Published : 27,Jan 2019 04:32 AM
“மதுரை நிகழ்ச்சி அரசியல் திருப்புமுனையாக அமையும்” : பொன்.ராதாகிருஷ்ணன்

மதுரையில் பிரதமர் தலைமையில் நடைபெறும் பொதுக்கூட்ட நிகழ்ச்சி அரசியல் திருப்புமுனையாக அமையும் என்றும் வரும் மக்களவை தேர்தலில் கடந்த தேர்தலை விட அதிக இடங்களை பாஜக கைப்பற்றும் எனவும் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைகிறது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடக்கிறது. இதற்காக, பிரதமர் மோடி, காலை 8 மணிக்கு டெல்லியில் இருந்து விமானப் படையின் தனி விமானமான ஐ.என்.எஸ் கருடா மூலம் புறப்பட்டு 11.15 மணிக்கு மதுரை விமானநிலையம் வந்தடைகிறார். இதையடுத்து சுற்றுவட்டச்சாலை வழியாக வரும் பிரதமர் மோடி, 11.30 மணிக்கு மண்டோலா நகர் திடலில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல்லை நாட்டுகிறார். இதனைதொடர்ந்து பகல் 12 மணியளவில் பாரதிய ஜனதா கட்சி பொதுகூட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று தொண்டர்கள் மத்தியில் உரையாற்றுகின்றார்.
இந்நிலையில் மதுரையில் பாரத பிரதமர் பங்கேற்கும் பொதுகூட்டத்தில் தமிழகத்தின் தென் பகுதியில் இருந்து லட்சகணக்கன மக்கள் கலந்து கொள்ள உள்ளனர் என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். பிரதமர் தலைமையில் நடைபெறும் பொதுக்கூட்ட நிகழ்ச்சி அரசியல் திருப்புமுனையாக அமையும் என்றும் வரும் மக்களவை தேர்தலில் கடந்த தேர்தலை விட அதிக இடங்களை பாஜக கைப்பற்றும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவித்த பின்னர் போதிய வரவேற்ப்பு இல்லாததால், பிரியங்காகாந்திக்கு கட்சி பதவி வழங்கப்பட்டுள்ளது.ராகுல்காந்தி பலவீனமானவர், காங்கிரஸ் கட்சி எவ்வளவு பலவீனம் ஆகியுள்ளது என்பதை இது காட்டுகின்றது என்று அவர் விமர்சனம் செய்தார்.