Published : 16,May 2019 07:54 AM
மருமகளை பாலியல் வன்கொடுமை செய்த மாமனார் : மருமகள் தற்கொலை

கிருஷ்ணகிரி அருகே மருமகளை மாமனார் பாலியல் வன்கொடுமை செய்த கொடுமை. விஷம்குடித்து மருமகள் தற்கொலை.
கிருஷ்ணகிரி அருகே அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் சந்தியா-கண்ணன் தம்பதியினர். இவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமண முடிந்து, இரண்டு குழந்தைகள் உள்ளது. அந்த சூழலில் கண்ணனின் மனைவி சந்தியாவிடம், அவரது மாமனார் முருகன் அவ்வபோது தவறாக நடந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சந்தியா, இது தொடர்பாக தனது கணவர் மற்றும் மாமியாரிடம் தெரிவித்துள்ளார். அப்போது, “இது எல்லாம் சகஜம்” என்று சொல்லி அனுசரிக்குமாறு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சந்தியா, கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும், நாகரசம்பட்டி காவல் நிலையத்திலும் மாமனார் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். ஆனால் அப்புகார்களின் மீது போலீசார் உரிய விசாரணை நடத்தவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன் வீட்டில் தனியே இருந்த மருமகள் சந்தியாவை மாமனார் முருகன் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும்,இது தொடர்பாக ஊர் பஞ்சாயத்தில் புகார் அளித்ததாகவும், அதற்க்கு ஊரில் உள்ளவர்கள் அலட்சியமாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மிகுந்த வேதனை அடைந்த சந்தியா, தனது தந்தை வீட்டிற்கு வந்து, முருகன் தன்னிடம் நடந்து கொண்ட விதம் குறித்து கூறியுள்ளார். பின்னர் வீட்டில் யாரும் இல்லாத போது கதவை பூட்டிக்கொண்டு சானிபவுடர் விஷத்தை அருந்தி சந்தியா தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனனையறிந்த அவரது பெற்றோர் உடனடியாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சந்தியாவை அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சந்தியா ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைதொடர்ந்து சந்தியாவின் பெற்றோர் நடந்த சம்பவத்தை கொண்டு சந்தியாவின் கணவர், மாமனார், மாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.