல்களும் அதில் இடம்பெற்றுள்ளன.
காலதாமதமாக இடம்பெற்றுள்ள சில உயிரிழப்புகளின் விவரம்:
1. திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 76 வயதுடைய முதியவர் காய்ச்சல், இருமல் காரணமாக கடந்த மாதம் 23ம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் Lower Respiratory Tract Infection / Viral Pneumonia காரணமாக அடுத்த நாளே மே 24ம் தேதியே உயிரிழந்தார்.
2. சென்னையைச் சேர்ந்த உயர் இரத்த அழுத்தம் உடைய 73 வயதுடைய முதியவர் ஒருவர் இருமல் மற்றும் மூச்சு திணறல் காரணமாக மே 20ம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மே 28ம் தேதி Pneumonia / Multi Organ Dysfunction / Septic Shock காரணமாக உயிரிழந்தார்.
3. சென்னையைச் சேர்ந்த 69 வயதுடைய நபர் இருமல் காரணமாக மே மாதம் 22 ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மே 31ம் தேதி அவர் உயிரிழந்தார்.
4. சென்னையைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் கடந்த ஜூன் 7ம் தேதி அடிபட்ட காயங்களுடன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஜூன் 8ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் ஜூன் 11ம் தேதி உயிரிழந்தார்.
5. சென்னையைச் சேர்ந்த 56 வயதுடைய நபர் கடந்த ஜூன் 7ம் தேதி ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஜூன் 8ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் ஜூன் 10ம் தேதி உயிரிழந்தார். Bronchopneumonia /Respiratory Failure / COVID Positive காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஜூன் 11ம் தேதி உயிரிழந்தவர்கள் குறித்த தகவல்கள் இன்றைய அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. தனியார் மருத்துவமனைகள் சிலவற்றில் இருந்து இறந்தவர்களின் தகவல்கள் தாமதமாக வருவதாகவும், தகவல் என்றைக்கு வருகிறதோ அன்றைய கொரோனா குறித்த அறிக்கையில் அவை இடம்பெற்று வருவதாகவும் தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.