Published : 09,May 2017 10:29 AM
உள்ளாடையை கழட்ட சொன்ன 4 ஆசிரியைகள் பணியிடை நீக்கம்

கேரளாவில் நீட் தேர்வு எழுத சென்ற மாணவியின் உள்ளாடையை கழற்ற சொன்னதால் சர்ச்சை ஏற்பட்ட நிலையில், இதுதொடர்பாக 4 ஆசிரியைகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு 7-ஆம் தேதி நடைபெற்றது. இதனை எழுத வந்த மாணவ-மாணவியர்களுக்கு பல்வேறு கெடுபிடிகள் விதிக்கப்பட்டன. மாணவிகள் தோடு, கம்மல் அணிந்துசெல்லக் கூடாது, மாணவர்கள் முழு கை சட்டை அணியக்கூடாது போன்ற கெடுபிடிகளால் தேர்வு எழுத செல்லும் முன் பல மாணவ-மாணவிகள் தமிழகத்தில் பெரும் இன்னலுக்கு ஆளாகினர். கேளராவில் ஒரு படி மேலாக, நீட் தேர்வு எழுத சென்ற மாணவியின் உள்ளாடையை கழற்ற சொன்னது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்களில் இதற்கு எதிராக பலரும் குரல் கொடுத்தனர். இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கேரள சட்டமன்றத்திலும் இந்தச் சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் மாணவியின் உள்ளாடையை கழற்ற சொன்ன விவகாரத்தில் கோவப்புரத்தில் உள்ள டிஐஎஸ்கே ஆங்கிலப் பள்ளியை சேர்ந்த ஷிஜா, ஷபீனா, பிந்து, ஷகினா ஆகிய நான்கு ஆசிரியைகளும் ஒரு மாதத்திற்கு இடைநீக்கம் செய்யப்படுவதாக பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.