[X] Close

சிறுத்தை ஊருக்குள் புகும் பிரச்னைக்கு தீர்வுதான் என்ன ?

How-to-solve-the-Leopard---Human-Conflict--

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் ஈரோட்டிலும் சிறுத்தைகள் ஊருக்கு புகுந்துள்ளதால் ஒட்டுமொத்த கிராமம் அச்சத்தில் உறைந்துள்ளது. மேலும், சிறுத்தைகளை கூண்டு வைத்து பிடிப்பதற்கான நடவடிக்கையை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் வேலூர் மாவட்டம் சிக்கனாங்குப்பம் கிராமத்தில் விவசாயிகள் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது  பாரதி என்பவரை சிறுத்தை தாக்கியது. அத்துடன் அவரைக் காப்பாற்ற சென்ற அலுமேலு அம்மாள் என்பவரையும் சிறுத்தை தாக்கியது. இதனால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட, அருகில் உள்ள கரும்பு தோட்டத்தில் சிறுத்தை பதுங்கிக்கொண்டது. சிறுத்தை இருப்பதை அறிந்த மக்கள் அதனை பார்க்க அதிக அளவில் குவிந்தனர். அப்போது பதுங்கியிருந்த சிறுத்தை திடீரென வேகத்துடன் வெளியே வந்து, வேடிக்கைப் பார்த்த மக்களை விரட்டி சென்று கடுமையாக தாக்கியது. இதனால் சிறுத்தையை பிடிக்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொள்கின்றனர்.


Advertisement

சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்தாலும் மீண்டும் அதே இடத்துக்குதான் வரும் என்று காட்டுயிர் ஆர்வலர்கள் கருதுகின்றனர். சிறுத்தை தாக்குதல் காரணமாக உயிர் சேதம் ஏற்படுகிறது. அதிலும் சில நேரங்களில் குழந்தைகளை சிறுத்தைகள் தாக்குவதால் மக்களின் கோபம் அதிகமாகும். அதன் காரணமாக வனத்துறையினரிடம் முறையிட்டு சிறுத்தையை பிடிக்க வற்புறுத்துகின்றனர். இதனையடுத்து சிறுத்தையை பிடித்து வேறு இடத்தில் கொண்டுபோய் விடுகின்றனர். ஆனால் இவ்வாறு செய்வதால் பிரச்னை அதிகரிக்குமே தவர முடிவு பெறாது. 


Advertisement

சிறுத்தை பிரச்னைக்கு தீர்வுதான் என்ன ?

இது வனத்துறை சம்பந்தப்பட்ட பிரச்சனை மட்டும் இல்லை. பல அரசுத்துறைகள் கூட்டாக செயல்பட்டால்தான் இதற்கு நிரந்தரத்தீர்வு காணமுடியும் என்று சொல்கிறார் காட்டுயிர் ஆராய்ச்சியாளர் ப.ஜெகன்நாதன். இது குறித்து விளக்கமாக பேசிய அவர் "சிறுத்தை தாக்குதலுக்குட்பட்ட பகுதிகளில் சிறுத்தைகளின் பண்புகள், நடமாட்டம் அதன் முக்கிய இரை விலங்குகளின் எண்ணிக்கை குறித்த ஆராய்ச்சிகள் ஊக்குவிக்கப்படவேண்டும். ஒரு வேளை சிறுத்தையை பிடிக்க நேரிடின் அவற்றிற்கு காயம் ஏற்படாத வண்ணம் சிறந்த முறையில் கையாள, வனத்துறையினர், கால்நடை மற்றும் வனஉயிர் மருத்துவர்களுக்கு தகுந்த பயிற்சியளிக்கப்டவேண்டும்" என்கிறார் அவர். 


Advertisement

மேலும் தொடர்ந்த ஜெகன்நாதன் "வெகுஜன ஊடகங்கள் சிறுத்தைகளை, மக்களை கொல்ல வந்த கொடூர மிருகமாக சித்தரித்து மிகைப்படுத்தாமல்,  பிரச்சனையை உணர்ந்து பொறுப்புடன் செய்தியை வெளியிடவேண்டும். சிறுத்தைகள் நடமாடும் பகுதிகளில் வாழும் மக்களுக்கும் தகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். இயற்கை பாதுகாப்பு மற்றும் காட்டுயிர் ஆராய்ச்சியில் ஈடுபடும் அரசு சாரா நிறுவனங்கள் இதில் பெரும்பங்கு வகிக்கவேண்டும். இவையனைத்தையும் கடைபிடித்தலே சிறுத்தை மனிதர்கள் மோதலை கட்டுப்படுத்த சிறந்த வழியாகும்" என்கிறார் அவர்.

அப்போது சிறுத்தையை பிடிக்கவே கூடாதா ? 

மனிதர்களை மட்டுமே தொடர்ந்து குறிபார்த்து தாக்கும் சிறுத்தையை பிடிப்பதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் கால்நடையையோ, எதிர்பாராவிதமாக மனிதர்களைத் தாக்கும் சிறுத்தைகளை பிடிப்பதும், சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரிந்த உடனேயே அதை கூண்டு வைத்துப் பிடிப்பதும் தவிர்க்கப்பட வேண்டும் என விவரிக்கிறார்  ஜெகன்நாதன். ஏனெனில் பிரச்சனைக்கு  சிறுத்தை மட்டுமே காரணமாகாது. பிரச்சனை உள்ள இடத்தின் சூழலும் காரணமாக இருக்கலாம். சிறுத்தை - மனிதர் மோதல் உள்ள பகுதிகளில் தெருநாய்களை ஒடுக்கியும், மாமிச மற்றும் மருத்துவ கழிவுளை உடனுக்குடன் அகற்றியும், கால்நடைகளை பாதுகாப்பான இடத்தில் வைப்பதன் மூலமாகவும், சிறுத்தைகளினால் ஏற்படும் பாதிப்புகளை வெகுவாக குறைக்கமுடியும். இவ்வாறு செய்வதன் மூலமாகவே, இப்பிரச்சனைக்கு நீண்டகால தீர்வைக் காணமுடியும் என்கிறார் அவர். 


Advertisement

Advertisement
[X] Close