“ மத்திய பட்ஜெட் பாஜகவின் தேர்தல் அறிக்கைதான் ” - தம்பிதுரை

“ மத்திய பட்ஜெட் பாஜகவின் தேர்தல் அறிக்கைதான் ” - தம்பிதுரை
“ மத்திய பட்ஜெட் பாஜகவின் தேர்தல் அறிக்கைதான் ” -  தம்பிதுரை

மத்திய பட்ஜெட்டில் அறிவித்திருக்கும் அறிவிப்புகள் பாஜகவின் தேர்தல் அறிவிப்புகள்தான் என அதிமுக எம்.பி தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தம்பிதுரை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பேசிய அவர், “வருமான வரிக்கு 5 லட்சம் வரை விலக்கு தந்திருப்பது போதாது. பல்வேறு திட்டங்களை விவசாயிகளுக்கு அறிவித்துள்ளனர். குறிப்பாக, 5 ஏக்கர் வைத்திருப்பவர்களுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் தருவதாக மத்திய அரசு அறிவித்திருப்பது போதாது. 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி அறிவித்திருக்கலாம். பட்ஜெட் அறிவிப்புகளில் சிலவற்றை ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தாலும் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள முடியாது. 

இதுவரை மத்திய அரசு எந்த நல்லதும் தமிழகத்திற்கு செய்யவில்லை. கஜா புயல் பாதிப்புக்கு இன்னும் நிவாரணம் வந்து சேரவில்லை. ஜி.எஸ்.டியில் 5 ஆயிரம் கோடி நிலுவையில் உள்ளது. பல்வேறு துறைகளின் நிலுவைத்தொகையாக சுமார் 9 ஆயிரம் கோடி உள்ளது. நீட் தேர்வில் தமிழகம் பாதிக்கப்பட்டுள்ளது. மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுகிறது. இன்னும் மீனவர்கள் பிரச்னை இருக்கிறது. மேகதாது அணை கட்டக்கூடாது என கூறிவருகிறோம். முல்லை பெரியாரில் மீண்டும் அணை கட்ட மத்திய அரசு பரிசீலனை செய்து கொண்டிருக்கிறது. இதையெல்லாம் யோசனை செய்து தான் தமிழகத்திற்கு யார் நல்லது செய்கிறார்களோ அவர்களுடன் கூட்டணி என்று அதிமுக கூறியுள்ளது.

5 ஆண்டு காலம் பாஜக அரசு பல்வேறு பட்ஜெட்டுகளை சமர்ப்பித்தது. அதில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டது. ஆனால் தற்போது அறிவித்திருக்கும் அறிவிப்புகள் பாஜகவின் தேர்தல் அறிவிப்புகள். பொன்.ராதாகிருஷ்ணன் யாருடன் கூட்டணி சேர விரும்புகிறார் என தெரியவில்லை. தமிழகத்திற்கு யார் நல்லது செய்கிறார்களோ அவர்களுடன் கூட்டணி என முதலமைச்சர் தெளிவாக சொல்லியுள்ளார். தமிழகத்திற்கு செய்யப் போகும் நல்லது என்னவென்று தேசிய கட்சிகள் சொல்லட்டும். பிறகு ஆலோசிப்போம்.” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com