Published : 27,Dec 2018 08:16 AM
இந்திய வம்சாவளி போலீஸ் அதிகாரி அமெரிக்காவில் சுட்டுக்கொலை!

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி போலீஸ் அதிகாரி அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியில் வசித்துவந்தவர் ரோனில் சிங். இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான இவர், பிஜி தீவில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர். இவருக்கு அனாமிகா என்ற மனைவியும் ஐந்து வயது மகனும் உள்ளனர்.
நியூமானில் போலீஸ் அதிகாரியாக கடந்த 7 வருடங்களாக பணியாற்றி வந்த ரோனில் சிங், கிறிஸ்துமஸ் அன்று இரவில் ஓவர் டைமாக வேலை பார்த்து வந்தார். சாலை போக்குவரத்தை கவனித்து வந்த அவரை இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர், துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிவிட்டார்.
ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை உடனடியாக அருகில் இருந்தவர்கள், மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
’குற்றவாளியை நெருங்கிவிட்டோம். விரைவில் கைது செய்துவிடுவோம்’ என்று போலீசார் தெரிவித்துள்ளனர். ரோனில் சிங்கின் மறைவை அடுத்து போலீஸ் அதிகாரிகள், ஆளுநர் உட்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.