Published : 08,Jan 2019 12:20 PM

ஜல்லிக்கட்டு காளைக்கு மணிமண்டபம் - 13 ஆண்டுகளாக வழிபடும் கிராம மக்கள்

Jallikattu-has-been-set-up-by-a-village-for-more-than-12-years-by-setting-up-the-manimandabam

மதுரை அருகே ஜல்லிக்கட்டு காளைக்கு மணிமண்டபம் அமைத்து 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு கிராமம் மரியாதை செலுத்திவருகிறது.

வீரத்திற்கும் பாசத்திற்கும் அடையாளமாக கருதப்படுபவை ஜல்லிக்கட்டு காளைகள். அந்த வகையில் 13 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த ஜல்லிக்கட்டு காளைக்கு மணிமண்டபம் கட்டி தெய்வமாக வழிபட்டு வருகின்றனர் பொந்துகம்பட்டி கிராம மக்கள்.

மதுரை மாவட்டம் பொந்துகம்பட்டி கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் முத்தாலம்மன் கோயிலில் காளை ஒன்று வளர்க்கப்பட்டுள்ளது. அந்தக் காளை அன்றைய காலத்தில் கலந்து கொண்ட பல ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றிகளை குவித்து பரிசுகளை பெற்றுள்ளது.

வாடிவாசலில் அனைவரையும் அச்சுறுத்தும் காளை கிராம மக்களிடம் சிறு பிள்ளையை போன்று பழகியுள்ளது. அதனால் அந்தக் காளை மீது அன்பை கொட்டி வளர்த்தனர் இந்தக் கிராம மக்கள். இந்நிலையில் வயது முதிர்வினால் கடந்த 2005 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி இந்தக் காளை உயிரிழந்தது. ஒரு மனிதன் உயிரிழந்தால் எப்படி அடக்கம் செய்யப்படுவாரோ அவ்வாறே இந்தக் காளையும் அடக்கம் செய்யப்பட்டது. இந்தக் காளையின் மீது கட்டுக்கடங்கா அன்பு வைத்த மக்கள், காளையை புதைத்த இடத்தில் மணிமண்டபம் கட்டி ஆண்டதோறும் நினைவுநாளில் ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்கி வழிபட்டு வருகின்றனர். 

காளைக்காக கட்டப்பட்டுள்ள மணிமண்டபம் சேதமடைந்துள்ள நிலையில் தமிழக அரசு அதனை சீரமைத்து தர வேண்டும் என்பது அம்மக்களின் கோரிக்கையாக உள்ளது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்