[X] Close

சமூக சிந்தனைகளை விதைத்த சீர்திருத்தவாதி ம.சிங்காரவேலரின் பிறந்த தினம் இன்று..!

சிறப்புச் செய்திகள்

M--Singaravelar----a-pioneer-in-more-than-one-field-in-India-

தென் இந்தியாவின் முதல் பொதுவுடைமைவாதியாக அறியப்படுகிறவர் ம.சிங்காரவேலர். இந்தியாவில் முதன் முதலில் மே தினம் கொண்டாடியவர் இவர் என்றும் சொல்லப்படுகிறது. சிந்தனையில் மட்டுமல்ல தன் வாழ்நாளில் ஒரு சிறந்த பொதுவுடைமைவாதியாக வாழ்ந்தவர் ம.சிங்காரவேலர்.


Advertisement

மார்க்சிய சிந்தனைகளை இந்திய சூழலுக்கு ஏற்ப மாற்றி அதற்கு செயல்வடிவம் கொடுத்தவர் ம.சிங்காரவேலர். 1860’ஆம் ஆண்டு சென்னையில் ஒரு மீனவ குடும்பத்தில் இதேநாளில் பிறந்த அவர், தன் இன மக்கள் ஒடுக்கப்படுவதைக் கண்டு சிறுவயது முதலே வருந்தினார்.

image


Advertisement

சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் படித்த அவர் 1907’ஆம் ஆண்டு வழக்கறிஞராக தன் பணியைத் துவங்கினார். ஒரு முறை நீதிமன்றத்தில் எதிராளிகளால் மீனவ குடும்பத்தைச் சேந்தவர் எனக்கூறி சிங்காரவேலர் அவமானப்படுத்தப்படுகிறார். அந்த வழக்கை வெற்றிகரமாக முடித்துவிட்டு வெளியே வந்த அவர், கறுப்பு அங்கியை கழற்றிவிட்டு இனி நீதிமன்றத்தில் வாதாடப்போவதில்லை; என் மக்களுக்காகவே பாடுபடப் போகிறேன் என்றார்.

1918-ல் சென்னை தொழிலாளர் சங்கத்தை துவங்கியவர் ம.சிங்காரவேலர். இதுவே இந்தியாவின் முதல் தொழிற்சங்கம். காந்திய சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட சிங்காரவேலர், ஊர் ஊராகச் சென்று ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வியறிவு பெற உழைத்தார்.

வேல்ஸ் இளவரசர் இந்தியா வந்தபோது அதனை எதிர்த்து சென்னையில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது. அதற்கு தலைமை தாங்கியவர் ம.சிங்காரவேலர். 1923-ஆம் ஆண்டு லேபர் கிசான் பார்ட்டி ஆஃப் இந்தியா என்ற கட்சியை துவங்கினார் அவர். அதோடு நில்லாமல் லேபர் கிசான் கெஜட் என்ற ஆங்கில வார இதழையும், தொழிலாளர் என்ற தமிழ்வார இதழையும் நடத்தினார் ம.சிங்காரவேலர்.


Advertisement

image

சுயமரியாதை இயக்கமும், பொதுவுடைமை இயக்கமும் ஒன்றாக செயல்படவேண்டும் என விரும்பினார் ம.சிங்காரவேலர். அதனால் தான் பெரியாரின் சிந்தனைகளுக்கு தன் ஆதரவை கொடுத்தார். பிரபஞ்ச பிரச்னைகள், பகுத்தறிவு என்றால் என்ன.?, விஞ்ஞானத்தின் அவசியம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியிருக்கிறார் அவர்.

கான்பூரில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மாநாட்டிற்கு தலைமை தாங்கியவர் அவர். சென்னை மாநகராட்சி உறுப்பினராக இருந்தபோது பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை வெற்றிக்கரமாக நடத்திக் காட்டினார். தென்னிந்திய ரயில்வே வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டபோது ம.சிங்காரவேலருக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு அந்த தண்டனைக் காலம் குறைக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட இரண்டே ஆண்டுகளில் விடுதலையானார் அவர்.

image

மீனவ குடும்பத்தில் பிறந்து தன் இனமக்களுக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்காகவும் பாடுபட்டவர் ம.சிங்காரவேலர். எனவேதான் தமிழக அரசு மீனவர் வீட்டுவசதி திட்டத்திற்கு அவரது பெயரை சூட்டி இருக்கிறது. மேலும் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ‘சிங்காரவேலர் மாளிகை’ என்றே அழைக்கப்படுகிறது.

தேசபக்தி, பொதுவுடைமை, மனிதாபிமானம், வியத்தகு சிந்தனைகள் என வாழ்ந்த ம.சிங்காரவேலர் சிறந்த விடுதலை போராட்ட வீரரும் கூட. ஆனால் இந்தியா விடுதலை பெறுவதைப் பார்க்கும் அதிர்ஷ்டத்தை காலம் சிங்காரவேலருக்கு வழங்கவில்லை.

1860-ஆம் ஆண்டு இதே நாளில் பிறந்த சிங்காரவேலர், இந்தியா விடுதலை பெறுவதற்கு ஒரு வருடம் முன்பாக அதாவது 1946’ஆம் ஆண்டு இதே பிப்ரவரி மாதம் இறந்தார். என்றாலும் என்றைக்கும் மனித குல வளர்ச்சிக்கு தேவையான சிந்தனைகளை விதைத்துவிட்டுப் போனவர் ம.சிங்காரவேலர்.


Advertisement

Advertisement
[X] Close