Published : 26,May 2017 04:16 PM

அனில் கும்ப்ளேவுக்கு சரியான மாற்று இவர் தான்... ரிக்கி பாண்டிங் கணிப்பு

Rahul-Dravid-ideal-person-to-succeed-Anil-Kumble-as-Team-India-coach--feels-Ricky-Ponting

இந்திய அணியின் பயிற்சியாளரான அனில் கும்ப்ளேவுக்கு சரியான மாற்றாக இவர் தான் இருக்க முடியும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவரை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கணித்துள்ளார். 

அனில் கும்ப்ளேவின் பதவிக்காலம் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருடன் முடிவடைகிறது. பயிற்சியாளர் பதவியில் தொடர கும்ப்ளே விரும்பினாலும், ஊதிய உயர்வு தொடர்பான அவரின் கோரிக்கையால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய நிர்வாகம் அதிருப்தி அடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பிசிசிஐ தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. விமர்சனங்களைத் தவிர்ப்பதற்காக கும்ப்ளேவின் விண்ணப்பம் நேரடியாக ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தநிலையில் இந்திய அணியின் பயிற்சியாளரான கும்ப்ளேவுக்கு சரியான மாற்றாக ராகுல் டிராவிட் இருப்பார் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், பயிற்சியாளரைத் தேர்ந்தெடுப்பது என்னுடைய கையிலில்லை; அது பிசிசிஐயின் முடிவைப் பொறுத்தது. அவர்கள் உள்ளூரைச் சேர்ந்த பயிற்சியாளரை விரும்புகிறார்களா அல்லது வெளிநாட்டைச் சேர்ந்த பயிற்சியாளரை எதிர்பார்க்கிறார்களா என்பது தெரியவில்லை. அதேநேரம் பயிற்சியாளர் பணியை மேற்கொள்ள டிராவிட்டை விட சிறந்த நபரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் கண்டுபிடிக்க முடியும் என்று நான் நம்பவில்லை. அவரது அனுபவம் நிச்சயமாக இந்திய அணியின் இளம் வீரர்களுக்கு உதவும். பயிற்சியாளர் பணியை அவர் ஏற்றுக் கொண்டால், அதனை சிறப்பாக மேற்கொள்ள முடியும் என்று பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார். பத்தொன்பது வயதுக்குட்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக டிராவிட் செயல்பட்டு வருகிறார். 
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்