Published : 07,Jan 2020 10:24 AM

காதலியின் கழுத்தை அறுத்து கொன்ற காதலன் - சோகம் தாங்காமல் தற்கொலை

Lover-cut-his-girlfriend-s-neck-and-committed-suicide-in-kerala

தமிழக, கேரள எல்லை பகுதியில் காதலியின் கழுத்தை அறுத்து கொலைசெய்துவிட்டு காதலனும் தன் கழுத்தை அறுத்து கொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் காரக்கோணம் பகுதி உள்ளது. இந்தப் பகுதியானது தமிழக, கேரள எல்லையோர பகுதியாகும். இந்தப் பகுதியில் உள்ள புல்லம்தேரி பகுதியில் வசித்து வருபவர் ஆஷிகா (19). இவர் பியூட்ரிஷியன் பயிற்சி பெற்று வரும் ஒரு மாணவி ஆவார். ஆஷிகா அவரது ஊரின் அருகில் உள்ள ராமவர்மன் சிறை பகுதியை சேர்ந்த அனு (22) என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இவர்கள் இடையே சமீப காலமாக ஏதோ பிரச்னைகள் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் ஆஷிக்காவின் வீட்டுக்கு வந்த காதலர் வீட்டில் இருந்த ஆஷிகாவின் தாத்தா மற்றும் பாட்டியை தள்ளிவிட்டு வீட்டிற்குள் வந்துள்ளார். அவர் வருவதை பார்த்த அவரது காதலி விட்டிற்குள் உள்ள அறைக்குள் பதுங்க முயன்றுள்ளார்.

அதை அறிந்த அனு, அறைக்குள் வைத்தே ஆஷிகா கழுத்தை அறுத்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. அவரது காதலியை அவரே கொலை செய்ய நேர்ந்தது குறித்து வேதனைபட்ட அனு, உடனே செய்வது அறியாமல் தன்னுடைய கழுத்தையும் அறுத்து கொண்டதாக தெரிகிறது. அந்த நேரம் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர்.

அதைப் பார்த்து பொதுமக்கள் அந்த இருவரையும் காரக்கோணம் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துவிட்டு உடனே வெள்ளறடை காவல்நிலையத்திற்க்கு தகவலும் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து ஆஷிகா மட்டும் இறந்ததை மருத்துவர்கள் உறுதி செய்ததுடன் உயிருக்கு போராடிய காதலனை திருவனந்தபுரம் அரசுக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவரும் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இது குறித்து வெள்ளறடை காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்