Published : 20,Dec 2018 02:36 PM

விஷால் வழங்கிய வாக்குறுதிகளும் நடத்திய போராட்டங்களும் 

Special-article-about-actor-vishal

மறுபடியும் அரசியல் புயல் நடிகர் விஷாலை மையம் கொண்டுள்ளது. அதிரடியாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆர்.கே.நகரில் அவரது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டப்போது அடுத்து என்ன? என்ற பரபரப்பு வலம்வர ஆரம்பித்தது. அதாவது நடிகர் சங்க பிரச்னையில் அதிகப்படியான ஆதரவை ஈட்டிய விஷால், யாரும் எதிர்பார்க்காத தருணத்தில் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். 

அப்போது ஒரே ஆளுக்கு இரண்டு பதவிகள் குறித்து சர்ச்சைகள் எழுந்தன. நடிகர் சங்கத்தில் உள்ள பிரச்னையை முடிக்க வேண்டும் என்றால் தயாரிப்பாளர் சங்க ஒத்துழைப்புத் தேவை ஆகவே அந்தத் தேர்தலில் நிற்கிறேன் என விளக்கம் கொடுத்தார் விஷால். அப்புறம் இந்தச் சங்கத்தில் பொறுப்பில் இருந்தபடியே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்குத் தாவினார்.

பல ஆண்டுகளாக தென் இந்திய நடிகர் சங்கத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் ராதாரவி. மேலும் அவரது நண்பர் நடிகர் சரத்குமார். இந்த இருவரையும் பொறுப்பில் இருந்து கீழே இறக்குவது அவ்வளவு எளிதல்ல என்று பலரும் கருத்து கூறிக் கொண்டிருந்தபோது புதிய இளைஞர் படையோடு உள்ளே புகுந்த விஷால், வெறித்தனமான வெற்றியை சம்பாதித்தார். ‘நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பிறகுதான் கல்யாணம்’என அவர் தந்த வாக்குறுதியை பலரும் உண்மையாக நம்பினர். ஆனால் ஆண்டுகள் போகப் போக அவரது வாக்குறுதி மட்டும்தான் கண் முன்பாக நின்றது. கட்டிடம் மேலெழுந்து நிற்கவே இல்லை. அதன் பிறகு அவரைச் சுற்றி அரசியல் கனவுகள் முளைக்க தொடங்கிவிட்டன என்று பலர் விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.  

அரசியல் கட்சிகளின் தேர்தலை போல பரபரப்பாக நடந்தது நடிகர் சங்கத்தேர்தல். நீதிமன்றம் வரை சென்று முறையாக தேர்தல் அதிகாரிகளை பெற்று அந்தத் தேர்தல் நடத்தப்பட்டவிதம் பலரையும் விஷால் பக்கம் திரும்பச் செய்தது.  நடிகர் சங்கத்தில் பொறுப்பில் இருந்த சரத்குமார், ராதாரவி ஆகியோர் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து முன்னேறிய விஷால் அதிரடியாக பொறுப்பிற்கு வந்தார் என்பது பலரும் அறிந்தது. ஆகவேதான் அவர் தொடங்கி பாண்டவர் அணி பெரிய அதிர்வை சினிமா உலகத்தில் உருவாக்கியது. நடிகர் சங்கத்தேர்தல் வெற்றிக்குப் பிறகு சங்க கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா பரபரப்பாக நடந்தது. ஆனால் அதன் பிறகு அவரது கவனம் கட்டிடத்தில் இல்லை. தயாரிப்பாளர் சங்கத்தின் பக்கம் திருப்பியது.

திருட்டு விசிடி உள்ளிட்ட பல விவகாரங்களில் தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்ற குற்றம்சாட்டை முன்வைத்த இவர், தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் போண்டா, பஜ்ஜி சாப்பிட்டு நேரத்தைக் கடத்துகிறார்கள் என்றார். விஷால் நடவடிக்கைகளை கண்டித்து அவரை சங்கத்தில் இருந்து நீக்கியனர் தயாரிப்பாளர் சங்க பழைய நிர்வாகிகள். அந்தக் கோபம் விஷாலை புதிய மன்னர்கள் எனும் புதிய பெயருடன் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் களம் காணச் செய்தது. இங்கும் அவருக்கு பெரிய வெற்றி. மீண்டும் “இளைஞர்கள் வெற்றி பெற்றிருக்கிறோம். திருட்டு விசிடி, ஆன்லைன் பைரைசி, தமிழ் ராக்கர்ஸ் ஆகியோருக்கு இப்போது சொல்கிறேன். நாங்கள் ஜெயித்து விட்டோம், இப்போது வந்து பாருங்கள்”என்று வாக்குறுதி வழங்கினார். 


 
இப்படித் திரையுலகின் இரண்டு முக்கிய சங்க பொறுப்புக்களை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார் விஷால். நடிகர் சங்க கட்டிடம், திருட்டு விசிடி, ஆன்லைன் பைரைசி, சிறு பட்ஜெட் திரைப்படங்களுக்கு தியேட்டர் கிடைக்காமல் போவது உள்ளிட்ட பல பிரச்னைகள் விஷாலுக்கு முன் இப்போதும் சவாலாக நிற்கிறது.  

இந்த இரு சங்கங்கள் போக, கடந்த ஆகஸ்ட் மாதம் ‘மக்கள் நல இயக்கம்’ என்ற பெயரில் புதிய அமைப்பை தொடங்கி இருக்கிறார் விஷால். அதனைத் தொடர்ந்து புதியகொடி ஒன்றையும் அறிமுகப்படுத்தினார். அப்போது பேசிய அவர், “நடிகனாக சம்பாதித்துவிட்டு குடும்பத்துடன் இருக்க முடியாது. வீதியில் நடக்கும் விஷயங்களைப் பார்த்துவிட்டு சும்மா இருக்க முடியாது. அப்படி இருந்தால் பிணத்திற்கு சமம் என்று அதிரடியாக பேசினார். இது அரசியலை நோக்கி செல்லும் இயக்கமல்ல; அணியாய் சேர்ந்து அன்பை விதைக்கவே இந்த இயக்கம்” என்றும் தெரிவித்தார். 

இப்படி இதுவரை பல வாக்குறுதிகளை வழங்கியுள்ள விஷால், எதையும் நிறைவேற்றவே இல்லை என்பதே பலரது குற்றச்சாட்டு. தயாரிப்பாளர் சங்கத்தில் 7 கோடி ரூபாய் வைப்புநிதி கையாடல் செய்யப்பட்டிருக்கிறது என்றும் இப்போது புதிய புகார் விஷால் மீது விழுந்துள்ளது. 

இந்நிலையில் எதிர் அணியினர் நேற்று தயாரிப்பாளர் சங்கத்திற்கு போட்ட பூட்டை உடைக்க வந்த விஷால் தரப்புக்கும், போலீசாருக்கும் இடையே இன்று காலை வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது விஷால் கைது செய்யப்பட்டார். அவர் மீது சட்டவிரோதமாகக் கூடுதல், தகராறில் ஈடுபட்டு அமைதியை குலைத்தல் ஆகிய 2 பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப்பதிவும் செய்துள்ளனர். இன்று காலையில் தொடங்கிய இந்தப் போராட்டம் இன்று மாலை வரை தொடர்ந்தது. இந்நிலையில் இப்போது விடுவிக்கப்பட்டுள்ளார் விஷால். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்