[X] Close

‘பயோபிக்’ படங்களை எடுப்பதில்  என்னதான் பிரச்னை? : திரைத்துறையினர் கருத்து

சிறப்புச் செய்திகள்

Are-there-difficulties-in-directing-the-biography-of-leaders

‘இந்திய சினிமாவில் இது பயோபிக்’ காலம். ஆகவேதான் அதிகமான ‘பயோபிக்’ திரைப்படங்கள் வெளியாகின்றன. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் அரசியல் வாழ்க்கையை மையமாக வைத்து, ‘The Accidental Prime Minister’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. ஏறக்குறைய 18 கோடி ரூபாய் செலவில் உருவான இந்தத் திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் 98 கோடி ரூபாய் வரை வசூல் செய்ததாக கூறப்பட்டது. இதில் மன்மோகன்சிங் வேடத்தில் அனுபம் கேர் நடித்திருந்தார். சரியான தேர்வாக படம் பார்த்த பலரும் இதை விமர்சித்திருந்தனர்.

image

அதேபோல, ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஒய்எஸ்ஆர் ரெட்டியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘யாத்ரா’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. இதனை அவரது மகள் ஷாஷி தேவி ரெட்டி தயாரித்திருந்தார். இதில் மலையாள நடிகர் மம்முட்டி நடித்திருந்தார். இந்தப் படமும் பாக்ஸ் ஆபீஸ் நிலவரப்படி 28 கோடி வரை வசூல் செய்ததாக தெரிகிறது. நடிகை சாவித்திரியின் கதையை மையமாகக் கொண்டு, இதே ஆண்டு ‘மகாநடி’ வெளியானது. இதே படம் தமிழில் ‘நடிகையர் திலகம்’ என வெளியானது.


Advertisement

தெலுங்கில் 25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம் 97 கோடி ரூபாயை வசூலித்ததாக பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் மூலம் தெரியவந்தது. இந்தப் படத்தில் அபரிமிதமான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகை கீர்த்தி சுரேஷூக்கு தேசிய விருதே கிடைத்தது. பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை ஆதாரமாகக் கொண்டு ‘பிஎம் நரேந்திர மோடி’ திரைப்படம் உருவானது. இது கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலையொட்டி வெளியாக இருந்தபோது, அதை வெளியிடக்கூடாது என சிலர் சர்ச்சையைக் கிளப்பினர். எதிர்க்கட்சிகளின் சர்ச்சையை கடந்து படம் திரைக்கு வந்தது.

image

இந்தப் படத்தில் மோடியின் தோற்றத்தில் விவேக் ஓபராய் நடித்திருந்தார். இந்தியில் வெளியான இந்தத் திரைப்படம் இந்திய சினிமா வரலாற்றில் ஒரு பிரதமர் ஆட்சியில் இருக்கும் காலத்திலேயே வெளியான வாழ்க்கை வரலாற்று திரைப்படமாக அமைந்தது. ஏறக்குறைய இதன் பட்ஜெட் 30 கோடியாக இருந்தது. இந்த வரிசையில் பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத், ‘மனித கணினி’ சகுந்தலா தேவி, அப்துல் கலாம், ஜெயலலிதா, எம்ஜிஆர் எனப் பல பயோபிக் படங்கள் வெளியாக உள்ளன.

இதில், ஏற்கெனவே ஜெயலலிதாவின் வாழ்வை சித்தரிக்கும் ‘குயின்’ வெப் சீரியஸின் முதல் பகுதி வெளியாகி பலத்த வரவேற்பை பெற்றது. மேற்கொண்டு ஜெயலலிதா வாழ்வையே மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் ‘தி அயர்ன் லேடி’ வெளியாக உள்ளது. ஆனால் இந்தப் படத்தை திரைக்கு கொண்டு வருவதில் சில சட்டச்சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. ஜெயலலிதாவின் ரத்த உறவுகள் அதற்குத் தடை கேட்டு நீதிமன்றம் வரை சென்றுள்ளனர். ஏற்கெனவே மகாகவி சுப்பிரமணிய பாரதியார் குறித்து எடுக்கப்பட்ட படத்திற்குகூட மறைமுகமாக சில எதிர்ப்புகள் ஏற்பட்டதை பலர் இன்னும் மறந்திருக்க வாய்ப்பில்லை.

image

தமிழில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒரு தலைவரின் வாழ்க்கையை திரைப்படமாக எடுப்பதில் பல நெருக்கடிகள் நிலவுகின்றன. ஆகவே இந்த வரிசையில் அதிகமான படங்கள் வெளிவருவதில்லை. வந்தாலும் அவை முடங்கிப் போகும் ஆபத்து இருப்பதால் இதில் முதலீடு செய்யவே தயாரிப்பாளர்கள் தயங்குகிறார்கள் என்ற குற்றச்சாட்டு திரைத்துறைக்குள் நிலவி வருகிறது.

