[X] Close

“குடிநீர் குழாய் இணைப்புகளில் மீட்டர்”- தமிழக அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவு

Meters-in-drinking-water-pipelines--MHC-ordered-TN-govt-to-take-action

தமிழகம் முழுவதும் குடிநீர் குழாய் இணைப்புகளில் மீட்டர் பொருத்தக் கோரிய மனுவை உற்றுநோக்கி, சாத்தியமான நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.


Advertisement

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்," பருவமழை பொய்த்ததன் காரணமாக தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் 1000 அடிக்கும் கீழே சென்று விட்டது. 2020ல் தமிழகம் மிகக்கடும் வறட்சியை சந்திக்கும் என நிதி ஆயோக் அறிக்கை அளித்துள்ளது. இந்த நிலைக்கு காரணம் தமிழக அரசே.


Advertisement

தண்ணீர் பற்றாக்குறை, வறட்சி குறித்து நன்கு அறிந்தும் தமிழகத்தில் உள்ள அணைகள் மற்றும் நீர்நிலைகளை தூர்வாரி அவற்றில் தேங்கியுள்ள களிமண் மற்றும் பிற கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த 50 ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் அணைகள் மற்றும் நீர்நிலைகளின் தேக்கப்பரப்பு குறைந்துள்ளது.  தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்துள்ள நிலையில், தண்ணீர் கிடைக்கும் பொதுமக்கள் அதனை சிக்கனமாக செலவு செய்வதில்லை. அதிகளவில் வீணடிக்கவும் செய்கின்றனர். ஒருபுறம் குடிநீர் கிடைக்காமல் மக்கள் சிரமப்பட, மறுபுறம் தேவைக்கு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

மிகக்கடும் வறட்சியை தமிழகம் சந்திக்கவுள்ளதாக பலரும் எச்சரித்து வரும் நிலையில் தண்ணீர் வீணாவதைத் தடுத்து, முறையான பயன்பாட்டை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுப்பது அவசியம். ஆகவே, ஒவ்வொரு வீட்டிலும் குடிநீர் பயன்பாட்டை கணக்கிட குடிநீர் குழாய் இணைப்புகளில் மீட்டர் பொருத்தி, பயன்பாட்டிற்கேற்ப கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். நெல்லை மாவட்டத்தில் இம்முறை வெற்றிகரமாக சில இடங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனை தமிழகம் முழுவதும் அமல்படுத்தக் கோரி மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. ஆகவே தமிழகம் முழுவதும் குடிநீர் குழாய் இணைப்புகளில் மீட்டர் பொருத்த உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.


Advertisement

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு, மனுதாரரின் மனுவை உற்றுநோக்கி, சாத்தியமான நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.


Advertisement

Advertisement
[X] Close