Published : 01,May 2017 11:19 AM

ராஜீவ் காந்தி கொலை வழக்கின் கூடுதல் விசாரணை: சிபிஐ அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

Rajiv-Gandhi-case--SC-ordered-to-cbi-file-report

ராஜீவ் காந்தி கொலை வழக்கின் கூடுதல் விசாரணை தொடர்பாக நான்கு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐ-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு ஏற்கனவே தண்டனை அளிக்கப்பட்டு விட்டது. இருப்பினும் ஜெயின் கமிஷன் அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் தகவல்களின் அடிப்படையில் கூடுதல் விசாரணை நடத்த வேண்டும் என்று 16 ஆண்டுகளுக்கு முன்பு சிபிஐ வைத்த கோரிக்கைக்கு நீதிமன்றம் அனுமதியளித்திருந்தது.

அதையடுத்து, கடந்த 16 ஆண்டுகளாக சிபிஐ தரப்பில் விசாரணை தொடர்ந்த நிலையில், என்ன கண்டுபிடிக்கப்ப‌ட்டது என்பதை தெரியப்படுத்தக்கோரி பேரறிவாளன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள், ரஞ்சன் கோகோய் மற்றும் நவீன் சின்ஹா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சிபிஐ வழக்கறிஞரிடம், ராஜீவ் காந்தி கொலை வழக்கின் கூடுதல் விசாரணையில் என்ன கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என நீதிபதி வினவினார். அதற்கு, இந்த வழக்கில் வெளிநாட்டவருக்கும் தொடர்பு இருக்கும் எனச் சந்தேகம் இருப்பதாகவும், அந்த நாட்டின் அனுமதி பெற்றே விசாரணை நடத்த இயலும் என்பதால் விசாரணையை வேகமாக நடத்த முடியவில்லை என சிபிஐ வழக்கறிஞர் தெரிவித்தார்

அதை கேட்ட நீதிபதிகள், 16 ஆண்டுகளாக சிபிஐ தரப்பில் என்ன கண்டுபிடிக்கப்பட்டது, எப்போது வழக்கும் முடியும் என்பது குறித்த விவரங்களை 4 வாரங்களுக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்