இந்நிலையில், ‘பயோபிக்’ படங்கள் குறித்து திரைத்துறை ஆய்வாளரும், தயாரிப்பாளருமான தனஞ்செயனிடன் பேசினோம். அவர் இதில் நிலவும் தடைகள் குறித்து சில கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். அவர், “பொதுவாக தலைவர்களைப் பற்றி பயோபிக் எடுப்பதற்கு யாருடைய அனுமதியும் தேவை கிடையாது. காந்தியைப் பற்றி நீங்கள் படம் எடுக்கலாம். நேதாஜி பற்றி படம் எடுக்கலாம். அதற்கு ஒரு அனுமதியும் தேவையில்லை. ஆனால் குடும்ப உறவுகள் இருக்கும் தலைவர்களைப் பற்றி எடுக்கும்போதுதான் சிக்கல் வருகிறது. ஏனென்றால் அவரைப் பற்றி ஏதாவது தவறாக வந்து விடுமோ என்று பயந்துதான் அதை எதிர்கிறார்கள்.

image

ஆனால், காமராஜரைப் பற்றி படம் எடுத்த போது யாரும் அதை எதிர்க்கவில்லை. எம்ஜிஆர் பற்றி எடுத்து வரும் நிலையில், அதனை யாரும் எதிர்க்கவில்லை. பெரியார் பற்றி படம் வந்ததே? பாரதி பற்றி படம் வந்ததே? ராமாநுஜர் பற்றியும் ஒரு படம் எடுக்கப்பட்டுள்ளது. ‘பயோபிக்’ படங்களுக்கு இங்கே மார்க்கெட் மிகக் குறைவு. பெரியார் படமே அரசாங்க ஆதரவில்தான் ஓடியது. பாரதி மட்டும்தான் வியாபார ரீதியாக ஓடியது. இங்கே இன்னும் நிறைய பேர் பற்றி படம் எடுக்கவேண்டி இருக்கிறது. எம்.ஆர்.ராதா பற்றி ஒரு படத்தை எடுக்க திரைக்கதையை தாயார் செய்து கொண்டு போய் நான் ராதிகாவை பார்த்தேன். அதற்குள் அதை இயக்குநர் ஐகே எடுப்பதாக சொன்னதால் விட்டுவிட்டோம். ஆக, இங்கு வியாபாரம்தான் பிரச்னை. என்னைப் பொறுத்தவரை ஒரு தலைவரைப் பற்றிய வரலாற்று படத்தை எடுப்பதற்கு அவரது குடும்பத்தை சார்ந்தவர்கள் தடைபோடுவதே தவறு. சிறப்பான முறையில்தான் காட்டப் போகிறார்கள். இந்தத் தடைகள் எல்லாம் வர அவர்களின் சொந்த தேவைகள்தான் காரணமாக இருக்கின்றன” என்கிறார்.

image

இதே துறையில் தொடர்ந்து பல ஆண்டுகளாக இயங்கி வருபவர் சினிமா ஆய்வாளர் அம்ஷன் குமார். பாரதி குறித்து 1999 ஆம் ஆண்டே ஆவணப் படத்தை எடுத்தவர். அவர் என்ன சொல்கிறார், “என்னைப் பொறுத்தவரை தமிழில் வந்த சிறந்த ‘பயோபிக்’ என்றால் அது ‘கப்பலோட்டிய தமிழன்’தான். பி.ஆர் பந்துலு அதை மிகச் சிறப்பாக எடுத்திருந்தார். வ.உ.சியுடன் வரலாற்றில் இருந்த அத்தனை தலைவர்களும் அந்தப் படத்தில் காட்டப்பட்டு விட்டார்கள். ஆனால் அது வியாபார ரீதியாக தோல்வியான திரைப்படம். அரசாங்க உதவிப் பெற்றுதான் அதை ஓட்ட வேண்டி இருந்தது.

தமிழில் பயோபிக் படங்களை நேர்மையாக எடுக்க முடியாது. பாதி பொய்தான் சொல்ல வேண்டி வரும். ஏனென்றால் இங்கே எல்லோரையும் புனிதப்படுத்தி வைத்துள்ளார்கள். ஆகவே, ஒரு தலைவரின் கதையை உண்மையாக சொல்ல முடிவதில்லை. நான் கூட பாரதி பற்றி ஒரு ஆவணப்படம் எடுத்தேன். அதில், அவர் போதைப் பழக்கம் உள்ளவர் என சொன்னேன். அவ்வளவுதான் பலரும் எதிர்க்க ஆரம்பித்து விட்டார்கள். இது எல்லாம் சேர்ந்தவர்தானே பாரதி. அப்படி என்றால் அதை எப்படி சொல்லாமல் விடமுடியும்?

image

ஆனால், ஆங்கில சினிமாவில் அப்படி இல்லை. எந்தத் தலைவரையும் விமர்சனப்பூர்வமாக எடுக்கலாம். வழிப்பாட்டு மனோபாவத்துடன் ஒரு வாழ்க்கை வரலாற்று படத்தை எடுக்க முடியாது. இங்கே விமர்சனத்துடன் ஒருவர் கதையை சொன்னால் அவ்வளவுதான் பெரிய பிரச்னைகள் வந்துவிடுகிறது” என்கிறார்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close